PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

மஹாராஷ்டிராவில், நவம்பர், 20ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மாநிலத்தை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சிகள், 'மஹாயுதி' என்ற பெயரில் ஒரு அணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., ஆகிய கட்சிகள், 'மஹா விகாஸ் அகாடி' என்ற பெயரில் மற்றொரு அணியாகவும் களமிறங்க உள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலம், தேசிய நீரோட்டத்தில் முக்கிய பங்காற்றினாலும், பால் தாக்கரே, சரத்பவார் போன்ற தலைவர்கள், இங்குள்ள மாநில கட்சிகளுக்கு தலைமை வகித்தபோதும், இங்கு எந்த மாநில கட்சியும், தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததில்லை.
அத்துடன், 1995க்கு பின், தொடர்ந்து கூட்டணி அரசுகளே பதவி வகித்துள்ளன. அதாவது, ஆட்சி அதிகாரத்திற்காக, மாநில கட்சிகளை சார்ந்தே, தேசிய கட்சிகள் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. 2014 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகள் தனித்து களம் கண்டும் பெரும்பான்மை பெற முடியவில்லை.
அத்துடன், இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான அணியை விட, காங்கிரஸ், தேசியவாத காங்., - உத்தவ் தாக்கரே கட்சி கூட்டணி, அதிக இடங்களை பிடித்தது.
இதற்கிடையில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் அமைந்த, காங்., இடம்பெற்ற மஹா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்த்ததுடன், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் தலைமையிலான கட்சிகளை உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசை பா.ஜ., அமைத்ததும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடே, லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி குறைவான இடங்களை பெற்றது.
மேலும், 2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த போது, மஹாராஷ்டிராவிலும், அவரின் செல்வாக்கு எதிரொலித்தது. அந்தத் தருணத்தில், 48 இடங்களில் போட்டியிட்ட காங்., இரண்டு இடங்களிலும், பிளவுபடாத தேசியவாத காங்., நான்கு இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.
பா.ஜ.,வோ, 24 இடங்களில் போட்டியிட்டு, 23ல் வெற்றி பெற்றது. அத்துடன், அந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலில், அதுவரை நான்காமிடத்தில் இருந்த பா.ஜ., கட்சி முதல் இடத்திற்கு வந்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது.
இந்தத் தேர்தலின் போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதைய வெற்றியின் வாயிலாக, மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் செல்வாக்கு வளர்ந்ததுடன், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிய துவங்கியது.
ஆனால், இப்போது நிலைமை பா.ஜ.,வுக்கு சாதகமாக இல்லை. வேலையில்லா திண்டாண்டம், பொருளாதார தேக்கநிலை, மராத்தா வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பிரச்னை போன்றவை, ஆளும் கூட்டணிக்கு எதிராக மக்கள் மத்தியில் பலமான அதிருப்தியை உருவாக்கியுள்ளன.
இந்த அதிருப்தியை போக்க, வாக்காளர்களை கவர, ஏற்கனவே சில இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாராஷ்டிரா கூட்டணி அரசு, தேர்தல் அறிக்கையிலும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடலாம். அதேபோல, காங்கிரஸ் இடம் பெற்ற எதிர்க்கட்சி கூட்டணியும் வாக்காளர்களை கவரும் வேலைகளில் இறங்கலாம்.
இதுதவிர, இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளின் ஓட்டுகளை வளைக்கவும் இரு தரப்பினரும் முற்படலாம். மொத்தத்தில், மஹாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் மாற்றமில்லை. அத்துடன் தேர்தல் வெற்றி சவாலாகவும் இருக்கும்.