தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/‘அக்னிபாத்’ திட்டத்தில் திருத்தம் முப்படை வீரர்கள் நிம்மதி!

‘அக்னிபாத்’ திட்டத்தில் திருத்தம் முப்படை வீரர்கள் நிம்மதி!

‘அக்னிபாத்’ திட்டத்தில் திருத்தம் முப்படை வீரர்கள் நிம்மதி!


PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் இளைஞர்களை பணியமர்த்தும் நோக்கில், ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2022 செப்டம்பரில் அமல்படுத்தியது.

இத்திட்டப்படி, 17.5 முதல், 21 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும், நான்கு ஆண்டுகளுக்கு முப்படைகளில் பணியமர்த்தப்படு கின்றனர். இவர்கள், ‘அக்னி வீரர்’கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் பணிக்காலம் நான்கு ஆண்டுகள். பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரர்களில், 25 சதவீதம் பேர், திறன் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் நிரந்தரமாக பணியமர்த்தப்படு வர்.

தேர்வாகாத, 75 சதவீதம் பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில், மத்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, நான்காண்டு பணிக்காலத்தை நிறைவு செய்து, நிரந்தர பணி பெறாத, 75 சதவீத அக்னி வீரர்களுக்கு, மேலும் இ ரண்டு ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பணி நீட்டிப்பு பெறுபவர்கள், குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்து, தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு வழங்கப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவு, அக்னி வீரர்களில் முதல் பிரிவினர் வெளியேற இருந்த நிலையில் அமலுக்கு வந்துள்ளது. அக்னிபாத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, பல்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றமானது, அரசியல் சார்ந்தது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஏற்கனவே, ஓய்வு பெற்ற மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர், அக்னிபாத் திட்டத்தை விமர்சித்து வந்தாலும், ‘இந்தத் திட்டம் சிறப்பானது’ என, மத்திய அரசு விளக்கம் அளித்து வந்தது. அத்துடன், ‘இத்திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும்’ என்றும் கூறி வந்தது.

இதன்படி, தற்போது மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, அக்னி வீரர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், தேர்தல் நடைபெற உள்ள ஏழு மாநிலங்களில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் அக்னி வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர்களை பணி நீக்கம் செய்தால், அந்த நான்கு மாநில தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அம்மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை திருப்திபடுத்தும் வகையிலேயே, திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

முப்படைகளில் பணியாற்றும் வீரர்களின் சராசரி வயதை குறைத்து, படைகளை எப்போதும் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வேண்டும்; தொழில்நுட்ப திறன் உடைய வீரர்களை உருவாக்க வேண்டும். நவீன போர் முறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எளிதில் கையாளக்கூடிய இளம் தலைமுறையினரை ராணுவத்தில் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அக்னிபாத் திட்டம் துவக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்கு மாறாக, தற்போது திருத்தங்கள் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.

அதேநேரம், சமீபத்திய மாற்றங்கள் முப்படை வீரர்களின் பணிக்கால நீட்டிப்பு மற்றும் நிரந்தர பணிக்கான வாய்ப்பை அதிகரிப்பதால் பலரால் வரவேற்கப்படுகிறது. இருப்பினும், இந்த திருத்தமானது திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மாற்றுவதாகவும், பணி நிச்சயமற்ற தன்மையை முழுமையாக நீக்கவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களை யோசனையாக ஏற்று, மத்திய அரசு மேலும் மாற்றங்கள் கொண்டு வந்தால் நல்லதே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us