சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அமல்படுத்துவது அவசியம்!
சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அமல்படுத்துவது அவசியம்!
PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

குற்ற வழக்குகளில் சிக்குவோரின் வீடுகளை, புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடைமுறை, உத்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
அதில், 'குற்ற வழக்கில் சிக்கியதாலேயே ஒருவருடைய வீட்டை, புல்டோசர் வாயிலாக இடிக்க முடியாது. அரசு நிர்வாகத்திற்கு இதற்கான அதிகாரம் இல்லை. ஒருவர் குற்றவாளியா என்பதை, நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டதாலேயே, ஒருவரது வீட்டை இடிப்பது, அரசியல் சட்டத்தை மீறும் செயல்.
இது, அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தாரின் உரிமைகளை, பாதுகாப்பை பறிப்பதாகவே அமையும். விதிகளை மீறி கட்டடங்களை இடிக்கும் அதிகாரிகளிடம் இருந்து, அதை திரும்ப கட்டுவதற்கான தொகையை வசூலிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில், ஆக்கிரமித்தோ அல்லது அனுமதி பெறாமலோ சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால், அவற்றை இடிப்பதற்கு என, சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டடத்தின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு பதில் அளிக்க, 15 நாள் அவகாசம் வழங்க வேண்டும். அப்படி அவகாசம் தராமல், எந்த ஒரு கட்டடத்தையும் இடிக்க முடியாது.
சுருக்கமாகச் சொன்னால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ யாராக இருந்தாலும், உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல், தாங்கள் எடுப்பதே நடவடிக்கை என்ற ரீதியில், அரசோ, அதிகாரிகளோ அத்துமீறலில் ஈடுபட முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த அதிரடி உத்தரவால், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை, புல்டோசர் வாயிலாக இடிக்கும் மாநிலங்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இனி இந்த நடைமுறையை, அந்த மாநிலங்கள் பின்பற்ற முடியாத நிலைமை ஏற்படும்.
சமீபத்திய சில ஆண்டுகளில், உ.பி., ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட ஜாதி, மத ரீதியான மோதல்களை தொடர்ந்தே, புல்டோசர் வாயிலாக கட்டடங்களை இடிக்கும் நடைமுறையை, அம்மாநில அரசுகள் பின்பற்றின. பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கலவரங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் புகட்டுவதற்காகவே, அதிகாரிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டனர் என்பதில், எந்த விதமான சந்தேகமும் இல்லை.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால், அதிகாரிகள் இனி வரம்பு மீறி செயல்பட மாட்டார்கள்; நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை உறுதியாக பின்பற்றுவர் என்று நம்பலாம்.
அதேநேரத்தில், அனுமதியற்ற கட்டுமானங்களும், ஆக்கிரமிப்புகளும் ஒரே இரவில் வருவதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் தான், மாதக்கணக்கில் மற்றும் ஆண்டு கணக்கில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் உருவாகின்றன.
அதனால், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கும், அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினரின் ஆதரவு தரும் நடவடிக்கைகளுக்கும் கடிவாளம் போட வேண்டியதும் அவசியமாகும்.
மேலும், புல்டோசர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி இருந்தாலும், அதை முழுமையாக அமல்படுத்துவதில் தான், அதன் வெற்றியே அடங்கியுள்ளது. இதற்கு முன், வெறுப்பு பேச்சு மற்றும் பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஒரு பிரிவினர் சிலர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும், அதை சட்ட அமலாக்க துறையினர் சரியாக அமல்படுத்தவில்லை.
அதேபோன்று, இந்த உத்தரவையும் காற்றில் பறக்க விட்டு விடாமல், முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.