/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஆறு கண்டங்கள்... ஆறு மலைகள்... அதிசய சாதனையாளர் முத்தமிழ்ச்செல்வி
/
ஆறு கண்டங்கள்... ஆறு மலைகள்... அதிசய சாதனையாளர் முத்தமிழ்ச்செல்வி
ஆறு கண்டங்கள்... ஆறு மலைகள்... அதிசய சாதனையாளர் முத்தமிழ்ச்செல்வி
ஆறு கண்டங்கள்... ஆறு மலைகள்... அதிசய சாதனையாளர் முத்தமிழ்ச்செல்வி
UPDATED : பிப் 23, 2025 10:26 AM
ADDED : பிப் 22, 2025 10:28 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. தற்போது சென்னையில் வசிக்கிறார். மலையேற்றத்தில் தொடர்ந்து விடாமுயற்சி, நம்பிக்கையுடன் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். 6 கண்டங்களில் மிக உயரமான 6 மலைகளில் ஏறி உலக சாதனை செய்துள்ளார். தற்போது 7வது கண்டத்தின் சிகரத்தில் ஏற ஆயத்தமாகி வருகிறார். பெண்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் பல தளங்களில் பேசி வருகிறார். இவர் கூறியதாவது:
பி.சி.ஏ., பட்டப்படிப்பு முடித்து ஜப்பான் மொழி என்3 லெவல் வரை படித்தேன். பிறகு கார்ப்பரேட் நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்தேன். வாழ்க்கை என்பது பிறப்பு, இறப்பு இரண்டுக்கும் இடையில் நாம் என்ன செய்து விட்டு செல்கிறோம் என்பதை பற்றியது. சாதாரண மனிதராக இருக்கும் போது நம் சொற்கள் பெரிய இடங்களுக்கு செல்வதில்லை. அந்த இடத்திற்கு செல்ல நமக்கு வெற்றி அவசியமாகிறது.
கொரோனா நேரம் பணியை விட்டு விலகினேன். கணவர் என் சாதிக்கும் எண்ணத்தை திறந்து வைத்தார். எவரெஸ்ட் மலை ஏற வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் இருந்தே மலையேற்றம் பிடிக்கும்.
2021ல் ஸ்ரீபெரும்புதுார் மலையில் கண்ணை கட்டிக் கொண்டு 155 அடி உயரத்தை 58 வினாடியில் இறங்கி உலக சாதனை செய்தேன். பெண்கள் வன்கொடுமையை தடுக்க பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவு அதிகரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹிமாச்சல் குலுமணாலியில் 165 அடி உயரத்தை 55 வினாடியில் நானும் என் இரண்டு குழந்தைகளும் இணைந்து கண்ணை கட்டிக் கொண்டு மலையில் இருந்து இறங்கினோம்.
உலக சாதனைகள்
மூன்றாவது உலகசாதனையாக வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி வெளி உலகிற்கு கொண்டு வரும் வகையில் அவரை போல் குதிரையில் அமர்ந்து கொண்டு 3 மணி நேரத்தில் 1389 அம்புகளை எய்து 87 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தேன்.
இந்த மூன்று உலக சாதனை செய்த பின் வேறு உலக சாதனை செய்ய விரும்பினேன். அது தான் துவக்கத்தில் இருந்த ஆசையான எவரெஸ்ட்டில் ஏறுவது. 73 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து யாருமே எவரெஸ்ட் ஏற முயற்சி செய்யவில்லை.
200 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் வீரமிகு போராட்டங்கள் செய்துள்ளனர். குயிலி வீரதீரமாக சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தார். இப்போதோ பயந்து வாழ்வது போல் அமைதியாக போகிறோம். வீரத்தை ஆண்களிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதை ஏன் ஒளித்து வைக்க வேண்டும். வீரமிருக்கிறவர்கள் சாதனையாளர்களாக இருப்பர். போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைக்கு வந்து சாதனை செய்யலாம்.
இமய மலையேற்றத்தின் போது பலர் என் உற்சாகத்தை குறைக்கும் வகையில் பேசிய போதும், ஒரு விஷயத்தை துவங்கி விட்டால் முடிக்கிற வரை ஓய மாட்டேன் என்று முன்னேறினேன். பருப்பு வகை உணவு தான் கிடைக்கும். உணவு பிரச்னையை சமாளிக்க வேண்டி இருந்தது.
உயிருக்கு பயந்தால்
எவரெஸ்ட் ஏறி இறங்க 57 நாட்கள் ஆகும். கும்பு கிலேசியர் ஆபத்தான பகுதி என்பர். பேஸ் முகாமில் இருந்து முகாம் 1க்கு செல்லும் வழித்தடத்தில் ஐஸ் கட்டிகள், பனிப்பாறைகள் ஆகியவை எப்போது வேண்டுமானாலும் விழும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இதில் வழித்தடம் போட்டு கயிறு குத்துவர். நேபாளி வழிகாட்டிகள் தான் இதை செய்வர். இவ்வாறு செய்யும் போது மூன்று பேர் தவறி விழுந்து விட்டனர். அவர்கள் உடல் கிடைக்கவே இல்லை. இங்கிருந்து போகும் போதே நிறைய பயமுறுத்தும் கதைகள் கேட்க நேர்ந்தது. நான் உட்பட எல்லோரும் அச்சத்தை எதிர்கொண்டாலும், வெற்றியை நோக்கி சென்று விடலாம் என நம்பிக்கை கொண்டோம். உயிருக்கு பயந்தால் நான் எவரெஸ்ட்டிற்கு சென்றிருக்கவே மாட்டேன். என்னை பொறுத்த வரை பிறப்பும் இறப்பும் கடவுள் கையில் உள்ளது. இடையில் உள்ளதை மட்டுமே நாம் செவ்வனே என செய்து முடித்து விட்டு செல்ல வேண்டும்.
எவரெஸ்ட்டில் ஏறி...
ஒரு வழியாக 2023 மே 23ல் உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் ஏறி முடித்தேன். ஐரோப்பா கண்டத்தின் மவுன்ட் எல்ப்ரஸ் (5642 மீட்டர்) மலையை 2023 ஜூலை 21ல் ஏறினேன். பிறகு ஆப்பிரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ (5,895 மீட்டர்) மலையை அதே ஆண்டு செப். 12ல் ஏறினேன். 2024ல் தென் அமெரிக்கா கண்டத்தின் அக்கோன்காகுவா (6,962 மீட்டர்) மலை ஏறினேன். ஆஸ்திரேலியா கண்டத்தின் மவுன்ட் கோஸ்யஸ்கோ (2,228 மீட்டர்) மலையை அடுத்த சில மாதங்களில் ஏறினேன். 2024 இறுதியில் அண்டார்ட்டிகாவில் மவுன்ட் வின்சன் ஏறினேன்.
அடுத்து வட அமெரிக்காவில் உள்ள மவுன்ட் டெனாலியை (6,190 மீட்டர்) மே மாதத்தில் ஏற திட்டமிட்டுள்ளேன்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த மனோகர் மலையேறுவதற்கு தேவையான நிதி உதவிக்காக பலரிடம் பேசினார். அரசிடம், ஸ்பான்ஸர்களிடமும் உதவி பெற்றேன்.
உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். உங்களால் பலர் பயன்பெறுவர். உங்களை பார்த்து உங்களை போன்று முன்னேற பலர் முயற்சிப்பர் என்றார்.

