ADDED : ஜூலை 23, 2023 12:53 PM

சுற்றி வரும் பூமி… எப்படித்தான் தாங்கும்… என இயற்கை குறித்து எப்போதும் பேசியும் செயல்படுத்தியும் வருகிறார் பழநியைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சதீஷ் முத்துகோபால்.
சுற்றுச்சூழல், காட்டுயிர் பறவைகள் என 450க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் தொகுப்பு கட்டுரைகள் எழுதியுள்ள சதீஷ், மென்பொறியாளராக சிங்கப்பூரில் வேலைபார்க்கிறார். இவரது புத்தகங்கள் சூழலியல் பற்றி பேசுகின்றன. 'சூழலியல் விழிப்புணர்வே என் எழுத்து' என்று சொல்லும் சதீஷ், 'வேலைக்காக வெளிநாடு சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பற்றில் தொடர்ந்து வலைதளங்களில் சுற்றுச்சூழல் குறித்து எழுதி வருகிறேன்' என விவரிக்க ஆரம்பித்தார்.
மேற்கு மலைத்தொடரின் ஒரு தொடர்ச்சி தான் பழநிமலை. பழநி மலைத்தொடரின் மையத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது. 'அப்பர் ஹில்ஸ்' பகுதி தான் புல்வெளிகளுடன் சோலைக்காடுகள் இருக்கக்கூடிய பகுதி. இந்த புல்வெளிகள் தான் ஆண்டுமுழுவதும் மழைநீரை தேக்கி வைத்து ஆறுகளாக, ஓடைகளாக தந்தது. 85 சதவீத புல்வெளி் அழிந்து விட்டது.
ஒரு மலை எவ்வளவு தாங்கும் என்ற அடிப்படை புரிதல் அரசிடம் இல்லை. அளவுக்கதிமான வாகனங்கள் கோடையில் வருகின்றன. ஒருநாளைக்கு இவ்வளவு வாகனங்கள் தான் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால் விடுமுறை மட்டுமின்றி மற்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மலையும் நிம்மதி பெருமூச்சு விடும்.
நான் எழுதிய 'யாருக்கானது பூமி' கட்டுரைத்தொகுப்பில் வனவிலங்கு, புலிகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு அனுபவங்களை எழுதியுள்ளேன். 'துாவி' என்ற புத்தகம் பறவைகள் பற்றிய கவிதை தொகுப்பு. தமிழகத்தின் 62 பறவையினங்களை அடிப்படையாக வைத்து கவிதை எழுதியுள்ளேன். ஒவ்வொரு பறவைக்கும் ஒரு கவிதை என அதன் அறிவியல் சூழல், எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என எழுதியுள்ளேன். இந்த புத்தக ராயல்டி தொகையை பழநிமலை பாதுகாப்பு குழுவிற்கு வழங்கியுள்ளேன். அதன்மூலம் மரக்கன்றுகள் வாங்கி நடுகின்றனர்.
ரோடு அமைப்பதில் இருந்தே சுற்றுச்சூழல் மாசு தொடங்குகிறது. ரோட்டுக்கான ஜல்லிகளை பெற மலையை பெயர்த்தெடுக்கிறோம். ஆனால் காண்ட்ராக்டர் மூலம் தரமற்ற ரோடு அமைக்கும் போது வெறுமனே ஊழல், முறைகேடு என்பதோடு நிறுத்தி விடுகிறோம். ரோடு அமைக்க மீண்டும் மலையை பெயர்க்க வேண்டியுள்ளதே. அதைப்பற்றி யாரும் யோசிக்கவில்லை. இதை அரசும் உணர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத திட்டங்களை தீட்ட வேண்டும்.
'யாருக்கானது பூமி' புத்தகத்திற்கு, தமிழ்நுால் விற்பனை மேம்பாட்டு குழுமம் 2014 - 15ல் சிறந்த சுற்றுச்சூழல் விருது வழங்கியது.
மிச்சமின்றி அழிந்து போன பறவை, விலங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளேன். தமிழகத்திற்கு உரிய பறவை கானமயில். தரையில் முட்டையிடும். அதிக எடையுள்ள 3 முதல் 4 அடி உயரமுள்ள பறக்கக்கூடிய பறவை இது. கூடு கட்டாது. ஒருமுறை ஒரு முட்டை மட்டுமே இடும். அருப்புக்கோட்டை, கோவை, சமயபுரத்தில் கானமயில்கள் வாழ்ந்ததாக ஆங்கிலேயர் காலத்து பதிவுகள் கூறுகின்றன. தமிழகத்தில் இப்பறவையினம் அழிந்தேவிட்டது. தற்போது ராஜஸ்தானில் 100 எண்ணிக்கையில் இப்பறவைகள் உள்ளன. அவற்றை தமிழக அரசு குறைந்த எண்ணிக்கையில் வாங்கி இனப்பெருக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும்.
2050ல் எதிர்பார்க்கக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்னைகள் 2040ல் வருவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2015ல் சென்னை மழையால் மூழ்கியது. நாம் என்ன நடவடிக்கை எடுத்தோம். இப்படியே கண்டுகொள்ளாமல் இருந்தால் இயற்கை பேரிடர்களை சமாளிப்பதற்கே அரசு செலவு செய்ய நேரிடும். சுகாதாரம், வளர்ச்சிப் பணிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. சூழல் குறித்த புரிதல் நமக்கு வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் அதற்கேற்ப செயல்பட வேண்டும். அரசு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.
இவரது படைப்புகளை www.writersatheesh.comல் ரசிக்கலாம்.
