sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

தலையங்கம்

/

வயநாடு நிலச்சரிவு துயரம் மற்ற மாநிலங்களுக்கு பாடம்

/

வயநாடு நிலச்சரிவு துயரம் மற்ற மாநிலங்களுக்கு பாடம்

வயநாடு நிலச்சரிவு துயரம் மற்ற மாநிலங்களுக்கு பாடம்

வயநாடு நிலச்சரிவு துயரம் மற்ற மாநிலங்களுக்கு பாடம்


PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடவுளின் தேசம் என அழைக்கப்படுவது கேரள மாநிலம். இம்மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த, 30ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இதுவரை இல்லாத வகையில் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. நேற்று வரை, 350க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சில கிராமங்களும், அங்கிருந்த வீடுகளும், பள்ளிகளும், மற்ற கட்டடங்களும், சாலைகளும், பாலங்களும் சிதைந்து விட்டன.

சுற்றுலா பயணியரின் சொர்க்கமாக கருதப்பட்ட வயநாட்டின் சில பகுதிகள், மலையில் உருவான சுனாமியால், சில மணி நேரங்களில் சுடுகாடாக மாறி விட்டன. விரிவான மீட்புப் பணிகள் காரணமாக, 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் சில நாட்கள் தொடர்ந்தாலும், உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கு தேவையானவற்றை ஏற்படுத்தி தருவது என்பது நீண்ட நாட்கள் தொடரும். அது, மாநில அரசுக்கு சவாலான விஷயமாகவும் இருக்கும். நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டு, மண் குவியலாக மாறிய பகுதிகளை மறுகட்டமைக்கவும், பெரிய அளவிலான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. கனமழை மற்றும் நிலச்சரிவால், 2018லும், பெரும் துயரத்தை எதிர்கொண்டது. அத்துடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தேசிய ரிமோட் சென்சிங் மையம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் தொடர்பான வரைபடம் ஒன்றை கடந்த ஆண்டு வெளியிட்டது.

அதில், இந்தியாவில் நிலச்சரிவால் பாதிக்கப்படும் பகுதிகள் உள்ள 30 மாவட்டங்களில், 10 மாவட்டங்கள் கேரளாவில் உள்ளன; நிலச்சரிவு பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகள் பட்டியலில், வயநாடு, 13வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 2021ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலும், கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் குறிப்பாக, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் நிலச்சரிவால் பாதிக்கும் அபாயம் உள்ள பகுதிகள் என, கூறப்பட்டு இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த உடனே, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அந்த எச்சரிக்கை கடிதத்தை, கேரளத்தின் கம்யூனிஸ்ட் அரசு கவனத்தில் கொள்ளாமல் விட்டதும், பெரும் துயரம் நிகழ காரணமாக அமைந்து விட்டது.

பேரிடர் மேலாண்மையை கையாள்வதில், நம் நாட்டில் சமீபத்திய சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை போதுமானதல்ல; இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்பதை, வயநாடு துயரம் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புவியியல் ரீதியாக சிக்கலான பகுதிகளில், சுற்றுலாவை மேம்படுத்தும் போதும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் போதும், இஷ்டத்திற்கு அந்தப் பணிகள் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில், நிபுணர்களின் எச்சரிக்கையை, மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும், உள்ளூர்வாசிகளும் காது கொடுத்து கேட்க வேண்டும்.

காடுகள் அழிப்பு, ஆக்கிரமிப்பு, கட்டுமானம் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு அபாயம் உருவாகி இருப்பதாக, 2011ல், காட்கில் கமிஷன் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், தற்போது வயநாட்டில் நடந்தது போன்ற துயரங்கள் நிகழலாம் என்றும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருந்தது.

அந்த யோசனைகளும், அதன்பின் அரசால் நியமிக்கப்பட்ட கஸ்துாரி ரங்கன் கமிட்டி சமர்ப்பித்த பரிந்துரைகளும் அமல்படுத்தப்படாததே தற்போதைய துயரத்திற்கு காரணம். இனியாவது, நிபுணர்களின் ஆலோசனைகளை, அரசியல் காரணங்களுக்காக புறந்தள்ளாமல் இருந்தால் நல்லது.

அதே நேரத்தில், இந்த நிலச்சரிவு துயரத்தில் இருந்து, பொதுமக்களும், கேரள மாநில அரசு மட்டுமின்றி, மற்ற மாநில அரசுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

***






      Dinamalar
      Follow us