ADDED : மார் 02, 2025 04:04 PM

14வது மாடி... திகிலுடன் எல்லோரும் கீழே இருந்து கழுத்து வலிக்க மேலே பார்த்துக்கொண்டிருக்க, கறுப்புநிற சீருடை அணிந்து, இடுப்பின் இருபுறமும் கயிறு, கொக்கி போன்ற உபகரணங்களை தொங்கவிட்டு வந்தவர், கயிற்றை வீசி அவிழாமல் இருக்க 'லாக்' செய்து ஏற ஆரம்பித்தார். மெல்ல காலாலேயே 'பெடல்' அடித்து தொங்கியவாறே சிறிது நேரத்தில் 14வது மாடியை அடைந்து அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கினார்.
'ஆட்களை மீட்க போனாருனு பார்த்தா சிரிச்சுகிட்டு கை குலுக்குறாரு' என கீழே இருந்தவர்கள் 'கிசு கிசு'க்க, 'அவசரப்படாதீங்க. பேரிடர் காலத்தில ஆட்களை மீட்கும் பயிற்சி இது' என அருகில் இருந்த தீயணைப்பு அதிகாரி விளக்கிய பிறகே 'ஓ! நாங்க என்னவோ ஏதோனு பயந்துட்டோம்' என அசட்டு சிரிப்பு சிரித்தனர் மதுரை டி.ஆர்.ஓ., காலனி மக்கள்.
பேரிடர் கால சேவையை தவமாக செய்து கொண்டிருக்கும் 47 வயதான மரியமைக்கேல்தான் அந்த மீட்பு மனிதர். தீயணைப்பு கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த அவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேச்சுக்கொடுத்தோம்.
''எனக்கு சொந்த ஊரு துாத்துக்குடி பூபாலபுரம். சி.எஸ்.ஐ.எப்., துணை ராணுவப்படை வீரராக இருந்தேன். 2007-2012 வரை ஐதராபாத் தேசிய பேரிடர் மீட்புபிரிவு பயிற்சியாளராக பணிபுரிந்தேன். 2005ல் ஜார்கண்டில் பணியாற்றும் போது அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் இறந்த செய்தி கேட்டு புறப்பட்டேன். 3 நாட்கள் பயணம். இங்கே வந்தபோது அவரது உடலை பார்க்க முடியவில்லை.
இந்த வருத்தத்தில் இருந்தபோது அப்பாவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை அளிக்க வசதியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு இடமாற்றம் கேட்டேன். கிடைக்கவில்லை. வேலை வேண்டாம் எனக்கூறி அப்பாவுக்கு துணையாக வந்துவிட்டேன். 2014ல் அப்பா இறந்தார்.
பிறகு தீயணைப்பு வீரர்கள் பயிற்சி செய்தி படித்தேன். துாத்துக்குடி தீயணைப்பு மாவட்ட அதிகாரி பாலசுப்பிரமணியத்திடம் பேசினேன். தீயணைப்பு கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பயிற்சி அவர்களுக்கு பிடித்து போய்விட்டது. இப்படி என் கேரியர் ஆரம்பித்தது.
போலீசிற்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மீட்பு பயிற்சி அளித்தேன். காற்றாலை மின்சாரத்தில் வேலை செய்பவர்கள் 'குளோபல் வின்ட் ஆர்கனைஷன்' பயிற்சி சான்றிதழ் பெற வேண்டும் என்பதால் காற்றாலை மின் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். இந்தியா முழுவதும் பயிற்சி அளித்து வருகிறேன்.
சமீபத்தில் தமிழக வனத்துறையில் 40 டிரெக்கிங் ரூட் தயார் செய்தார்கள். குரங்கணி வனத்தீயால் 21 பேர் இறந்தனர் அல்லவா. அதுபோன்ற சமயங்களில் எப்படி தப்பிப்பது, முதலுதவி செய்வது என கைடுகளுக்கு பயிற்சி அளித்தேன். கல்குவாரியில் 8 நாள் போராடி உயிர்களை காப்பாற்றியதற்காக ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளேன்.
ஒருமுறை நெல்லை தேவர்குளம் பகுதியில் காற்றாலை மின் டவரில் இறக்கையை இறக்கி நாசிலை இறக்கும்போது லைன் கட் ஆகி செங்குத்தாக தொங்கியது. கயிற்றை கிரேனில் மாட்டி 350 அடி வரை ஏறி தொங்கிக் கொண்டே ஸ்பிரிங் மாட்டினேன். மாலை 5:30 மணிக்கு ஆரம்பித்தேன். அதிகாலை 6:30 மணிக்கு முடித்தேன். 13 மணி நேரம் தொங்கிக்கொண்டே இருந்ததால் 3 நாளாக என்னால் எழுந்திருக்க முடியல.
எங்கப்பா அந்தோணி மைக்கேல் துாத்துக்குடி துறைமுகத்தில் லஸ்கராக வேலை செய்தார். கப்பலில் கயிற்றை வீசும்போது லாவகமாக பிடித்து கட்டுவார். அந்த ஜீன்தான் எனக்கு. எங்கப்பா கிணற்றில் கயிற்றை பிடித்து இழுக்க செய்வார். முடிச்சு போட்டா அவிழ்க்க முடியாது. அதுபோல் நான் 160 வித்தியாசமான முடிச்சுப் போடுவேன். யோசிச்சா 200க்கும் மேலேயே முடிச்சி போடுவேன். யாராலும் எளிதில் அவிழ்க்க முடியாது. இந்த கலையை இளைய தலைமுறையினருக்கு சொல்லித்தர ஆசை. கோச்சிங் சென்டர் கூட ஆரம்பிக்கணும் ஆசையாக இருக்கு. சேவை, அர்ப்பணிப்புடன் இக்கலையை செய்தால் சாதிக்கலாம் என்றார்.