sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

தலையங்கம்

/

தி.மு.க.,வில் பன்னீர்: ஸ்டாலின் சாதுர்யமா?

/

தி.மு.க.,வில் பன்னீர்: ஸ்டாலின் சாதுர்யமா?

தி.மு.க.,வில் பன்னீர்: ஸ்டாலின் சாதுர்யமா?

தி.மு.க.,வில் பன்னீர்: ஸ்டாலின் சாதுர்யமா?

23


PUBLISHED ON : மார் 02, 2026 02:33 AM

Google News

23

PUBLISHED ON : மார் 02, 2026 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டபோது, உருவான அரசியல் நெருக்கடி காலத்தில் இரு முறையும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஒரு முறை என, மூன்று முறை குறுகிய காலத்திற்கு முதல்வராக பதவி வகித்தவர், பன்னீர்செல்வம். முதல்வராக பதவி வகிப்பதற்கு முன்னும், பின்னும், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியையும் வகித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவரது தோழி சசிகலாவால் முதல்வராக்கப்பட்டடாலும், பின், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக, தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டமும் நடத்தினார். ஊழல் வழக்கில், சசிகலா சிறைக்கு சென்றதும், முதல்வராக இருந்த பழனிசாமியுடன் கைகோர்த்து துணை முதல்வரானார்.

ஆனால், அ.தி.மு.க.,வில் வெடித்த, 'ஒற்றை தலைமை' பிரச்னையால், அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' என்ற அமைப்பை துவக்கி, தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

அதேநேரத்தில், அ.தி.மு.க.,வில் மீண்டும் சேருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். 'எந்த நிபந்தனையும் இன்றி, கட்சியில் சேர தயாராக இருப்பதாகக் கூறியும், அவரை சேர்த்துக் கொள்ள, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலரான பழனிசாமி முன்வரவில்லை.

இதனால், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் போல, புதிய கட்சியை பன்னீர்செல்வம் துவக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் சேர்ந்தார். பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேர்ந்ததை, சசிகலா, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார்.

அதனால், இம்முறையும் அவரை பா.ஜ., மேலிடம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பினார். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டதால், தற்போது தி.மு.க.,வில் இணைந்துள்ளார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் கூறுவர். அந்த கூற்றை உண்மையாக்கும் வகையில், பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அமைந்துள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், இரண்டாவது முறையாக, அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற வேண்டும்; மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,விற்கு விழக்கூடிய ஓட்டுகள் சிதறி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

அதனால் தான், தமிழகத்தில் செல்வாக்காக உள்ள முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவரான பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்துள்ளார். பன்னீர் வாயிலாக, அவரது சமூகத்தை சேர்ந்த கணிசமான ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்பது ஸ்டாலினின் அரசியல் கணக்கு.

அதுமட்டுமின்றி, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு, 'செக்' வைக்கும் வகையிலும் சில முடிவுகளை சமீப நாட்களாக ஸ்டாலின் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியே பன்னீரின் இணைப்பு.

அத்துடன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தி.மு.க.,வில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது, தி.மு.க.,வின் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க உதவும் என்பதும், ஸ்டாலினின் நம்பிக்கை.

மொத்தத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கைவிட்ட பன்னீருக்கு, முதல்வர் ஸ்டாலின் கைகொடுத்துள்ளார். இருப்பினும், பன்னீரின் இணைப்பு தி.மு.க.,விற்கு கணிசமான ஓட்டுகளை பெற்றுத் தருமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும்.






      Dinamalar
      Follow us