PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

கடந்த மாதம், 27ம் தேதி, கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில், உறவுகளை பறிகொடுத்தவர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகிஉள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே போலீஸ் விசாரணையும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் துயரத்திற்கு, விஜய் மிகவும் தாமதமாக வந்தது, எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக கூட்டம் கூடியது, கூட்டத்தினருக்கு போதிய குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்யாமல் விட்டது, வெயிலில் பல மணி நேரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருந்தது, போலீசாரின் எச்சரிக்கையை த.வெ.க., நிர்வாகிகள் கண்டு கொள்ளாமல் விட்டது என பல காரணங்கள், அரசு தரப்பிலும், மற்றவர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், போதிய பாதுகாப்பு வழங்காததே காரணம் என, அரசு மீதும், போலீசார் மீதும் குற்றம் சாட்டுவதும் தொடர்கிறது.
அரசியல் ரீதியான பொதுக்கூட்டங்களை நடத்துவதில், அ.தி.மு.க.,வினர் மற்றும் தி.மு.க.,வினருக்கு உள்ள அனுபவத்தை போன்று, த.வெ.க., கட்சியினருக்கு போதிய அனுபவம் இல்லாததும் துயரம் நிகழ ஒரு காரணமாகும். இந்த விஷயத்தில் நடிகர் விஜயும், அவரது கட்சி நிர்வாகிகளும் தங்களின் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
அதுமட்டுமின்றி, சம்பவம் நடந்த சமயத்தில் விஜயும், அவரது கட்சி நிர்வாகி களும் அங்கிருந்து வெளியேறியதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததும் சரியானதே. அதேநேரத்தில், தமிழக அரசு இந்த விஷயத் தில் துரிதமாக செயல்பட்டது, உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்க முற்பட்டது பாராட்டுக்குரியதே.
இந்த சம்பவத்திற்கு சதிச்செயலே காரணம் என, விஜயும், அவரின் கட்சியினரும் கூறி வருகின்றனர். அந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பதால், பிரச்னை தற்போது அரசியலாக்கப்பட்டு, ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டும் நிலைமை உருவாகி உள்ளது.
மத்திய அரசும் இந்த பிரச்னை தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது. இதன் வாயிலாக, அரசியல் ஆதாயம் பெற, சில கட்சிகள் முற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தங்களின் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களை, கட்சிக் கொடி சுமந்து தங்களுக்காக வாழ்த்து கோஷம் போடுவோரை, தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வருவோரை வெறும் கூட்டமாக பார்க்காமல், அவர்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்களில் நெரிசல் ஏற்படுவது என்பது, வேறு சில சம்பவங்களின் தொடர்ச்சியாக நிகழ்வதாகும். எனவே, உயர் நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு குழுவானது, கரூர் நெரிசல் பலிக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தற்போதைய சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த உறுதிமொழி காப்பாற்றப்படும் என, நம்பலாம்.
அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக செயல்படும் என்றும் நம்பலாம். அத்துடன், தமிழக அரசு உருவாக்கும் வழிகாட்டு விதிமுறைகளானது, மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும். இனிமேலாவது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.