சிகரெட் மீதான வரி விதிப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை!
சிகரெட் மீதான வரி விதிப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை!
PUBLISHED ON : ஜன 12, 2026 01:20 AM

இந்தியாவில், 25.3 கோடி பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது, உலக அளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கை. கடந்த பத்தாண்டுகளில், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. ஆனாலும், சிகரெட்டுகளின் விலை அந்த அளவிற்கு உயரவில்லை.
அதனால், புகையிலை பொருட்கள் மீதான வரியை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்துவது அவசியம் என்று, மத்திய அரசு கருதுகிறது. மேலும், இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்றவற்றின் உற்பத்தி அளவை கணக்கிடுவது கடினமாக உள்ளது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதும் அவசியமாகிறது.
அதனால், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், 'கலால் திருத்த மசோதா - 2025'ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. சிகரெட், ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் வரிகளை அதிகரிப்பதே இதன் நோக்கம். அத்துடன், புதிய வரி விதிப்பு முறையில், சரக்கு மற்றும் சேவை வரிக்கு மேல், கூடுதலாக கலால் வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த மாற்றம், பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான புதிய அரசாணையை, கடந்த டிச., 31ம் தேதி இரவு மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல், 735 ரூபாய் வரை வரி விதிக்கப்படுகிறது.
இனி, 1,000 சிகரெட்டுகளுக்கு, 2,050 முதல், 8,500 ரூபாய் வரை கூடுதல் வரி விதிக்கப்படும். அதனால், 65 மில்லி மீட்டர் வரை நீளமுள்ள பில்டர் இல்லாத சிகரெட்டுகளுக்கு கலால் வரி, சிகரெட் ஒன்றுக்கு, 2.05 ரூபாயாக இருக்கும்.
அதே நீளமுள்ள மினி பில்டர் சிகரெட்டுகளுக்கு, சிகரெட் ஒன்றுக்கு, 2.10 ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும். 65 முதல் 70 மி.மீ., வரையிலான நடுத்தர நீளமுள்ள சிகரெட்டுகள் ஒவ்வொன்றுக்கும், 3.60 முதல் 4 ரூபாய் வரை கூடுதல் வரி விதிக்கப்படும். 70 முதல் 75 மி.மீ., வரை நீளமுள்ள சிகரெட்டுகளுக்கு, 5.40 ரூபாய் வரி விதிக்கப்படும்.
மொத்தத்தில், மத்திய அரசின் புதிய வரி விதிப்பு, நீளமான மற்றும் பிரீமியம் ரக சிகரெட்டுகள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, இந்தியாவில் விற்கப்படும் பல கிங்- சைஸ் மற்றும் பில்டர் வகைகளான, 'கோல்ட் ப்ளேக் பிரீமியம், ரெட் அண்டு ஒயிட் கிங் சைஸ், கிளாசிக் மற்றும் மார்ல்பரோ வகைகள், நேவி கட் லாங்கர் ஸ்டிக்ஸ்' மற்றும் 'ஐஸ் பர்ஸ்ட்' போன்ற சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகள் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
இந்த மாற்றங்களுக்கு பிறகும், இந்தியாவில் சிகரெட்டுகள் மீதான மொத்த வரிகள் சில்லரை விலையில், 53 சதவீதமாகவே இருக்கும். புகை பிடிப்பதை ஊக்கப்படுத்தக்கூடாது என்பதை நோக்கமாக கொண்ட உலக சுகாதார அமைப்பு, புகையிலை பொருட்களின் விலையில், 75 சதவீதம் வரியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதை ஒப்பிடுகையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் குறைவானதே. சிகரெட் உற்பத்தியாளர்கள் விலைகளை சரிசெய்யவும், பேக்கேஜிங் மாற்றங்களை செய்யவும் அவகாசம் வேண்டும் என்பதால், புதிய வரி விகித மாற்றம் மற்றும் விலை உயர்வானது, பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அரசின் வருவாயை பெருக்க, பொது மக்களிடையே புகையிலை நுகர்வை குறைக்க, புகையிலை சார்ந்த நோய்களின் பாதிப்பை தவிர்க்க, பொது சுகாதார செலவுகளை குறைக்க, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த என, மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.
அதிக வரி விதிக்கப்படும் போது, விலை கணிசமாக உயர்ந்து, பலர் புகை பிடிப்பதை நிறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புகை பிடிக்கும் பலர், உயர் ரக சிகரெட்டுகளை விடுத்து மலிவான மாற்று பொருட்களுக்கு மாறவும் வாய்ப்பு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட்டுகளை கள்ளச் சந்தையில் வாங்கவும், இ - சிகரெட் போன்றவற்றை புகைக்கவும் ஆர்வம் காட்ட நேரிடும். அதையும், முடிந்த அளவுக்கு தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு பின்பற்றினால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.

