UPDATED : மே 25, 2025 09:08 AM
ADDED : மே 24, 2025 09:16 PM

'என் வீட்டு மரம் உன் வீட்டுப் பக்கம்
சருகுகளை உதிர்ப்பதற்குச்
சண்டையிடுகிறாய்
தண்ணீர் ஊற்றுபவனுக்கு மலர்களையும்
தகராறு செய்பவனுக்கு
சருகுகளையும் வழங்க
எங்கு கற்றது மரம்..?'
என கணீர் குரல், தெளிவான உச்சரிப்பால் ரசிக்கும்படி கவிதை பேசுகிறார் கவிஞர் தங்கம்மூர்த்தி. ஆசிரியர், பள்ளி முதல்வர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகம் கொண்டவருக்கு அவரது முகம் மலர்ந்த புன்சிரிப்பே அடையாளம். புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தை நிறுவி, தமிழ்ப்பணியாற்றி வரும் தங்கம்மூர்த்தி, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் சொந்த ஊர். எம்.ஏ., எம்.எட்., ஆங்கில இலக்கியம் படித்து ஓராண்டு ஆசிரியராக பணிபுரிந்த நிலையில், 1990ல் மெட்ரிக் பள்ளி ஆரம்பித்தேன். இன்று ஆசிரியராக அங்கு பாடமும் நடத்தி வருகிறேன். 2008ல் மாநில நல்லாசிரியர் விருதும், 2013ல் தேசிய நல்லாசிரியர் விருதும் கிடைத்தது.
1980களில் கவிஞர்கள் மு.மேத்தா, அப்துல்ரகுமான் புதுக்கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். கவிதை மீது எனக்கு காதல் ஆரம்பித்தது அப்படிதான். இதுவரை 10 கவிதை நுால்கள் எழுதியுள்ளேன். கடல் கடந்தும் கவியரங்கம் செல்லும் வாய்ப்பை அளிப்பது தமிழும், கவிதையும்தான். கவிதையில் இருந்துதான் என் தமிழ்மொழி பயணம் தொடங்கியது. நான் படித்தது ஆங்கில இலக்கியம். ஆங்கில கவிஞர்களின் புலமையை படித்தபோது, இதேபோல் தமிழில் எழுதியிருக்கிறார்களா என படிக்க ஆரம்பித்தேன். தமிழ் நுால்களை படித்தபோது, இவ்வளவு செழுமையான உலக கவிஞர்களை தோற்கடிக்கிற அறிஞர்கள் தமிழில் உள்ளார்களே என ஆச்சரியப்பட்டு வாசிப்பை மேம்படுத்தினேன். அது தீவிர பற்றாகி ஆசையாகி 3 கட்டுரை நுால்களை எழுதியுள்ளேன்.
சங்கம் வளர்க்கும் புதுக்கோட்டை
எல்லா மாவட்டங்களிலும் தமிழ் சார்ந்த இலக்கிய சங்கங்கள் ஏதாவது கருத்தின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும். உதாரணமாக திருக்குறள் பேரவை குறள் சார்ந்தும், கம்பராமாயணம் கம்பரை சார்ந்தும் இயங்குகிறது. தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கும் தமிழ் படிப்புகளை, அறிஞர்களை, கவிஞர்களை போற்றவும், முன்னெடுக்கவும் முதன்முறையாக 2023ல் ஆரம்பிக்கப்பட்டது புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம். நிறைய அமைப்புகள் இணைந்து செயல்பட்ட நிலையில், மொழிக்கான தேவை இருக்கிறது என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் மாதந்தோறும் இலக்கிய கூட்டம், பொங்கல் திருநாளில் தமிழர் திருநாளாக கொண்டாடுகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களை பங்கேற்க வைக்கிறோம். சிறப்பு படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள விருது வழங்குகிறோம். 10 சிறந்த படைப்புகளுக்கு இலக்கியவாதி சீனு.சின்னப்பா பெயரில் விருதுகள் வழங்கி வருகிறோம். விருதுக்கு நுால்களை தேர்வு செய்ய 50 பேர் குழு உள்ளது. அவர்கள் சிறுகதை, கவிதை என வகைப்படுத்தி பிரிப்பர். ஒவ்வொரு பிரிவுக்கும் 3 நடுவர் இருப்பர். தங்கள் பிரிவில் யார் உள்ளார்கள் என அவர்களுக்கே தெரியாமல் சிறந்த நுால்களை தேர்வு செய்வர்.
இளைப்பாற இலக்கியம்
கவியரங்கம், பள்ளி நிர்வாகம், தமிழ்ச்சங்கம் என நான் ஓடிக்கொண்டிருந்தாலும் நேர மேலாண்மை முக்கியம். நேர நிர்வாகத்தில் சிறந்தவராக இருந்தால் எல்லாவற்றிலும் சாதிக்கலாம். என்னை போன்றவர்கள் ஓய்வு நேரங்களில் இலக்கியத்தில் இளைப்பாறுவார்கள். கவிதை, படைப்புகளை படிக்கும்போது நாம் இன்னொரு உலகத்திற்குள் செல்வதை உணரமுடியும். அந்த உலகம் எவ்வளவு அழகு என உணர வைப்பது இலக்கியம்தான்.
புதுக்கோட்டையில் எனது தமிழ்ச்சங்க பணிகள் உலகிற்கு சென்றடைகிறது. இதனால்தான் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் தொல்காப்பிய மாநாடு, இலங்கையில் ஹை க்கூ மாநாடு, சிங்கப்பூரில் அரசு தமிழாய்வு மாநாட்டில் பங்கேற்றேன். இதற்கெல்லாம் காரணம் இலக்கியப்பணிதான்.
எட்டையபுரத்தில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் கவிதை எழுதினாலும், உலகம் முழுவதும் அறியப்பட்டார் பாரதியார். எங்கிருந்து எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. எங்கு போய் சேருகிறது என்பதுதான் முக்கியம்.
என் அனுபவங்கள் சார்ந்து புதிய கவிதைகளும், அதுசார்ந்த கட்டுரைகளும் படைத்து வருகிறேன். எதிர்காலத்தில் ஒரு தொகுப்பாக வெளியாகும்போது நிச்சயம் மக்களின் கவனத்தை பெறும். அதற்கான முயற்சி நடந்து வருகிறது'' என தமிழ்ச்சேவையாற்றி வரும் தங்கம்மூர்த்தி, கவிதையோடு நிறைவு செய்கிறார் இப்படி...
'மதங்களின் மந்திர ஒலிகள்
மேலெழுந்து உயரும் நிலையில்
ஆரத்தழுவிக்கொள்கின்றன
ஒன்றையொன்று'