/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பாட்டெழுதி பாடி இசையமைக்கும் அமெரிக்க 'தமிழ்ப்பசங்க'
/
பாட்டெழுதி பாடி இசையமைக்கும் அமெரிக்க 'தமிழ்ப்பசங்க'
பாட்டெழுதி பாடி இசையமைக்கும் அமெரிக்க 'தமிழ்ப்பசங்க'
பாட்டெழுதி பாடி இசையமைக்கும் அமெரிக்க 'தமிழ்ப்பசங்க'
ADDED : மே 18, 2025 06:25 AM

அமெரிக்காவில் நாங்கள் சுவாசிக்கும் காற்றில் தமிழ்மூச்சின் சுவாசம் பிடித்து தமிழால் ஒருங்கிணைந்து குழுவாக தமிழ் ஆல்பம் தயாரித்து வெளியிடுகிறோம் என்கிறார் மதுரையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கனிஷ்க் ராஜ்.
எங்களின் பொதுவான இணைப்பு, ரசனையும் தமிழ்மொழியும் தான் என்று ஆரம்பித்தார்.
''மதுரையில் படிக்கும் போது மூன்றாம் வகுப்பில் கிடார் வாசிக்க கற்றுக் கொண்டேன். 8ம் வகுப்பு படிக்கும் போது வீட்டிலிருந்த பழைய கீபோர்டில் நோட்ஸ் வைத்து வாசிக்க கற்றுக் கொண்டேன். ஊட்டியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது ஆங்கிலப்பாடல்களை கேட்ட போது தான் ஆல்பம், மியூசிக் என்றொரு உலகமே தெரியவந்தது. ஆங்கில ராப் பாடல்கள் தான் எனக்கு உத்வேகம் தந்தது.
'கவர் சாங்' எனப்படும் ஏற்கனவே உள்ள ஆங்கில பாடலுக்கு நானே பாட ஆரம்பித்து வீடியோ தயாரித்தேன். சினிமா பாடலை பற்றி அறிமுகம் இல்லாததால் ஆங்கில பாடல் எழுதி ஆங்கில ஆர்டிஸ்ட்டுகளை பாட வைத்தேன். ஓரளவுக்கு மேல் எப்படி சாதிப்பதென தெரியவில்லை. ஆங்கில பாடல்களை உருவாக்கும் போது எனது உணர்வுகள் அதனோடு ஒன்றாமல் திணறினேன். தாய்மொழி தமிழ் தான் என்னை எழுதத் துாண்டும் என்பதால் சிறு சிறு பாடல்களை எழுதினேன். சாப்ட்வேரில் பாடலை கம்போசிங் செய்து பாடினேன். பாட்டுக்காக 'பீட்ஸ்' உருவாக்க ஆரம்பித்தேன்.
பிளஸ் 2 முடித்த பின் கொரோனா 'லாக்டவுன்' நேரத்தில் இசைக்கான சாப்ட்வேர் கற்றுக் கொண்டேன். பாடலை எவ்வாறு சமூகவலைதளத்தில் பதிவு செய்வதென தெரிந்து கொண்டேன்.
வெட்டி பந்தா வேணாம்... கெத்தா வரணும் தானா...ஏரியா பாய்ஸ்லாம் சீனா... என்ற பாடல் தான் எனது முதல் தமிழ் ஆல்பம், மார்ச் 2024ல் வெளியானது. இதில் ஒருபகுதி பாடலை ஸ்கார்ஸ் என்ற பெயரில் நான் பாடினேன். 2வது பகுதியை நண்பர் ஜெருசன் பாடினார். முழு உழைப்பையும் அதில் கொட்டினோம். அதை இன்ஸ்டாவில் பதிவு செய்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. டார்லிங் என்ற அடுத்த பாடல் மூலம் இசையின் இன்னொரு வடிவமாக... மழையில... பாடல் ஜனவரியில் எழுதி வீடியோ வெளியிட்டேன்.
சென்னையில் பி.டெக் ரோபோடிக்ஸ் முடித்து அண்மையில் அமெரிக்கா பிலடெல்பியாவில் உள்ள ட்ரக்ஸல் பல்கலையில் எம்.எஸ்., படிப்பில் சேர்ந்தேன். அமெரிக்காவில் தமிழ் பேசும் ஆர்டிஸ்ட் தேடிப் பார்த்த போது ஆரம்பம் என்ற குழு இருப்பது தெரிந்தது. வெட்டிபந்தா பாடலை பார்த்து வாய்ப்பு தந்தனர். ஆல்பம் செய்வதற்கான 15 பாடல்கள் தயாராவதாகவும் அதில் 2 பாடல்களை எழுதி, பாட அனுமதி தந்தனர்.
அங்கு தமிழ் பேசும் நண்பர்கள் கிடைத்ததால் எனது தமிழ் ஆல்பம் பணியை தொடர்ந்தேன். அமெரிக்க தமிழ் கலைஞர்கள் 5 பேர் சேர்ந்து மாலா... மாலா பாடலுக்கு தயாரானோம். ஒவ்வொருவரும் தங்களது பாடல் பகுதியை தானே எழுதி பாட வேண்டும். அப்படி பாடி கடந்த வாரம் ஆல்பமாக வெளியிட்ட போது சந்தோஷமாக இருந்தது.
ஸ்பானிஷ், ஆப்ரிக்கன் பாடல்கள், ஆங்கிலப்பாடல்கள் கேட்பது பிடிக்கும் என்றாலும் மெலடி தமிழ் தான் எனக்கு வசதியாக இருக்கிறது. இந்தகால ரசனைக்கேற்ப நிறைய தமிழ், கொஞ்சம் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுகிறேன். நான் பாடும் பாடல் எல்லாம் உள்ளிருந்து வருவது தான். இதை கலை வடிவமாக மட்டும் பார்க்கிறேன். என்னுடைய கலைக்கு நான் உண்மையாக இருப்பதால் அது கண்டிப்பாக மற்றவர்களை சென்றடையும் என்றார்.