ADDED : மே 12, 2024 04:26 AM

தாய் என்பவள் சாதாரண சக்தி அல்ல; குழந்தைகளுக்கு ஆபத்து என்றால் தன்னுயிரை துச்சம் என நினைத்து போராடக்கூடியவள். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை வயதான தாய்மார்களை பிள்ளைகள் குழந்தைகளாக தான் கவனிக்கின்றனர். அப்படி தன்னை பெற்ற தாயை குழந்தையை போல் கையில் வைத்து தாங்குவதோடு தாய் வயதிலிருக்கும் முதியோர்களுக்கும் மகளாக இருக்கிறார் திண்டுக்கல் மாவட்டம் பழநி திருநகரை சேர்ந்த டாக்டர் சங்கீதா.
இவர் மனம் திறந்ததாவது.....
என் குடும்பத்தில் நான், அப்பா, அம்மா, அண்ணன் மட்டும் தான். நான் சிறுவயதிலிருந்தே பிறருக்கு எதாவது சேவை செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பேன். அதனால் என் அம்மா சியாமிளா, என்னை டாக்டருக்கு படிக்க வைத்தார்.
நானும் கடினமாக பள்ளிப்படிப்பை முடித்து கோவை மருத்துவக்கல்லுாரியில் மருத்துவம் படிக்க சேர்ந்தேன். 2004ல் 2ம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் போது திடீரென என் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். என்னை போல, அண்ணனும் வெளியூரில் படித்து கொண்டிருந்தார்.
அம்மாவிற்கு ஏற்பட்ட இந்த பிரச்னையால், அவரால் எதுவுமே சுயமாக செய்ய முடியாமல் இருந்தார். நான் வாராவாரம் கோவையிலிருந்து பழநியில் உள்ள வீட்டிற்கு வந்து கவனிப்பேன். அம்மாவை, என்னுடைய 18 வயதிலேயே குழந்தையை போல பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குளிக்க வைப்பதிலிருந்து உணவு சாப்பிட வைப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்தேன்.
இப்படி பணிவிடை செய்ய வேண்டி இருந்தது என்பதற்காக எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை. என் அம்மாவின் மீது பாசம் அதிகரித்தது. ஆரம்பத்தில் அவர் என்னை தாங்கினார். பிறகு நான் அவரை தாங்கினேன். இதேநிலை பல ஆண்டுகள் நீடித்தது. என் மருத்துவ படிப்பும் முடிந்து டாக்டர் ஆனேன்.
ஒரு நாள் அம்மா பூரண குணமடைந்தார். என்றாலும் அன்றிலிருந்து இன்றுவரை அம்மாவை,குழந்தை போல் கவனிக்கிறேன். காலப்போக்கில் எனக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் பிறந்தது. என் அம்மாவோடு சேர்ந்து 3 குழந்தைகளோடு நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். எங்கு சென்றாலும் அனைவரும் சேர்ந்து தான் செல்வோம்.
பழநியில் என் அம்மா வயதுடையவர் யாராவது சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து என் மருத்துவமனைக்கு அழைத்து வந்து இலவசமாக சிகிச்சை கொடுக்கிறேன். மாதாமாதம் பவுர்ணமி நாளில் பழநி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற தாய்மார்களுக்கு உணவு வழங்குகிறேன்.
யாராவது உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியிருப்பதை கேள்விபட்டால் நேரில் சென்று அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அம்மாவை எப்போதும் என் அருகிலேயே வைத்து என் குழந்தையை போல பார்த்து ரசிக்க விரும்புகிறேன்.
நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது அம்மா நம்மை எப்படி கவனித்தார்களோ, அதேபோல் அவர்கள் வயதாகும் போது நாம் கவனிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரையும் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இது தான் நான் பார்க்கும் எல்லோரிடமும் சொல்வது.
இவரை வாழ்த்த...98948 30064