PUBLISHED ON : நவ 04, 2024 12:00 AM

'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன், இனி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில், சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதனால், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அவர்களின் வருமானத்தை பற்றி கவலைப்படாமல், இந்தத் திட்டத்தில் சேரலாம். 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடும் பெறலாம்.
'தற்போது, மத்திய அரசின் சுகாதார திட்டம், முன்னாள் ராணுவத்தினருக்கான சுகாதார திட்டம், மத்திய ஆயுதப் படையினருக்கான காப்பீடு திட்டம் என, எந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களின் பழைய திட்டத்திலேயே தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்' என்று, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார்.
மத்திய அரசின் இந்த முற்போக்கான நடவடிக்கை, வயதான காலத்தில் மருத்துவத்திற்காக கணிசமான தொகையை செலவிட்டு, நிதி நெருக்கடியில் தவிக்கும், 6 கோடி மூத்த குடிமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அத்துடன், தங்களுக்கும் மருத்துவ காப்பீடு உள்ளது என, மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை, அவர்களுக்கு மன அமைதி அளிப்பதுடன், பெற்றோரின் மருத்துவ செலவு, பிள்ளைகளுக்கு சுமையாக இருப்பதும் இனி தவிர்க்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில், மருத்துவமனையில் தங்கும் செலவு, நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை என, பலவிதமான மருத்துவ செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.
அத்துடன், முன்னரே உள்ள நோய்களுக்கான சிகிச்சையையும், இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்த நாள் முதல் பெற முடியும் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும், இத்திட்டத்தில் சேர எந்த விதமான பிரீமியம் தொகையும் செலுத்த வேண்டியதில்லை. நாடு முழுதும் உள்ள, 29,000 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சை பெற முடியும்.
இத்திட்டத்தில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், சில குறைபாடுகளும் உள்ளன. அதாவது, இத்திட்டத்தின் கீழான காப்பீடானது, குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் என்பதாகும். ஒரு குடும்பத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் இருந்தால், இந்த 5 லட்சம் ரூபாய் வரம்பை பகிர்ந்து கொள்ள நேரிடும்.
மேலும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது மற்றும் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு அதிகம் செலவாகும் என்பதால், இந்த காப்பீடு தொகை போதாது என்றே சொல்ல வேண்டும். அந்த நேரத்தில், தங்களின் மருத்துவ செலவுகளுக்கு, பிள்ளைகளையே மூத்த குடிமக்கள் சார்ந்திருக்க நேரிடும். அதனால், 5 லட்சம் காப்பீடு என்பதை, 10 லட்சம் ரூபாயாக அதிகரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மருத்துவ செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், ஒருவர், 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெற்றிருந்தால், மருத்துவமனைகளில் பொது வார்டுகளில் மட்டுமே சேர்ந்து சிகிச்சை பெறலாம். மூத்த குடிமக்களுக்கு, இது பல விதத்திலும் தர்மசங்கடத்தை உருவாக்கலாம். முன்னணி மருத்துவமனைகள் பல, காப்பீட்டு தொகை குறைவாக இருக்கிறது என்று கூறி, சிகிச்சை அளிக்கவும் மறுக்கலாம்.
அத்துடன், மத்திய அரசு அறிவித்துள்ள பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் தான், மூத்த குடிமக்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதால், மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, அதற்கான பணத்தை, திரும்ப பெறும் வாய்ப்பும், மத்திய அரசின் திட்டத்தில் இல்லை என்பது குறையாகும். இந்தக் குறைகள் எல்லாம் வரும் காலத்தில் களையப்பட்டு, ஒவ்வொரு மூத்த குடிமகனும் சிறந்த, செலவுகள் அகற்ற மருத்துவ சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக. எது எப்படியோ, தற்போதைய கட்டத்தில் மத்திய அரசின் இம்முயற்சி பாராட்டத்தக்கதே.
மேலும், அரசியல் வெறுப்பு காரணமாக, டில்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இந்த காப்பீடு திட்டத்தை அமல்படுத்தவில்லை என, பிரதமர் மோடி கூறியிருப்பது வருத்தம் தருகிறது. அந்த மாநிலங்களும், தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.