/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
துாரிகையில் பேசும் காரிகை: ஓவியத்தில் ஜெயாவின் காவியம்
/
துாரிகையில் பேசும் காரிகை: ஓவியத்தில் ஜெயாவின் காவியம்
துாரிகையில் பேசும் காரிகை: ஓவியத்தில் ஜெயாவின் காவியம்
துாரிகையில் பேசும் காரிகை: ஓவியத்தில் ஜெயாவின் காவியம்
ADDED : மார் 02, 2025 04:09 PM

துாரிகை பிடித்து ஓவியத்தில் காவியம் படைக்கும் காரிகை இவர். மனித உருவங்கள், கடவுள்கள், இயற்கை, உழைக்கும் பெண்கள் என அனைத்தையும் கண்முன் கொண்டு வருகின்றன கம்பத்தை சேர்ந்த ஜெயாவின் தத்ரூப ஓவியங்கள்.
அவர் கூறியது: என் கலைப்பயணம் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கியது. அம்மா வார இதழ்கள் வாங்குவார். அதில் அட்டை படத்தில் வரும் முகங்களை அப்பா எனக்கு வரைய சொல்லிகொடுப்பார்.
ஒவ்வொரு பண்டிகையிலும் அம்மா 100 புள்ளி வைத்து கோலம் போடுவதைப் பார்த்து வியந்து இருக்கிறேன். 50 வருடங்களுக்கு முன்பே கோலங்களுக்கு ஒரு பெரிய நோட்டு, கிராஸ் ஸ்டிச் எம்பிராய்டரிக்கு ஒரு தனி நோட்டு வைத்திருந்தார். இன்று நவீனமாக பயன்படுத்தப்படும் ஸ்ரக் எனும் ஜாக்கெட்டினை 1970களிலேயே பின்னி இருக்கிறார். அவரிடமிருந்து உருவானது தான் எனக்குள் இந்த ஓவியக்கலை.
1979ல் நடிகை வாணிஸ்ரீயை நிறம் தீட்டாத புனையா ஓவியமாக வரைந்தேன். பள்ளி, கல்லூரி நாட்களில் ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றேன். நான் பேசும்பொழுது ஒருவரை ஓவிய கண்ணோட்டத்திலேயே பார்ப்பேன். மனதுக்குள் என் விரல் வரைந்து கொண்டோ அல்லது எழுதிக் கொண்டோ தான் இருக்கும்.
ஓவியமும் தியானமும்
ஓவியம் வரைவதும் தியானமும் ஒன்று. வரையும் பொழுது, முழுக் கவனமும் ஒரு முகமாக இருந்து, அற்புத அனுபவம் தருகிறது. அன்றாட வாழ்வியலை பதிவு செய்வதில் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு.
எங்கு சென்றாலும் கிராமங்களில் பணிபுரியும் வயதான பெண்மணிகளை கவனித்து, அவர்களை வரைந்து விடுவேன். ஒரு மரம் கிராமத்திற்கு உயிராக இருப்பதைப் போல, ஒரு பெண் குடும்பத்திற்கு உயிராக இருக்கிறாள். மரமும் பெண்ணும் உலகத்தின் ஆதார மூலங்கள். இந்த இரண்டும் இல்லாமல் இந்த உலகம் நிறைவடையாது என்பது என் கருத்து. நான் வரையும் படத்தில் இந்த இரண்டும் இடம் பெற்று இருக்கும்.
ஓவிய கண்காட்சியை பார்ப்பதற்காகவே நான் இந்தியா முழுவதும் சென்று இருக்கிறேன். அதற்காகவே ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலுக்கும் சென்று இருக்கிறேன்.
பெரும்பாலும் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஓவியங்களையே வரைகிறேன். தமிழர் கலாச்சாரம், கிராமிய வாழ்க்கை, மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஓவியங்கள் எனக்கு விருப்பமானவை.
ஓவிய பயிற்சி
தஞ்சாவூர் ஓவியம், கலம்காரி, வார்லி, மதுபானி, பட்ட சித்ரா, காளிகாட் ஓவியம், பித்தோரா ஓவியம், கொண்டு ஓவியம் போன்ற ஓவியங்களுக்கும் பயிற்சி அளித்து கொண்டு இருக்கிறேன். அழிந்து கொண்டிருக்கும் இந்திய பழங்குடியினரின் ஓவியக்கலையினை புதுப்பிக்கும் விதமாக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை 700க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். நான் வரையும் ஓவியங்களில் ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி, 22 காரட் தங்கத்தாள் பயன்படுத்தி புதிய தோற்றத்தை உருவாக்குகிறேன்.
என் ஓவியங்கள் பார்வையாளர்களின் உள்ளத்தைத் தீண்ட வேண்டும், ஒரு கதையை சொல்ல வேண்டும் அல்லது எதையாவது நினைவு படுத்த வேண்டும். அதுவே என் நோக்கம்.
என் ஓவியப் பயணம் முழுவதுமாக விரல் வரைவின் மீது தான் மையம் கொண்டுள்ளது. நான் விரல் பயிற்சி, பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் நேரடியாக ரசித்து வரைவதை அதிகம் விரும்புகிறேன். எனவே கம்ப்யூட்டர் உத்திகளை பயன்படுத்தி வரைவது இல்லை. என் ஓவியங்களில் காணப்படும் உயிரும் உணர்வும் அழகும் விரல் வரைவின் தனிச்சிறப்பிலிருந்து வருவதாக நம்புகிறேன்.
எனது தங்கை சக்தி ஜோதி ஒரு கவிஞர். அவர் எழுதியவற்றில் எனக்குப் பிடித்த 100 கவிதைகளை ஓவியமாக தீட்டும் முயற்சியில் இருக்கிறேன் என்றார்.
- இவரைப் பாராட்ட: 94433 84482
தண்டா