'படைப்புகளை வெளியிட முடிவதில்லை' ஆதங்கப்படுகிறார் பனியன் தொழிலாளி
'படைப்புகளை வெளியிட முடிவதில்லை' ஆதங்கப்படுகிறார் பனியன் தொழிலாளி
ADDED : மார் 29, 2026 05:57 AM

''வெளிச்சம் வேண்டாம்: வாழ்க்கையை தொடருங்கள்: விட்டில் பூச்சிகளே!'': இதுபோன்ற ஏராளமான 'ைஹக்கூ' கவிதைகள் எழுதி, அதை புத்தகமாக வெளியிட துவங்கியிருக்கிறார், திருப்பூரில் வசிக்கும் பனியன் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 63.
அவரது, 2வது கவிதை தொகுப்பான 'வைக்கோல் தொப்பி' என்ற புத்தக வெளியீட்டு விழா, திருப்பூர், தமிழ் அந்தாதி அமைப்பின் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
அமைப்பின் தலைவர் சிவா இஸ்ரவேல், அசோக் மாதேஷ் நுாலை வெளியிட, வனிதா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் உள்ளிட்ட பலரும் அவரை கவிதை தொகுப்பை பாராட்டி பேசினர்.
தனது கவிதை பயணம் குறித்து கிருஷ்ணமூர்த்தி, இவ்வாறு சிலாகித்தார்...
சின்ன வயசில இருந்தே எனக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். சொந்த ஊரான உடுமலை மலையாண்டிபட்டினத்தில், ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியன்னைக்கு மேடை நாடகம் போடுவாங்க. நான், 2 நாடகங்களை இயக்கியிருக்கேன்; நடிச்சும் இருக்கேன். அப்புறம் நீண்ட இடைவெளியாகிடுச்சு. திரும்பவும், சமூக ஊடகங்கள் வாயிலாக கவிதை எழுத துவங்கினேன்.
நிறைய எழுத்தாளர்கள் அதை படிச்சு பார்த்துட்டு என்னை பாராட்டினாங்க; அப்போ தான் அது 'ைஹக்கூ'ன்னே எனக்கு தெரிய வந்துச்சு. இப்போ, இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டிருக்கேன். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை வாயிலா வலியுறுத்துகிறேன். என்னை போன்ற பல படைப்பாளர்கள் செலவுக்கு வழியின்றி, தங்கள் படைப்புகளை புத்தகமாக வெளியிட முடியாமல் இருக்காங்க.
இருந்தாலும், இலக்கிய ஆர்வமுள்ள சில அமைப்புகள், எங்களை ஊக்குவிப்பதும், புத்தகம் வெளியிட ஏற்பாடு செய்வதும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும், கண்டிப்பா ஜெயிக்கலாம்.
