தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ நம்பிக்கையில்லா தீர்மானம் ஜக்தீப் தன்கருக்கு சிக்கலா?

நம்பிக்கையில்லா தீர்மானம் ஜக்தீப் தன்கருக்கு சிக்கலா?

நம்பிக்கையில்லா தீர்மானம் ஜக்தீப் தன்கருக்கு சிக்கலா?


PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான பிரச்னையை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தன.

அதே நேரத்தில், இந்த பிரச்னைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய அமைப்புக்கு, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் வழங்கும் நிதியுதவி குறித்து விவாதிக்க வேண்டும் என, பா.ஜ., தலைமையிலான ஆளும் கூட்டணி எம்.பி.,க்கள் வலியுறுத்தியதால், பார்லிமென்ட் சுமுகமாக நடைபெறவில்லை.

இந்நிலையில், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி நோட்டீஸ் கொடுத்துள்ள விவகாரம், நாடு முழுதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்லிமென்டின், 75 ஆண்டு வரலாற்றில் இது முதல் முறை என்றும் கூறப்படுகிறது. லோக்சபா சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிகழ்வுகள் நடந்திருந்தாலும், ராஜ்யசபா தலைவருக்கு எதிராக இப்போது தான் முதல் முறையாக நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

இந்த தீர்மான நோட்டீசில், 'திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த, 60 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

'ராஜ்யசபாவில் மக்கள் பிரச்னைகளை எழுப்ப, தன்கர் அனுமதி அளிப்பதில்லை. பார்லிமென்ட் ஜனநாயகம், எம்.பி.,க்களின் உரிமையை காப்பாற்றவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முற்பட்டுள்ளோம்' என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.

ராஜ்யசபா விதிகளின்படி, சபை தலைவரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்தால், சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேலான எம்.பி.,க்களின் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வேண்டும். அத்துடன், லோக்சபாவிலும் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான், ராஜ்யசபா தலைவர் பதவி விலகுவார்.

ஆனால், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால், எதிர்க்கட்சிகளின் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.

மேலும், ராஜ்யசபா தலைவரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ், குறைந்தபட்சம், 14 நாட்களுக்கு முன் கொடுக்கப்பட வேண்டும். அதை, சபையின் துணை தலைவர் அங்கீகரித்து, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள அனுமதிப்பார்.

வரும், 20ம் தேதியுடன், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், போதிய அவகாசம் இல்லாததால், தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படுமா என்பது சந்தேகமே. அப்படியே, இந்த தீர்மான நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில், புதிதாக நோட்டீஸ் கொடுக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதன் வாயிலாக, ஜக்தீப் தன்கரை அவமதிக்க வேண்டும் என்பதில், எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பது தெரிகிறது.

ராஜ்யசபா தலைவர் பதவி வகிப்பவர், துணை ஜனாதிபதியாகவும் இருக்கிறார். அதனால், உயரிய பதவியின் நேர்மைக்கும், நிலைத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படுத்தவே தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. ஆனாலும், தீர்மானம் மீதான நடவடிக்கையானது நீண்ட மற்றும் கடினமான ஒன்றாகும்.

அதனால், எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கையை, ஜக்தீப் தன்கருக்கு எதிரான, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு குடைச்சல் கொடுக்கும், களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே கருதலாம். அதே நேரத்தில், ராஜ்யசபாவின் தலைவரான தன்கர், நடுநிலையாக செயல்பட வேண்டியவர் என்பதால், விருப்பு, வெறுப்பு இல்லாமல், சபையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையிலும், போதுமான வாய்ப்பு வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us