தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு அதிகம்

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு அதிகம்

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு அதிகம்


PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு இன்று துவங்குகிறது. இந்தச் சிறப்பு கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது திருத்தப்பட்ட புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவானது, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்வதற்கு வழிவகை செய்தது. அந்த மசோதா நிறைவேறினால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை உடைய வட மாநிலங்களின் இடங்கள் அதிகரிக்கும் என, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், மசோதா நிறைவேறாமல் தோல்வி கண்டது.

தற்போதைய திருத்த மசோதாவில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே விகிதத்தில், 50 சதவீதம் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை, 534ல் இருந்து, 850 ஆக அதிகரிக்கும். மாநிலங்களில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக, 650 வரை உயர்த்தப்படலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், 2051ம் ஆண்டு வரை, மக்கள்தொகையின் அடிப்படையில், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் மாற்றம் இருக்காது. மேலும், மாநிலங்கள் வாரியான பிரதிநிதித்துவமானது, 1971ம் ஆண்டு மக்கள் தொகையின்படியே தீர்மானிக்கப்படும். அதே நேரத்தில், 2011ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், மாநிலத்திற்குள் தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தவும், இது வழிவகுக்கும். லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும். அந்த ஒதுக்கீடு, 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்பது உட்பட வேறு பல அம்சங்களும், புதிய மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

இந்த புதிய தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், தமிழகத்தில் தற்போது, 234 ஆக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, 351ஆக அதிகரிக்கும்; அதில் பெண்களுக்காக, 116 தொகுதிகள் ஒதுக்கப்படும். அதேபோல, தற்போது, 39ஆக உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையும், 59ஆக அதிகரிக்கும். அதில், 20 தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.

புதிய சட்டம் அமலுக்கு வந்த பின், தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, எல்லைகள் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான தொகுதிகள் நிர்ணயிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தின் பங்கு, 7.18 சதவீதமாக உள்ளது. அது மாறாமல், அனைத்து மாநிலங்களிலும், 50 சதவீத இடங்கள் உயர்த்தப்படுவதால், புதிய மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக, முன்னர் எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., தற்போது ஆதரவு அளித்துள்ளது. அத்துடன், மஹாராஷ்டிராவின் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே உடைந்து, 20க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதால், அவர்களின் ஆதரவும் மசோதாவுக்கு உண்டு.

இதைத்தவிர, தெலுங்கு தேசம், ஜனசேனா, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகளுடன், கூட்டணியில் இல்லாத ஒய்.எஸ்.ஆர்.காங்., பாரத் ராஷ்டிர சமிதி போன்ற தென் மாநில கட்சிகளின் ஆதரவும் இந்த மசோதாவுக்கு கிடைத்துள்ளது. ஐந்து தென் மாநிலங்களில் உள்ள எம்.பி.,க்களில், 60 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

அதனால், கடந்த ஏப்ரலில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது இருந்த சூழ்நிலை தற்போது இல்லை. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்திருந்த கட்சிகள், தற்போது பிரிந்துள்ளதால், பிரிந்த சில கட்சிகள் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வரும் புதிய மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கலாம் என்பதால், இன்று துவங்கும் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில், அந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி நிறைவேறினால், அது மத்திய அரசுக்கு சாதனையே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us