ADDED : ஜூலை 07, 2024 08:09 AM

'சின்ன வயசிலேயே எழுது குச்சியும், கையுமாய் அலைவேன். அதை வைத்து தரையில் ஏதாவது வரைவேன்னு சொல்ல முடியாது. கிறுக்குவேன். அதுவே ஓவியம் மாதிரி தெரியும். அப்ப போட்ட விதை இன்று விருட்சமாகி எனக்கு 'சாதனையாளர்' என்ற பட்டத்தை பெற்று தந்தள்ளது' என சிலிர்க்கிறார் மதுரையைச் சேர்ந்த 20 வயதான சிவசுதன்.
கோயில் சிற்பங்கள், உற்ஸவர் சிலை ஓவியம் என்றால் ஓவியர் சில்பியை ஆதர்ஷ குருவாக நினைத்து தத்ரூபமாக வரைந்து வருகிறார். அழகு பெண்களை அழகாக வரைய ஓவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய இளையராஜாவை வழிகாட்டியாக கொண்டு வரைகிறார் சிவசுதன். கடந்த மாதம் நான்கே நாட்களில் மீனாட்சி அம்மன் உற்ஸவத்தை தத்ரூபமாக போட்டோ பிரின்ட் போன்று பென்சில் ஓவியத்தால் வரைந்து உலக சாதனையாளர் பட்டத்தை பெற்றிருக்கிறார்.
''இதற்கெல்லாம் என் பெற்றோர் பழனியப்பன், விஜயராணிதான் காரணம். சின்ன வயசிலேயே எனக்கு தேவையான பொருட்களை வாங்கி ஊக்குவித்தனர். என் மாமாக்கள் கணேசன், சக்திவேல் ஓவியம் வரைவார்கள். சின்ன வயசில் இருந்தே அதை பார்த்து வளர்ந்ததும், வரைந்ததும் ஒரு காரணம். அவர்கள் வரையும்போது அதே ஓவியத்தை 'அரைமணி நேரத்திற்குள் வரைந்துவிடவா' என சவால்விட்டு வரைந்து காட்டுவேன். அப்படிதான் தான் எனது ஓவிய பயணம் துவங்கியது.
பி.காம்., படித்து முடித்த பின் ஓவியம்தான் என் வாழ்க்கை என முடிவு செய்து வரைந்து வருகிறேன். தஞ்சாவூர் ஓவியங்களும் வரைகிறேன். என் திறமையை பார்த்து இந்திய உலக சாதனை அறக்கட்டளை சாதனையாளர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. சர்வதேச சாதனையாளர் பட்டியலிலும் சேர முயற்சித்து வருகிறேன். நான் படித்த கல்லுாரியிலும் என் ஓவியத்திறமையை ஊக்குவித்தனர்.
அங்கு நான் வரைந்த காமராஜர் ஓவியம் என்றும் என்னை கல்லுாரி நிர்வாகத்திற்கு நினைவுப்படுத்திக் கொண்டேஇருக்கும். தேர்வு நேரத்திலும் நான் ஓவியம் வரைவதை விடவில்லை. வீட்டில் சத்தம் போட்டார்கள். ஓவியம் வரைந்துவிட்டு படித்தால்தான் எனக்கு திருப்தி. பென்சில் ஓவியம், வாட்டர் கலரிலும் வரைகிறேன். ஆயில் பெயின்டிங், டிஜிட்டல் ஓவியமும் எனக்கு கை வந்த கலை. ஓவியம் மட்டுமல்ல, பேப்பர் கூழில் குதிரை, மீனாட்சி அம்மன் தேர், யானையையும் உருவாக்கி உள்ளேன். 'க்ளே'யில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி உள்ளேன்'' என்கிறார் சிவசுதன். இவரை பாராட்ட 89034 92338