sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

தலையங்கம்

/

எதிர்பாராத விஷயங்களை டிரம்பிடம் எதிர்பார்க்கலாம்!

/

எதிர்பாராத விஷயங்களை டிரம்பிடம் எதிர்பார்க்கலாம்!

எதிர்பாராத விஷயங்களை டிரம்பிடம் எதிர்பார்க்கலாம்!

எதிர்பாராத விஷயங்களை டிரம்பிடம் எதிர்பார்க்கலாம்!


PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக நாடுகள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்தது. மிகவும் சக்தி வாய்ந்த பதவியாக கருதப்படும், அமெரிக்க அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வாகி உள்ளார். அமெரிக்க வாக்காளர் களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவை மட்டுமின்றி, 'எலக்டோரல் காலேஜ்' என்ற பிரதிநிதிகள் எண்ணிக்கையிலும் பெரும்பான்மை ஆதரவை பெற்று சாதனை படைத்துள்ளார். அதே நேரத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த, 2016 முதல், 2020 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஏற்கனவே அதிபராக பதவி வகித்த டிரம்ப், அதன்பின், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவினார். இருப்பினும், சோர்வடைந்து விடாமல், இந்தத் தேர்தலில் கடுமையாக போராடி, தன், 78வது வயதில் மீண்டும் அதிபராகி உள்ளார்.

அமெரிக்க அதிபராக ஒருவர் இரு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். அதன்படி பார்த்தால், சில தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து இரு முறை அதிபராக பதவி வகித்துள்ளனர். ஆனால், இடைவெளி விட்டு அதிபராகி டிரம்ப் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி, 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார்.

கடந்த, 2020ல் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஜோ பைடன் அதிபராக தேர்வான போது, 'நான் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது' என்று கூறியவர் டிரம்ப். அப்படிப்பட்டவர் அதிபர் நாற்காலியில் மீண்டும் அமர உள்ளார். அதனால், யாராலும் கணிக்க முடியாத அவரின் குணாதிசயங்களை, இனி உலகம் எதிர்கொள்ள நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

பிரதமர் நரேந்திர மோடியை தன்நல்ல நண்பர் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், அவரை எதிர்கொள்வது மத்திய அரசுக்கு எளிதானதாக இருக்காது. ஏனெனில், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு, இந்தியா அதிக வரி விதித்துள்ளதாக விமர்சித்தார்.

இருப்பினும், அமெரிக்காவை மிகவும் செல்வ வளம் படைத்த நாடாக மாற்ற, இரு தரப்பு வர்த்தக உறவுகளில், இந்தியாவுக்கு எதிராக சரியான பதிலடி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது, டிரம்ப் தலைமையிலான அரசு, அதிக அளவிலான வரி விதிக்கலாம்.

அத்துடன், மோடியின், 'மேக் இன் இண்டியா' பிரசாரம் போல, அமெரிக்காவே முதன்மையானது என்ற அணுகுமுறையை டிரம்ப் பின்பற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, டிரம்பின் முதலாவது பதவிக்காலத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்வோருக்கு வழங்கப்படும், 'எச் 1 பி' விசா விஷயத்தில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுபோன்ற வேறு சில நடவடிக்கைகளையும், டிரம்ப் தன், இரண்டாவது பதவிக்காலத்தில் எடுத்தாலும் ஆச்சர்யமில்லை.

'அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், சட்டப்பூர்வமாக வரவேண்டும். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக உருவாக்குவேன். என் வெற்றி அமெரிக்காவுக்கு பொற்காலமாக இருக்கும்' என, தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தெரிவித்திருப்பதன் வாயிலாக, அவரின் செயல்பாடுகள் அமெரிக்காவின் நலனை மையமாகக் கொண்டதாகவே இருக்கும் என்பதை உணரலாம்.

டிரம்ப்பின் வெற்றி, அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதேவேளையில், தற்போதைய மூன்று முக்கிய உலக பிரச்னைகளான உக்ரைன் போர், இஸ்ரேல் - -ஹமாஸ் மோதல் மற்றும் புவி வெப்பமயமாதலுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் போன்றவற்றிலும், தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

மொத்தத்தில் டிரம்ப் அதிபராக பதவி வகிக்கும் காலத்தில், எதிர்பாராத விஷயங்கள் நிச்சயமாக நடக்கும் என்று, எதிர்பார்ப்பதே புத்திசாலித்தனமான செயல்பாடாக அமையும்.






      Dinamalar
      Follow us