தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/வணிக காஸ் விலை உயர்வு மக்களை பாதிப்பது நிச்சயம்!

வணிக காஸ் விலை உயர்வு மக்களை பாதிப்பது நிச்சயம்!

வணிக காஸ் விலை உயர்வு மக்களை பாதிப்பது நிச்சயம்!


PUBLISHED ON : மே 04, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்காசிய நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும், பிப்ரவரி, 28ம் தேதி போரை துவக்கின. அந்தப்போர் துவங்கி தற்போது வரை எட்டு வாரங்கள் நிறைவடைந்து விட்டது. தற்போதைக்கு ஈரானுக்கு எதிரான தாக்குதலை, அமெரிக்காவும், இஸ்ரேலும் தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், அது விரைவில் துவங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், ஈரானுக்கு எதிராக அவ்வப்போது கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஈரானுக்கு எதிரான போர் காரணமாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுக்களில் முன்னேற்றம் இல்லாததாலும், எரிபொருட்கள் இறக்குமதி மற்றும் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காஸ் சிலிண்டர்கள் சப்ளையில் நம் நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்கள் சப்ளையை, மத்திய அரசு ஓரளவுக்கு சீராக்கி இருந்தாலும், வணிக காஸ் சிலிண்டர்கள் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை சமீபத்தில், 990.50 ரூபாய் அளவுக்கு, மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. கடந்த, 2022 மே மாதத்தில், 2,508 ரூபாயாக இருந்த வணிக காஸ் சிலிண்டர் விலை தற்போது, 3,237 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே வர்த்தக காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறையால், கடந்த சில நாட்களாக பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ள ஹோட்டல்கள், சிறு உணவகங்கள், சாலையோர சிறு கடைகள், பேக்கரிகள் தற்போதைய விலை உயர்வால் கடும் சுமைக்கு ஆளாகும் என்பதில் மாற்றமில்லை.

இதனால், ஏற்கனவே உயர்த்திய உணவு பண்டங்களின் விலையை மீண்டும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இதுதொடர்பான ஆலோசனையிலும், நாடு முழுதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. எந்த நேரத்திலும் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகலாம்.

வாடிக்கையாளர்கள் வருகை குறைவு, உணவு பொருட்கள் தயாரிப்பிற்கான இடுபொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் ஊதியம் அதிகரிப்பு, நிறைய முதலீடு செய்தும் குறைவான லாபமே சம்பாதிக்கும் நிலைமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு, வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு மிகப்பெரிய இடி.

காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, பெரிய ஹோட்டல்கள் பல ஏற்கனவே மின்சார அடுப்புகளுக்கு மாறியுள்ளன. அதனாலும், கூடுதல் செலவை எதிர்கொண்டுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மீண்டும் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

சர்வதேச சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, கச்சா எண்ணெய் விலை நிலைத்தன்மை பெற இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை விலை குறைய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. தற்போதைய, ஈரான் - அமெரிக்க மோதல் நீடித்தால், ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகைக்கு விரைவான முடிவு ஏற்படாவிட்டால், விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

தற்போது வணிக காஸ் சிலிண்டர் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் விலையும் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் இழப்பை ஈடுகட்ட வேண்டும் எனில், விலை உயர்த்தப்படுவது கட்டாயமாகும். எனவே, பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையையும், விலை உயர்வையும் புரிந்து கொண்டு, காஸ் பயன்பாட்டை குறைப்பது, மின்சார அடுப்பின் பயன்பாட்டை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும், ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் தலையில் ஏற்றாமல், காஸ் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தால் மக்களின் சுமை குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us