/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
விழாக்களை பிரமாண்டமாக்கும் ஆரத்தி தட்டுகள்
/
விழாக்களை பிரமாண்டமாக்கும் ஆரத்தி தட்டுகள்
ADDED : மே 05, 2024 11:00 AM

பிறந்தநாள் விழா, சடங்கு, திருமணம், வளைகாப்பு விசேஷங்களில் வைக்கப்படும் அழகிய ஆரத்தி தட்டுகள் விழாக்களின் பிரமாண்டத்தை எடுத்துக் காட்டுகிறது என்கிறார் மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த ரமா.
கலையும் கைவினையும் சேர்ந்த இந்த புதிய பரிமாணம் குறித்து ரமா கூறியது:
கலை, கைவினைப்பொருட்களில் ஈடுபாடு அதிகம். மகள் தாரணி திருமணத்திற்கு தயாரான போது விருந்தினர்களை வரவேற்க புதுமையாக ஏதாவது செய்ய நினைத்தேன். வரவேற்பின் போதே அசத்த ஆரத்தி தட்டுகளை உருவாக்க ஆரம்பித்தேன்.
வட்டம், சதுரம், செவ்வக பலகையாக, ஊஞ்சல் வடிவில் மரத்துண்டுகளை கடையில் வெட்டி வாங்கி வந்தேன். பெயின்ட் பூசி வெல்வெட் துணியால் மூடி சுற்றிலும் வண்ண லேஸ்கள் வைத்து தைத்தேன். உள்ளே வீடு, பச்சை புல்வெளி, தோட்டம் நடுவில் பொம்மைகள் வைக்க வேண்டும். மணமக்கள் ஆடைக்கேற்ப பொம்மைகளுக்கு ஆடை அணிவித்து பூக்களால் அலங்கரித்து 21 வகையான ஆரத்தி தட்டுகளை மகளின் திருமணத்தின் போது வரவேற்பு பகுதியில் வைத்தேன்.
எல்லோரின் பார்வையும் ஆரத்தி தட்டுகளின் மீதே இருந்தது. பார்த்த பலரும் இதை எங்கள் வீட்டு விசேஷத்திற்கு கொடுங்கள் என்று கேட்டனர். அப்போது தான் அவற்றை வாடகைக்கு விட நினைத்தேன். கூடுதல் ஆரத்தி தட்டுகளை தயாரித்து அதையே தொழிலாக தொடர்ந்தேன்.
ஆண், பெண் பொம்மைகளுக்கு சடங்கு, திருமணம், வளைகாப்பு விசேஷத்திற்கேற்ப ஆடை அணிவிக்க வேண்டும். பொம்மைகளின் தேர்வும் சரியாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பெங்களூருவில் இருந்து நுால் பொம்மைகளை வாங்கி பயன்படுத்துகிறேன். லேஸ், செயற்கை பூக்கள், பாசிமணிகள், குந்தன் கற்கள் என அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் மதுரையில் கிடைக்கிறது.
வாடகைக்கு யார் கேட்டாலும் நானே தட்டுகளுடன் நேரில் சென்று வரவேற்பு பகுதியில் வைத்து விடுவேன். ஆலம் சுற்றி முடித்ததும் சேதாரமில்லாமல் எடுத்து வருகிறேன். தேவைக்கேற்ப 11 முதல் 21 தட்டுகளை கேட்பர். திருமண ரிசப்ஷனில் இளம்பெண்கள் வண்ண உடையணிந்து ஆரத்தி தட்டுகளுடன் மாப்பிள்ளைக்கு ஒவ்வொருவராக வந்து ஆலம் சுற்றும் போது விழா பிரமாண்டமாக தெரியும். அது இப்போதைய பேஷன்.
சமீபகாலமாக குழந்தை பெயர் சூட்டலுக்கு ஆரத்தி தட்டு கேட்கின்றனர். இதற்கு 5 தட்டுகள் வரை தவழ்வது, உட்கார்வது, நடப்பது போன்ற பொம்மைகளை கொண்டு தயாரித்து விற்பனைக்கு கொடுப்பேன். இவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.
ஒரு தட்டை அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையே பயன்படுத்த முடியும். அதன் பின் வேறொரு கலை வடிவத்தில் புதிதாக தயாரித்தால் தான் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும். வருமானம் என்பதைத் தாண்டி எனது கற்பனைக் குதிரைக்கு தீனி போடும் இந்த கலை என்னை புத்துணர்ச்சியுடன் வழிநடத்துகிறது என்றார்.
இவரிடம் பேச: 94420 59435