மோடி - திசநாயகே சந்திப்பால் புத்துயிர் பெற்ற இரு நாட்டு உறவு
மோடி - திசநாயகே சந்திப்பால் புத்துயிர் பெற்ற இரு நாட்டு உறவு
PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

கடந்த செப்டம்பரில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே, மூன்று நாள் அரசு முறைப்பயணமாக சமீபத்தில் புதுடில்லி வந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இலங்கையில் சில ஆண்டுகளாக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்கள் நிலவி வந்தன. திசநாயகே அதிபரான பின், அவற்றை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்தத் தருணத்தில், இலங்கையின் நம்பிக்கைக்குரிய நாடான இந்தியாவுக்கு, அவர் விஜயம் செய்தது பாராட்டுக்குரியது.
மோடி, திசநாயகே சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிவது, பிராந்திய பாதுகாப்பை அதிகரிப்பது உட்பட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
அத்துடன், இருவரது பேச்சு வாயிலாக, கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, 'சைபர்' பாதுகாப்பு, கடத்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் போன்றவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பும் புத்துயிர் பெறும் என நம்பலாம்.
இலங்கையில் முன்னர் நடந்த தேர்தல்களில், அதிபர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பார்லிமென்டில், அதிபர் சாராத மற்றொரு கட்சியைச் சேர்ந்த கூட்டணி பெரும்பான்மை பெறுவதாகவும் அமைந்திருந்தன. இந்த மாறுபட்ட அமைப்பால், இலங்கை அரசால் எந்த உறுதிமொழியையும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையும், தடையும் நிலவி வந்தது.
ஆனால், கடந்த மாதம் இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் திசநாயகே தலைமையிலான, தேசிய மக்கள் சக்தி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், நிலைமை மாறியுள்ளது. நடைமுறை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், அதிபர் எடுக்கும் முயற்சி களுக்கு ஒத்துழைப்பு தரும் அரசு அமைந்துள்ளதால், அவரால் சிறப்பாக செயல்பட முடியும்.
பிரதமர் மோடி, அதிபர் திசநாயகே சந்திப்புக்கு பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வளர்ச்சிக்கு தேவையான ஆதார் அட்டை அறிமுகம் உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு விஷயங்களில், இருதரப்பும் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால சிக்கல்களை, பிரச்னைகளை தீர்ப்பதற்கு, பொறுமையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் செயல்பட வேண்டியது அவசியம்.
அதில், முதல் பிரச்னை இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிப்பது மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது. இந்த விஷயத்தில், இரு நாட்டு மீனவர்களின் நலன் மற்றும் வர்த்தக நலன்களை கருதி, துாதரக ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும்.
இந்தியா- - இலங்கை இடையே நிலவி வரும் மீனவர்கள் பிரச்னையானது, சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் வாழ்வாதார சவால்களுடன் தொடர்புடையது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அத்துடன், பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுவது போன்ற நிகழ்வுகள் நடக்கவும் காரணமாகிறது.
அதே நேரத்தில், 'இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும், இலங்கை மண்ணில் தன் அரசு அனுமதிக்காது' என, திசநாயகே உறுதி அளித்துள்ளது, இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழ்நிலை உருவாவதற்கு வழி வகுத்தது என்று சொல்லலாம். வேகமாக மாறி வரும் உலகளாவிய அரசியல் சூழ்நிலையில், இந்தியாவும், இலங்கையும் இருநாட்டு ஒத்துழைப்பில் புதிய பாதைகளை உருவாக்க தயாராகி விட்டன என்பதையே அதிபர் திசநாயகே, பிரதமர் மோடி சந்திப்பு உணர்த்தியுள்ளது!

