தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?

23


PUBLISHED ON : அக் 26, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

23

PUBLISHED ON : அக் 26, 2026 12:52 AM


23
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் தான் முதலில் போராட்டத்தை துவக்கினர். பின்னர் காங்கிரஸ் மற்றும், 'இண்டி' கூட்டணி கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளதால் எதிர்க்கட்சிகளின் போராட்டமாக மாறியுள்ளது.

இந்த போராட்டம் தசரா பண்டிகை உள்ளிட்டவை காரணமாக சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும், நவம்பர், 1ம் தேதி டில்லியில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. போராட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற முனைப்போடு, காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும், 30ம் தேதி டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாதிரி பார்லிமென்ட் நடத்தவும், அப்போது, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் தீர்மானித்துள்ளன. இதற்கிடையில், ஞானேஷ் குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அரசியல் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் அதே கடுமையான பார்லிமென்ட் நடைமுறைகளின்படியே, தலைமை தேர்தல் கமிஷனரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது.

அதாவது, தேர்தல் கமிஷனருக்கு எதிராக பார்லிமென்டில் கொண்டு வரப்படும் தீர்மானம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தரப்பில் முதல் முறையாக அளிக்கப்பட்ட நோட்டீஸ், லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது முறை அளிக்கப்பட்ட நோட்டீஸ் ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 'தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக, எதிர்கட்சிகள் மீண்டும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், அது விதிகளின்படி பரிசீலிக்கப்படும்' என, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மத்திய அரசோ, 'தேர்தல் கமிஷன் போன்ற ஒரு சுதந்திரமான அரசியல் சட்ட அமைப்பின் உள் விவகாரங்களில், மத்திய அரசு தலையிடாது; அவ்வாறு தலையிடுவது அதன் தன்னாட்சியை பாதிக்கும்' என்றும் விளக்கம் அளித்துள்ளது. 2023ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'தலைமை தேர்தல் கமிஷனரை நியமிக்கும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும்' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், மத்திய அரசோ பார்லிமென்டில், 'தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம் 2023'ஐ நிறைவேற்றியது. இதன்படி, தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர் நியமன குழுவில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுப்பதில், மத்திய அரசு தனக்கான அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது.

இச்சட்டத்தின் படியே தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரும் நியமிக்கப்பட்டார். அதனால், அவருக்கு எதிராக மத்திய அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாக தெரிகிறது.

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறுமா என்பது, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் முன்வைக்கும் சட்டப்பூர்வமான ஆதாரங்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு மற்றும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை பொறுத்தே அமையும்.

இந்திய அரசியல் வரலாற்றில், தலைமை தேர்தல் கமிஷனர் போன்ற அரசியல் சட்ட ரீதியான பதவிகளில் இருப்பவர்களை நீக்குவது அல்லது அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தன்னிச்சையாக வெற்றி பெறுவது எளிதானது அல்ல. அதனால், எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. இல்லையெனில், மத்திய அரசே தாமாக முன்வந்து, ஞானேஷ்குமார் பதவி விலகும்படி கேட்டுக் கொண்டால், பிரச்னை முடிவுக்கு வரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us