/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
மாடாட மயிலாட... கரகமாட...கோவிந்தராஜ்
/
மாடாட மயிலாட... கரகமாட...கோவிந்தராஜ்
ADDED : ஆக 25, 2024 11:25 AM

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் பணியில் பல கலைஞர்கள் களமிறங்கி இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
அவர்களில் ஒருவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜ். மரக்கால் ஆட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழக அரசின் கலைமாமணி விருது, மதுரை மாவட்ட அளவில் சிறந்த மரக்கால் ஆட்ட கலைஞருக்கான கலை வளர்மணி விருது, மத்திய அரசின் நேரு யுவகேந்திராவின் கலைவேந்தன் விருது பெற்றுள்ளார்.
'கலை வளர்ப்போம்; தலை நிமிர்வோம்'என்ற கோஷத்துடன் மதுரையில் கலை மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
கோவிந்தராஜ் கூறியதாவது: தந்தை தட்சணாமூர்த்தி மெக்கானிக் தொழில் செய்தவர். தாயார் பாப்பாத்தி குடும்பத்தலைவி. எங்கள் குடும்பத்திற்கும் நாட்டுப்புறக்கலைக்கும் தொடர்பு இல்லை. நான் 6ம் வகுப்பு மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாசாலை நடுநிலைப் பள்ளியில் படித்தேன்.
அப்போது எனது வீட்டருகே வசித்த பழனிக்குமார் உதவியோடு கலைபண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் ஜவஹர் சிறுவர் மன்றத்தில் சேர்ந்து மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இக்கலையை இலவசப் பயிற்சி முகாமில் கற்க ஆரம்பித்தேன்.
எனது முதல் குரு மோகன். அவரிடம் முறையாக கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, மாடாட்டம், மயிலாட்டம் போன்ற கலைகளை பயின்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். 2010ல் எனது இரண்டாவது குருநாதர் மதுரை அரசு இசை கல்லுாரி நாட்டுப்புற கலைப் பேராசிரியர் தவசி ஞானசேகரிடம் இக்கலையை கற்றேன்.
என்னை செம்மைப்படுத்திக்கொள்ள மூன்றாண்டு நாட்டுப்புற கலை பட்டப் படிப்பை மதுரை அரசு இசைக் கல்லுாரியில் பயின்று முதலிடம் பெற்றேன். எம்.ஏ., எம்.பில்., முடித்துள்ளேன்.
பின்னர் திருமயம் ஆக்காட்டி ஆறுமுகம் கலைக்குழுவில் இணைந்து கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல், காளியாட்டம், கருப்பண்ணசாமி ஆட்டம் கற்றேன்.
இவற்றுடன் தற்போது பொய்க்கால் குதிரை ஆட்டம், வில்லுப்பாட்டு, மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கொம்பு இசை, வீதி நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை செய்து வருகிறேன். மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறேன். மரக்கால் ஆட்டத்தில் கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்பதே லட்சியம். நாட்டுப்புற கலையை அடுத்த தலைமுறைக்கு வளர்க்க வேண்டும். இளம் கலைஞர்கள் முறையாக கற்று ஆபாசமில்லாமல் ஆடி நாட்டுப்புறக்கலையை வளர்க்க வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.
இவரை வாழ்த்த... 87601 30152.

