/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கம்ப்யூட்டருக்குள் ஒரு கவிதை பூ! பேச்சும், எழுத்துமாய் நல்லாசிரியை சுமித்ரா
/
கம்ப்யூட்டருக்குள் ஒரு கவிதை பூ! பேச்சும், எழுத்துமாய் நல்லாசிரியை சுமித்ரா
கம்ப்யூட்டருக்குள் ஒரு கவிதை பூ! பேச்சும், எழுத்துமாய் நல்லாசிரியை சுமித்ரா
கம்ப்யூட்டருக்குள் ஒரு கவிதை பூ! பேச்சும், எழுத்துமாய் நல்லாசிரியை சுமித்ரா
ADDED : டிச 07, 2025 09:47 AM

'சிறு தேடலை கூட நிகழ்த்தவில்லையெனில் அதிலென்ன உறவு
துளி கண்ணீரைக் கூட உதிர்க்கவில்லையெனில் அது என்ன காதல்...'
என இளகிய மனங்களை வருடும் கவிதைகளிலும், சங்க இலக்கியம் தொட்டு கீழடி வரை பேசும் இலக்கிய படைப்புகளிலும், கணீர் குரலில் கவனம்கொள்ள வைக்கும் கவியரங்கங்களிலும் வார்த்தை வீரியத்தை வரிசை கட்டும் மேடை பேச்சுகளிலும் தனி முத்திரை பதிக்கிறார், பட்டுக்கோட்டை ஆசிரியை சுமித்ரா சத்தியமூர்த்தி.
இவர் கற்பிப்பது கம்ப்யூட்டர் (பாடம்) என்றாலும் இவரது எண்ணங்களில் பூப்பது கவிதைகளாக உள்ளது. தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் அவர்...
படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ். பார்ப்பது அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் பணி. சிறுவயதி லேயே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததால், படக்கதை புத்தகங்களை தேடி தேடி வாசித்தேன். 10ம் வகுப்பு படிக்கும் போதே எழுத்தாளர் சுஜாதா எழுத்துக்களை புரிந்துகொள்ள முடிந்தது.
வாசிப்பு பயணத்தில் தொடர்ச்சி யாக 2013ல் முகநுால் பக்கத்தில் என் சிந்தனையில் உதிக்கும் கவிதைகளை பதிவிட்டு வருகிறேன். இதுவரை 400க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளேன்.
'ஆணுக்கு மீசை முளைக்கும் நாள் ஆளாகிவிட்டானென்று அலங்காரம் செய்துஅடுத்தவர் முன் நிறுத்துவதில்லை பூப்புனிதமெல்லாம் பெண்ணுக்குத்தான் புரிந்துகொள் பெண்ணே புனிதப் புண்ணாக்கு சடங்குகளை...'
போன்ற பெண்ணிய பார்வை சார்ந்த கவிதைகளுக்கு வரவேற்பு கிடைத்தது. மேலும் எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது.
கல்வி, வரலாறு, தொல்லியல் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். 'பிரம்பு வேண்டாம்; அன்பு போதும்' போன்ற கல்விசார் கட்டுரை மூலம் ஏராளமான முகநுால் நண்பர்கள் கிடைத்தனர்.
அதை தாண்டி மேடை பேச்சில் எனக்குள் எப்போதும் தீராத தாகம் ஊற்றெடுக்கிறது. தொல்லியல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., எழுத்துகள் எனக்குள் அந்த மாற்றத்தை தந்தது.
தொல்லியல், வரலாறு சார்ந்த கட்டுரைகளை ஆர்வமாக வாசிக்க துவங்கினேன். அதை எனது மேடைப் பேச்சுக்கு பயன்படுத்திக்கொண்டேன். பாலகி ருஷ்ணனின் படைப்புக்களை ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து 'ஆன்லைனில்' பேசியதை சாதனையாக நினைக்கிறேன்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களிடையே தன்னம்பிக்கை அளித்து வருகிறேன். பட்டுக்கோட்டையில் ஒரு பயிற்சி மையத்தில் பெண்களிடையே பேசும்போது அதில் பலர் தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தனர். அவர்களுக்கு 'டெட்' தேர்வு எழுதி அரசு ஆசிரியர் பணிக்கு செல்ல ஆலோசனை தெரிவித்தேன். 'இந்த வாய்ப்பை விட்டால் வழியே இல்லை. வெறியோட படிங்க சாதிப்பீங்க' என நான் அளித்த தன்னம்பிக்கையால் 9 பேர் தனியார் வேலையை விட்டு விட்டு 'டெட்' எழுதி இன்று ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இது என் தன்னம்பிக்கை பேச்சுக்கு கிடைத்த பரிசு.
ஆசிரியராக வகுப்பறையில் பாடத்தை தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெறும் சூட்சமத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். என்னிடம் மேல்நிலை பள்ளியில் கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவிலான 'செயலி'களை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பக்கிங்ஹாம் பல்கலையில் இருந்து எங்களுக்கு புதிய 'செயலி' உருவாக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஆசிரியராக பெருமைப்படுகிறேன்.
ஒரு பெண் ஆணை வர்ணிக்கும் எண்ணத் தொடர்ச்சி தான் எனக்குள் பிறந்த 'ஆசை அக்கதிணையா' என்ற புத்தகம். இதுதவிர 'பயணம்' (சிந்து முதல் வைகை வரை), 'மைத் தடங் கண்' உட்பட 5 புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என முப்பரிமாண பயணங்களில் தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது, கல்வித் துறையின் ஒளிரும் ஆசிரியர் என 30க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன்.
என் கணவர் நடத்தும் 'மனிதம்' அமைப்பு மூலம் ஏழ்மை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு உதவி செய்கிறோம்.
ஜாதி, பிரிவினை இல்லாத மாணவர் உலகம் உருவாக ஆசை எனக்குள் உள்ளது. அது தான் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்கிறார் கவிஞர் சுமித்ரா.

