தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/பா.ஜ.,வுக்கு உற்சாகம் தந்த மஹா., மாநகராட்சி தேர்தல்!

பா.ஜ.,வுக்கு உற்சாகம் தந்த மஹா., மாநகராட்சி தேர்தல்!

பா.ஜ.,வுக்கு உற்சாகம் தந்த மஹா., மாநகராட்சி தேர்தல்!


PUBLISHED ON : ஜன 26, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2026 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நகராட்சி, ஊராட்சி தேர்தல்களில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத் தமுள்ள, 288 கவுன்சில்களில், மஹாயுதி கூட்டணி, 207க்கும் மேற்பட்ட கவுன்சில்கள், நகர் பரிஷத்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளை வென்றது. இது, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமை யிலான ஆளும் பா.ஜ., கூட்டணி அரசுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள, 29 மாநகராட்சிகளுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதாவது, பா.ஜ., மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இணைந்த கூட்டணி, 26 மாநகராட்சிகளை பிடித்தது. அதுமட்டுமின்றி, இந்த தேர்தல் வாயிலாக, மாநிலத்திலேயே பெரிய கட்சியாக பா.ஜ., உருவெடுத்து உள்ளதுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாகவும் மாறியுள்ளது.

அதே நேரத்தில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆறுதல் பரிசாக ஒரே ஒரு மாநகராட்சியை மட்டும் பிடித்துள்ளது. இதன் வாயிலாக, ஒரு காலத்தில் மாநிலத்தில் பெரிய அளவில் கோலோச்சிய காங்., எந்த அளவுக்கு தேய்ந்து போயிருக்கிறது என்பதை அறிய முடியும்.

அது மட்டுமின்றி, ஆண்டுக்கு, 75,000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்படும் மும்பை மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை பிடித்துள்ளது. கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளதால், மும்பை மேயராக பா.ஜ.,வைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வாவது உறுதியாகி உள்ளது.

அது மட்டுமின்றி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை மாநகராட்சியில் தொடர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் ஆதிக்கம் முடிவிற்கு வந்துள்ளது. அவரது கட்சியினர் எதிர்க்கட்சியாக அமரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், பா.ஜ.,வின் மூன்று இன்ஜின் வளர்ச்சி என்ற முழக்கம், நகர்ப்புறங்களில் வசிக்கும் மஹாராஷ்டிரா மக்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மேலும், மஹாயுதி கூட்டணிக்கு உள்ளேயே போட்டி இருந்தது.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத் பவார் தலைமையிலான கட்சியின் பிரிவுடன் சில மாநகராட்சிகளில் கைகோர்த்தது. ஆனாலும், ஒட்டுமொத்த கூட்டணியும், இதுபோன்ற கருத்து வேறுபாடுகளால் பலவீனமடையவில்லை.

ஒரு காலத்தில் சிவசேனாவின் கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ., தற்போது மஹாயுதி கூட்டணிக்கு பெரிய பலமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. அதுபோன்ற செல்வாக்கை, தற்போது பா.ஜ.,வும் பெற்றுள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துதல் மற்றும் பலவீனப்படுத்துதல் உள்ளிட்ட அரசியல் சாணக்கிய நடவடிக்கைகளால், மாநிலத்தில் முதன்மையான கட்சி என்ற நிலையை அடைந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்கு பா.ஜ.,வை எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

மேலும், மாநகராட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காகவே, உத்தவ் தாக்கரேயும், அவரின் உறவினரான ராஜ் தாக்கரேயும் சமீபத்தில் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டனர். ஆனால், அவர்களின் பிரசாரம் பெரிய அளவில் எடுபடவில்லை.

உத்தவ் தாக்கரேயிடம் இருந்து பிரிந்து, சிவசேனா கட்சியை தன்வசப்படுத்திய மாநிலத்தின் துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேயின் வளர்ச்சி, தாக்கரேக்களின் ஆதிக்கத்தை குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தலைநகர் டில்லியில் மாநகராட்சியை பா.ஜ., ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், மஹாராஷ்டிரா தேர்தலிலும் சாதனை படைத்திருப்பது அக்கட்சிக்கு இரட்டிப்பு உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us