தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/வாட்ஸாப்பின் புதிய வசதி: மத்திய அரசின் அச்சம் நியாயமே!

வாட்ஸாப்பின் புதிய வசதி: மத்திய அரசின் அச்சம் நியாயமே!

வாட்ஸாப்பின் புதிய வசதி: மத்திய அரசின் அச்சம் நியாயமே!


PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸாப், நம்நாட்டில், 50 கோடிக்கும் மேற்பட்டோரால் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸாப்பில் ஒருவர் இன்னொருவருடன் உரையாடும் போது அல்லது பேசும் போது, இருவரின் மொபைல்போன் எண்களையும் அவரவர் பார்க்க முடியும். இதற்கு மாற்றாக மொபைல்போன் எண்களை பகிராமலேயே, 'யூசர் நேம்' எனப்படும், பயனாளர் பெயர் மூலம், தகவல்களை பரிமாறும் வசதியை அறிமுகம் செய்ய வாட்ஸாப் திட்டமிட்டுள்ளது.

இந்த வசதியால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எச்சரித்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, வாட்ஸாப்பை நிர்வகிக்கும், 'மெட்டா' நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, யூசர் நேம் வசதியில் உள்ள பாதுகாப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மெட்டா நிறுவனம், அதுகுறித்த விளக்கத்தை, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

அந்த விளக்கத்தில், 'ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கான அம்சங்கள் புதிய முறையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. உண்மையான பயனாளர்கள் மட்டுமே குறிப்பிட்ட பெயரை பயன்படுத்த முடியும். பயனாளர் பெயர் என்ற புதிய முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும், மொபைல்போன் எண்ணும் அவசியமானதாகும். அதனால், மோசடியாளர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவர். போதிய பாதுகாப்பு அம்சங்கள் புதிய முறையில் உள்ளதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை' என, மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விளக்கத்தை மத்திய அரசு பரிசீலனை செய்து, யூசர் நேம் வசதியை அனுமதிக்கலாமா அல்லது அதற்கு தடை விதிக்கலாமா என்பது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பயனாளர் பெயர் அம்சமானது, 'இன்ஸ்டாகிராம்' செயலி வைத்திருப்பவர்களுக்கு எளிதாக புரியும். அதாவது, இன்ஸ்டாகிராமில் நம்முடைய மொபைல்போன் எண் இல்லாமல், நாம் விரும்பும் பெயரை கொடுத்து, நமக்கான கணக்கை தொடங்க முடியும். ஆனால், வாட்ஸாப்பில் ஒருவர் கணக்கு தொடங்க வேண்டும் எனில், மொபைல்போன் எண் கட்டாயமாகும். இன்ஸ்டாகிராம் போல, வெறும் பயனாளர் பெயரை வைத்து கணக்கு தொடங்கும் வகையில், வாட்ஸாப்பையும் மெட்டா நிறுவனம் மாற்றி அமைக்கிறது.

பெயர் மூலம் கணக்கு தொடங்குவதன் வாயிலாக, மொபைல்போன் எண் மறைக்கப்படுவதால், சைபர் குற்றங்கள் அதிகரிக்கும். பெயரை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமாகும். காவல்துறைக்கு அது பெரும் சவாலாகவும் இருக்கும் என்பதால், மத்திய அரசு இந்த விஷயத்தில் தயக்கம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த கவலை நியாயமானதே. ஏனெனில், நம்நாட்டில் சைபர் குற்றங்கள் சமீப நாட்களாக பெருகி வருகின்றன.

டிஜிட்டல் அெரஸ்ட் மோசடிகளும், நிதி மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை கிரிமினல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஏராளமான நபர்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். இந்த உண்மை நிலவரங்களை பொறுப்புள்ள எந்த அரசாலும் நிராகரிக்க முடியாது.

மேலும், நம் நாட்டில் தனியுரிமை பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. அது பெரும்பாலும், ரகசியம் என்றோ அல்லது மறைப்பதற்கு ஏதேனும் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது என்றோ பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு புரிதல்களுமே சரியானவை அல்ல. தனியுரிமை என்பது, தனிநபர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களில் எவ்வளவை, எந்தச் சூழ்நிலையில் வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் திறனாகும்.

மொபைல்போன் எண் ஆனது, தற்போது வெறும் தொலைபேசி எண்ணாக மட்டுமல்ல; அது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் அடையாளங்ககளில் ஒன்றாகவே உருவெடுத்துள்ளது. வங்கிச் சேவைகள், பணம் செலுத்துதல், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், பயணம், தொழில்முறை தொடர்புகள் மற்றும் எண்ணற்ற இணைய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்வது அவசியம். சமூக வலைதளங்கள் பெருமளவு அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், வாட்ஸாப் உள்ளிட்ட பல விதமான செயலிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமே. இந்த விஷயத்தில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்படும் என, நம்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us