PUBLISHED ON : டிச 15, 2025 05:29 AM

கோவா மாநிலம், பணஜி நகர் அருகே உள்ளது அர்புரா கிராமம். இந்த பகுதியில் உள்ள கடற்கரை, பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கிருந்த பிரபல கேளிக்கை விடுதியில் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், 25 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பான விசாரணையில், நடன நிகழ்ச்சியின் போது, மின்சார பட்டாசுகள் கொளுத்தப்பட்டதால், அதிலிருந்து புறப்பட்ட தீப்பொறி காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு சட்டத்தை மீறி செயல்படுவோரும், சட்டத்தை முறையாக அமல்படுத்த தவறும் அதிகாரிகளின் மெத்தனமும், அஜாக்கிரதையுமே காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்த தவறியதால், நான்கு சுற்றுலா பயணியர் உட்பட, 25 பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
சுற்றுலா பிரதேசமான கோவாவிற்கு, இந்த சீசனில் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருவர் என்பதால், விடுதிகளில் கூட்டம் அலைமோதும் என்பதையும் மறுக்க முடியாது. அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு அம்சங்களுக்கும், வசதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதை செய்யாததால், உல்லாசமாக பொழுதை கழிக்க வந்தவர்கள், உயிரை விட வேண்டிய அவலம் நேரிட்டுள்ளது. விடுமுறையை கொண்டாட வந்தவர்கள், கொடூரமான வகையில் நெருப்புக்கு இரையாகி உள்ளனர்.
தீ விபத்து நிகழ்ந்த இரவு விடுதி அனுமதியின்றி செயல்பட்டதுடன், விபத்தை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் அங்கில்லை. மேலும், விடுதிக்கு செல்லும் பாதை, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் குறுகியதாக இருந்ததால், தீயணைப்பு படையினரால் விரைவாக சென்று தீயை அணைக்க முடியவில்லை.
அத்துடன், விடுதியின் மேல் பகுதி பனை ஓலையால் வேயப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவ காரணமாகி விட்டது. அத்துடன் அவசரமான சூழ்நிலைகளில் வெளியேறுவதற்கான வழியும் விடுதியில் இல்லை என்பதால், நிலைமை மோசமாகி விட்டது.
அனுமதியின்றி இந்த இரவு விடுதி செயல்பட்டதுடன், விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் வந்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு தரப்பில் தரப்பட்ட மறைமுக ஆதரவால் தான், இந்த விடுதி துணிச்சலாக செயல்பட்டுள்ளது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கோவாவில் தான் இந்த நிலைமை என்றில்லை. நாட்டின் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் செயல்படும் விடுதிகளிலும், இதுபோன்ற விதிமீறல்கள் உள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் நிகழும் தீ விபத்து குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் சரியான வகையில் அமல்படுத்தப்பட்டு இருந்தால், இதுபோன்ற பெரிய அளவில் உயிழப்புகள் நிகழாமல் தடுத்திருக்கலாம்.
ஒவ்வொரு முறை துயர சம்பவம் நிகழ்ந்த உடன், சிலர் கைது செய்யப்படுவதும், அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதும், விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுவதுடன் தங்களின் வேலை முடித்து விட்டதாக அரசு தரப்பினர் நினைக்கின்றனர். நடந்த சம்பவங்களில் இருந்து யாரும் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. அப்படி பாடம் கற்றுக் கொண்டிருந்தால், அடுத்தடுத்து துயர சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.
எனவே, விடுதிகள் மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களை நடத்துவோரும், பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக கருத வேண்டும். அத்துடன், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும், இதுபோன்ற விஷயங்களில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். இல்லையெனில், கோவா போன்ற துயர சம்பவங்கள் தொடர்வதை தடுக்க முடியாது.

