UPDATED : ஆக 09, 2026 09:38 AM
ADDED : ஆக 09, 2026 09:35 AM

தி ருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். அதன் பெருமையைப் பாடிய கவிஞர்களும் ஏராளம்.
ஆனால், திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும், 133 கவிஞர்கள் தலா ஒரு அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய கவிதைகளால் மகுடம் சூட்டிய நிகழ்வு அரிது. அந்த இலக்கிய முயற்சிதான், சமீபத்தில் திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் நுாலாக மலர்ந்தது.
'திருக்குறளின் கவிக்குரல்' என்ற பெயரில் தமிழ்நாடு கனகரத்தினம் கவிமன்றம் வெளியிட்டுள்ள இந்த நுால், அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் உள்ளடக்கி, 1,500 பக்கங்களில் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு குறளுக்கும் முதலில் எளிய வினா-விடை வடிவில் விளக்கம். அதைத் தொடர்ந்து, அந்தக் குறளின் சாரத்தை 16 அடிகள் கொண்ட கவிதையாக வடித்திருப்பது இந்நுாலின் தனிச்சிறப்பு. இதில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.
![]() |
தமிழகக் கவிஞர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழ்க் கவிஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். தொகுப்பாசிரியர் கனகசிவாவின் குடும்ப உறுப்பினர்களும் முப்பாலின் முதல் அதிகாரங்களை எழுதியிருப்பது நுாலுக்கு தனித்த அடையாளத்தைத் தருகிறது.
விழாவில் பங்கேற்ற 133 கவிஞர்களுக்கும் புதுவை முதல்வரின் கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஜோதி நுாலை வெளியிட, 300-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
அமைப்பின் நிறுவன ரும், பாவேந்தர் பாரதிதாசனின் கொள்ளுப்பேரனுமான கனகசிவா பேசுகையில், திருக்குறள் கடந்த காலத்துக்கான நுால் மட்டுமல்ல; செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் ஆளப்போகும் எதிர்கால உலகுக்கும் வழிகாட்டும் பொதுமறை. எந்தக் காலத்திலும் பொருந்தும் இந்த நுாலை இந்திய அரசு தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும், என்றார்.
திருக்குறளைத் தொடர்ந்து, சங்க இலக்கியமான நாலடியாரையும் எளிய கவிதை, உரைநடையில் மக்களிடம் கொண்டு செல்லும் அடுத்த முயற்சியிலும் கவிமன்றம் இறங்கியுள்ளது.
காலம் மாறுகிறது. தலைமுறைகள் மாறுகின்றன. ஆனால், திருக்குறள் மட்டும் புதிய புதிய குரல்களைத் துணையாகக் கொண்டு, ஒவ்வொரு காலத்திலும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறது.

