PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. கோவா, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும், சில மாநிலங்களின் துணை முதல்வர்களும், நிதி அமைச்சர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில், பாப்கானுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., மற்றும் பழைய வாகனங்களை விற்க, 18 சதவீத ஜி.எஸ்.டி., என்பது உட்பட பல அறிவிப்புகள் வெளியாகின.
குறிப்பாக, பேக்கிங் மற்றும் லேபிள் செய்யப்படாத உப்பு, காரம் கலந்த பாப்கானுக்கு 5 சதவீதம், அதே பாப்கான் பேக்கிங் மற்றும் லேபிள் செய்யப்பட்டு இருந்தால் 12 சதவீதமும், கேரமல் பாப்கானுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யும் விதிப்பது என எடுக்கப்பட்ட முடிவு, சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதமாகி உள்ளது.
அதேநேரத்தில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராதங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது என்ற சலுகை வரவேற்பை பெற்றுஉள்ளது.
இருப்பினும், உடல்நல காப்பீடு மற்றும் ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., பற்றி விவாதித்து, அது ரத்து செய்யப்படலாம் என, பல்வேறு தரப்பிலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த பிரச்னை பற்றி விவாதிக்கப்படாததும், முடிவு எடுக்கப்படாததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஜி.எஸ்.டி., செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதற்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்காமல், பாப்கானுக்கு மூன்று விதமாக வரி விதிக்க முடிவெடுத்துள்ளனர். இது, சாதாரண விஷயங்களுக்கு அதிக முன்னுரிமை தந்திருப்பதையும், பொதுமக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லாததையுமே காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வரி செலுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் என்பதற்காகவும், வரி ஏய்ப்பை தவிர்க்கவுமே, ஜி.எஸ்.டி., முறை அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தும், பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., விவகாரத்தில், இன்னும் சிக்கலான மற்றும் குழப்பமான நிலைமையே தொடர்கிறது.
'பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய விவகாரங்கள் பற்றி விவாதிப்பதை புறந்தள்ளி விட்டு, பாப்கான் மீதான ஜி.எஸ்.டி., பற்றி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்து இருப்பது தேசிய சோகம்' என, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் விமர்சித்துள்ளார்.
'அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களை கவனிக்காமல் விட்டதும், அவற்றை பிறகு பார்க்கலாம் என ஒத்திவைத்ததும், நல்ல மற்றும் எளிமையான வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் உணர்வை மீறுவதாக உள்ளது' என்றும் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி., அடுக்குகளை பகுத்தாய்வு செய்வதில், மத்திய அரசு மிகவும் மெதுவாகவும், மெத்தனமாகவும் செயல்படுகிறது என்பதையே, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்ட முடிவுகள் மீதான விமர்சனங்கள் எடுத்துரைக்கின்றன.
இந்தியாவில் இருப்பது போன்ற பல அடுக்கு வரி முறைகள், பல நாடுகளில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. நம் நாட்டில் பின்பற்றப்படும் பல அடுக்கு வரி முறையானது முறைகேடுகளுக்கே வழி வகுப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
நாடு முழுதும் ஒரே விதமான வரி விதிப்பு முறை அமலானால் நல்லதே என்ற எண்ணத்தில் தான், இந்த வரி விதிப்பு விஷயத்தில் தங்களுக்கான அதிகாரங்களை, மத்திய அரசிடம் மாநில அரசு கள் ஒப்படைத்தன. ஆனால், தற்போது தங்களுக்கான நியாயமான வரி பங்கை பெற முடியவில்லை என்று புலம்புகின்றன. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
தற்போதைய பல அடுக்கு ஜி.எஸ்.டி., முறையால், 2023 - 24ம் நிதியாண்டில், 2.01 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ஏய்ப்பு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இத்தகைய நிலை தொடர்வதை தவிர்க்க வேண்டும். அப்படி தொடர்ந்தால், அது மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்வதற்கு வழி வகுக்குமே அன்றி, தீர்வாக அமையாது. எனவே, ஜி.எஸ்.டி., முறையை மேலும் எளிமையாக்குவது தொடர்பாக, விரைவாகவும், தீவிரமாகவும் ஆலோசித்து, மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.

