ADDED : டிச 22, 2024 01:16 PM

பட்டுச்சேலையில் நிறங்கள், வகைகள் இருந்தாலும் காப்பர், சில்வர், கோல்ட் நிற பிளவுஸ்களில் ஆரி எம்பிராய்டரி வேலைப்பாடு செய்தால் அத்தனை சேலைகளுக்கும் அழகாக பொருந்தும் என்கிறார் மதுரை மேலக்காலைச் சேர்ந்த வழக்கறிஞர் புஷ்பலதா.
'படித்தது பி.ஏ., பி.எல்., என்றாலும் திருமணத்திற்கு பின் குழந்தைகளை கவனிக்க வழக்கறிஞர் தொழிலுக்கு தற்காலிக விடுமுறை அளித்தேன். வீட்டில் ஓய்ந்து உட்காரக்கூடாது என்பதற்காக ஆரி எம்பிராய்ட்ரி கற்று சொந்தமாக பிசினஸ் செய்கிறேன்' என விவரித்தார்.
அவர் கூறியது: மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனம் சார்பில் மதுரை மேலக்காலில் கைவினைப்பொருட்களுக்கான 28 நாட்கள் பயிற்சி அளித்தனர். ஏற்கனவே ஆரி எம்பிராய்டரி வேலைப்பாடும் கற்றிருந்ததால் இந்த பயிற்சி எளிதாக இருந்தது. இலவச பயிற்சியில் பட்டுநுாலில் வளையல், காதணிகள், குஷன், டை அன்ட் டை முடிச்சு, ஆரி எம்பிராய்டரி, பேப்ரிக், கிளாஸ் பெயின்டிங், பாட்டில் ஓவியங்களை பயிற்சியாளர்கள் தேன்மொழி, ஜெயலெட்சுமியிடம் கற்றுக் கொண்டோம்.
வீட்டிலேயே பிளவுஸ்களில் டிசைன் செய்து அணிய ஆரம்பித்தேன். சேலை நிறத்துக்கு பொருத்தமான காதணி, வளையல் அணிந்து வெளியிடங்களுக்கு செல்லும் போது பிளவுஸின் நேர்த்தி மற்றவர்களை கவர்ந்தது. அதன் மூலம் தானாக ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தது.
களிமண்ணில் தயாரித்த வளையல், காதணி, பென்டன்ட், மாலைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பட்டு நுால் வளையல்களை அணியும் சுரிதார், சேலைக்கேற்ப அணியலாம். வீட்டிலேயே பெண்கள் எளிதாக பட்டுநுால் வளையல் தயாரிக்கலாம்.
வளைகாப்புக்கு செல்லும் போது கண்ணாடி வளையல்கள் தருவர். ஒவ்வொருவர் வீட்டிலும் அந்த வளையல்கள் நிறைய கிடக்கும். கண்ணாடி, பிளாஸ்டிக் பழைய வளையல்களை புதிதாக மாற்றலாம். அகலம், தடிமனுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று வளையல்களை எடுத்து அவற்றை ஒட்ட வேண்டும். அதற்கு மேல் பட்டு நுாலை அடர்த்தியாக ஒட்டி அதன் மேல் பாசிமணி, குந்தன் கற்கள், ஜமிக்கி வைத்து அழகுபடுத்த வேண்டும். வளையல் ஒட்டிய தடமோ, கற்கள் பதித்த தடமோ தெரியக்கூடாது. ஆரம்பத்தில் ஒரு வளையல் செய்ய அரைநாள் கூட ஆனது. பட்டுச்சேலையின் பார்டர், உடல் நிறத்திற்கு ஏற்ப இரு வண்ணங்களில் வளையல் தயாரிக்கலாம்.
ஆரி எம்பிராய்டரியில் 'டாப்லட் பீட்ஸ்' விலை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த பாசிமணிகளை ஒட்டினால் துாரத்தில் இருந்து பார்த்தாலும் நேர்த்தியான வேலைப்பாடு தெரியும். பட்டுச்சேலை, பேன்சி காட்டன் எந்த சேலையாக இருந்தாலும் ஆரி எம்பிராய்டரி பிளவுஸ் அணிந்தால் கம்பீரமாக இருக்கும். கோல்ட், சில்வர், காப்பர் நிற பிளவுஸ்களில் மட்டும் ஆரி வேலைப்பாடு செய்து கொண்டால் எல்லா நிற சேலைகளுக்கும் பொருத்தமாக அணியலாம். செலவும் குறையும் என்றார்.
அலைபேசி: 93608 53754.