ஊழல் மக்கள் பிரதிநிதிகள் சுப்ரீம் கோர்ட் நெத்தியடி
ஊழல் மக்கள் பிரதிநிதிகள் சுப்ரீம் கோர்ட் நெத்தியடி
PUBLISHED ON : மார் 11, 2024 12:00 AM

'பார்லிமென்ட் அல்லது சட்டசபையில் பேசுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது' என, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்துடன், பார்லிமென்டில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில், 1998ல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த தீர்ப்பையும், ஏழு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது.
அரசியல் சட்டத்தின், 105 மற்றும் 194வது பிரிவானது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என, 1998ல் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல; தவறானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சட்டத்தின், 105 மற்றும் 194வது பிரிவுகள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் சிறப்பு உரிமைகள் பற்றியே குறிப்பிடுகின்றன. அந்தப் பிரிவுகள் லஞ்சம் வாங்குவதை சரியென்று சொல்லவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க் கள் லஞ்சம் பெறுவதை அனுமதித்தால், அது பார்லிமென்ட் ஜனநாயகத்தின் அடிப்படையையே சீர்குலைத்து விடும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தான், 'லஞ்ச ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரநிதிகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் தர முடியாது' என்ற, மற்றொரு நெத்தியடி தீர்ப்பையும் வழங்கியுள்ளது.
லஞ்சம், ஊழலில் ஈடுபடும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றுள்ளார். இதன் வாயிலாக, 'லஞ்சம், ஊழலற்ற பரிசுத்தமான அரசியல் நடவடிக்கைகள் நாட்டில் வேரூன்றும் என்பதோடு, நம் ஜனநாயக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்' என்றும் பாராட்டியுள்ளார்.
தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், தங்களின் தொகுதி பிரச்னைகள் பற்றியும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் பற்றியுமே பேச வேண்டும் என, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
அதற்கு மாறாக, பணம் படைத்தவர்கள், சுயநலத்துடன் செயல்படும் பெரும் புள்ளிகளின், கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலிகளாக மாறி விடக்கூடாது என்றும் நினைக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களின் விருப்பத்திற்கு உத்தர வாதம் தரும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு உரிமைகளை எந்த வகையிலும் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதும், இந்த தீர்ப்பின் வாயிலாக விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1998ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.,க்கள் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பானது, நேர்மையற்ற மக்கள் பிரதிநிதிகள், தங்களின் சுயநலத்திற்காக, பார்லிமென்ட் வழங்கியுள்ள சலுகைகளை முறைகேடாக பயன்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது. எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்வதே சரியானது என்றும், ஏழு நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
அதேநேரத்தில், இந்த தீர்ப்பின் வாயிலாக, ஆட்சியை காப்பாற்றுவதற்காக, பதவியை பிடிப்பதற்காக, மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதும், இதர சட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதும் இனி கட்டுப்படுத்தப்படும் என்று நம்பலாம்.
மக்கள் பிரதிநிதிகள் ஊழலில் ஈடுபடுவதும், லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டால், அது பொது வாழ்வில் நன்னடத்தையை சீர்குலைக்கும் என்பதுடன், ஜனநாயகத்திற்கும் குழி பறித்து விடும் என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபட தெரிவித்துள்ளது.
