தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/வளர்ச்சிக்கு வழிகாட்டும் மத்திய அரசின் பட்ஜெட்!

வளர்ச்சிக்கு வழிகாட்டும் மத்திய அரசின் பட்ஜெட்!

வளர்ச்சிக்கு வழிகாட்டும் மத்திய அரசின் பட்ஜெட்!


PUBLISHED ON : பிப் 09, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2026 01:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறவில்லை. ஆனாலும், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த பட்ஜெட்டில், குறிப்பிடத்தக்க சில முக்கிய அம்சங்கள் உள்ளன. 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், நிதி பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டை விட அதிகரித்து, 5,92,344 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள் ளது. வரும் நிதியாண்டில் இது 4.3 சதவீதமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

கடன்களை பொறுத்தவரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு நிதியாண்டில் கணிக்கப்பட்ட 56.1 சதவீதத்தில் இருந்து, வரும் நிதியாண்டில் 55.6 சதவீதமாக குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அரசின் மொத்த செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில், 12.21 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டு செலவுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது, நல்ல அம்சமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டில், மூலதன செலவுகளுக்கு 11.11 லட்சம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் நிகர வரி வருவாய் 28.7 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த சந்தை கடன் 17.20 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்ப துறையை ஊக்குவிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஏழு அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள், மின்சார வாகன பேட்டரிகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அத்துடன், தோல் பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், காபி, இறக்குமதி செய்யப்பட்ட மது பானங்கள் மற்றும் உரங்கள் விலை உயரும். அதாவது, பல துறைகளில் செலவுகளை குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே சுங்க வரி விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் நிதி அழுத்தங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டும், பட்ஜெட்டில் பல சாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில், பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகளாக சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை அதிவேக ரயில் பாதை உருவாக்கப்படும்; அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லுார், சுற்றுலா பயணியருக்காக திறந்து விடப்படும்.

பொதிகை மலையில் மலையேற்ற பயிற்சியாளர்களுக்காக வழித்தடம் அமைக்கப்படும், பழவேற்காடு ஏரியில் பறவைகள் கண்காணிப்பு பாதைகள் உருவாக்கப்படும், தமிழகத்தில் உள்ள கோவில் நகரங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் தருவதாக அமைந்து உள்ளது.

இருப்பினும், தமிழக அரசு எதிர்பார்த்த சில அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம் பெறாதது, ஆளுங்கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில் வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியையும், செலவுகளை கட்டுப்படுத்தி, உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப துறைகளை மேம்படுத்துவதுடன், வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் கவனம் செலுத்தியிருப்பது நல்ல அறிகுறியே.

முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், வரும் காலங்களில் வளர்ச்சியை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us