ADDED : ஜூலை 07, 2024 04:41 AM

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது'
இந்த குறள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, மதுரை இளவல் ஆசிரியர் அழகுவேலுக்கு அதிகமாக பொருந்தும். 23 வயதிலும் பால்முகம் மாறா பாலகனாக காட்சியளிக்கும் அவரை தமிழாசிரியர் எனும் போது யாராலும் நம்ப முடியாதுதான். ஆனால் அவரது பேச்சை கேட்ட பின் நம்மால் நம்பாமல் இருக்க முடியாதுதான்.
எம்.ஏ., முடித்து பி.எட்., படித்து வரும் அவர் விகாசா ஜூப்ளி பள்ளி தமிழாசிரியர். ஆன்மிக சொற்பொழிவாளர், கவிஞர், வர்ணனையாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் என பன்முகம் காட்டி நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். இத்தனை சிறிய விதைக்குள் எத்தனை பெரிய ஆலமரம். கொரோனா காலமே தன்னை இப்படி அவதாரம் எடுக்க அவதானித்ததாக கூறுகிறார்.
2019ல் அவர் இளங்கலை 3ம் ஆண்டு படித்தார். ஆன்லைன் வகுப்பில் படித்த அவருக்குள் இலக்கிய தாகம் துாண்டப்படவே அதில் ஆர்வம் காட்டியுள்ளார். 'தமிழா விழி; தமிழால் விழி' என்ற அமைப்பு ஆன்லைனில் நடத்திய இலக்கிய கருத்தரங்கில் அவர், மதுரை காமராஜ் பல்கலை 'பேராசிரியர் மோகனின் இலக்கிய செவ்வியில், இலக்கிய நயங்கள்' தலைப்பில் கட்டுரை வாசிக்க அது ஆய்வுக்கோவையில் வெளியானது. தொடர்ந்தது அவரது இலக்கிய, ஆன்மிக பயணம்.
அதுவே பல இளையோர் பட்டிமன்றம், கவியரங்கங்களில் நடுவராக இருக்க வைத்தது. பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நடுவர், 50க்கும் மேற்பட்ட ஆன்மிக சொற்பொழிவுகள், 50க்கும் மேற்பட்ட இலக்கிய மேடைகளில் பேசியுள்ளார். பல நாடுகளின் தமிழ் அமைப்புகள் நடத்திய இணையவழி கருத்தரங்குகளில் பேசி வந்தார்.
தமிழ்நாடு முத்தமிழ் கலை இலக்கிய சங்கம், தேடல் அறக்கட்டளை, சேரன்மாதேவி அறக்கட்டளை, சிவகங்கை பாரதி இசைக்கழகம், தேனி இளந்தமிழ் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் அவரை கவிபாரதி, ஆன்மிகஒளி, சொல்லருவி, கவிச்செம்மல், கவித்திலகம் என விருதுகளால் அழைத்து கவுரவப்படுத்தியுள்ளன.
மதுரை காந்தி மியூசிய சமையல் போட்டியில் சிறுதானிய உணவுகளை சமைத்து 3ம் பரிசும் பெற்றுள்ளார். கோயில் கும்பாபிஷேகம் உட்பட விழாக்களில் ஆன்மிக சொற்பொழிவு, வர்ணனையாளராக இடைவிடாமல் பேசுவது, திருவிளக்கு பூஜை நடத்தவும் தெரியும் என்கிறார்.
மிக எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு இவ்வார்வத்தை துாண்டியது கவிஞரான அவரது அப்பா. பத்தாம் வகுப்பு வரை படித்த அவரும், பல கதைகள், துணுக்குகளை படைத்தவர்.
அழகுவேல் கூறுகையில், ''மதுரை செந்தமிழ் கல்லுாரி என்னை உருவாக்கியது. சாலமன் பாப்பையா, ஞானசம்பந்தன், ராஜா போன்ற பட்டிமன்ற பேச்சாளர்கள், பேராசிரியர் மோகன், நிர்மலா மோகன், இளசை சுந்தரம், ரேவதி சுப்புலட்சுமி, சண்முக திருக்குமரன் என மதுரையின் இலக்கியவாதிகள் எனக்குள் ஆர்வத்தை தட்டி எழுப்பினர். ஆன்மிக, இலக்கிய படைப்புகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற வேண்டும், கவிதைத் தொகுப்பு வெளியிட வேண்டும் என்ற ஆசை உள்ளது'' என்றார்.