/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ரூ.500 செலவில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியலாம்: ராமேஸ்வரம் விஞ்ஞானி மணிராஜன்
/
ரூ.500 செலவில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியலாம்: ராமேஸ்வரம் விஞ்ஞானி மணிராஜன்
ரூ.500 செலவில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியலாம்: ராமேஸ்வரம் விஞ்ஞானி மணிராஜன்
ரூ.500 செலவில் புற்றுநோய் பாதிப்பை கண்டறியலாம்: ராமேஸ்வரம் விஞ்ஞானி மணிராஜன்
ADDED : அக் 20, 2024 12:06 PM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம். செந்தில் மணிராஜன், பைபர் ஆப்டிக் பயோ சென்சார் முறையில் அதி விரைவில் நோயை கண்டறியும் ஆராய்ச்சியில் சாதனை செய்து உலக விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
செந்தில் மணிராஜன் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர், துறை தலைவராக பணி புரிகிறார். பைபர் ஆப்டிக் கம்யூனிகேஷன், ஆப்டிகல் சென்சார் பிரிவில் ஆராய்ச்சி செய்கிறார். ஆப்டிகல் பைபர் மூலமாக நோயை ஆரம்ப நிலையில் அதிவிரைவாக கண்டறிதலில் தற்போது தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவரை பாராட்டி இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தில் 'சிறந்த ஆராய்ச்சியாளர்' விருது வழங்கி சென்னை அண்ணா பல்கலை கவுரவித்தது. தொடர்ந்து 3 முறை உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
ஆப்டிக்கல் பைபர் விதிகளை பின்பற்றி சென்சார் முறையில் ஒருவரது ரத்தத்தை பரிசோதனை செய்து நோய் பாதிப்பு உள்ளதா என்பதை அதி விரைவாக கண்டறிய முடியும் என தனது ஆராய்ச்சியில் நிரூபணம் செய்துள்ளார்.
செந்தில் மணிராஜன் கூறியதாவது: எனது தந்தை முருகன், தாய் ராஜேஸ்வரி. ஓட்டல் தொழில் செய்து என்னை படிக்க வைத்தனர். பிளஸ் 2 வரை தமிழ்வழி கல்வி பயின்றேன். எம்.எஸ்.சி., எம்.பில்., இயற்பியல் முடித்து ஆப்டிகல் பைபர் தொழில் நுட்ப பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 3 ஆண்டுகள் புதுச்சேரி பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளராக புணிபுரிந்தேன். 2014ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து எனது ஆராய்ச்சி விஷயங்களை பகிர்ந்தேன்.
ஆரம்ப நிலையில் எனது ஆராய்ச்சியானது ஒளியாய சாலிட்டான்களை பயன்படுத்தி தொலைத்தொடர்பு துறையில் அதிவேகமாகவும், இழப்பு இல்லாமலும் தகவல்களை ஆப்டிக்கல் பைபர் வழியாக அனுப்புவதில் இருந்தது. 2017ல் ஆப்டிகல் பைபர் பயன்படுத்தி பலவகையான சென்சார் வடிவமைப்பதில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பயோ சென்சார் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன்.
ஆப்டிகல் பைபர் பயன்படுத்தி நோய் கண்டறிய ஸ்கேனிங், படம் எடுக்கும் முறை கிடையாது. சாதாரண நிலையில் ரத்தத்தின் மதிப்பு, நோய் பாதித்தால் அதன் தன்மை குறித்து கண்டறியலாம். ஒருவருக்கு புற்று நோயின் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 3 நாட்கள் வரை ஆகும்.
மார்பக புற்று நோய், தோல் புற்றுநோய், முகபூச்சுகளில் உள்ள வேதிப்பொருள் காரணமாக ஏற்படும் புற்று நோயை ஆப்டிக்கல் பைபர் பயோ சென்சார் முறையில் 3 மணி நேரத்தில் கண்டறியலாம்.
மத்திய அரசின் நிதி உதவியுடன் சிங்கப்பூர், மலேசியா பல்கலை, ஆய்வகங்களில் ஆப்டிகல் சென்சார் செயல்பாடுகளை சோதனை செய்து அதை உறுதி செய்துள்ளேன். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து, கனடா, தென் ஆப்ரிக்கா, ஜக்கிய அரபு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்துள்ளேன்.
வெளிநாடுகளில் உள்ளது போல இங்கு ஆய்வகம் அமைக்க ரூ.50 லட்சம் வரை செலவாகும். மத்திய, மாநில அரசு நிதி கிடைத்தால் புற்றுநோய் கண்டறியும் ஆய்வகத்தை கல்லுாரியில் தொடங்கலாம். ரத்ததை பரிசோதனை செய்து, ஆப்டிகல் பைபர் வழியாக லேசர் (லைட்) அனுப்பி புற்றுநோய் கட்டியின் நிலையை அறியலாம். ஸ்கேன் போல பெரிய அறை தேவையில்லை. ஒரு கம்ப்யூட்டர் மேஜை போதும். லேப்டாப் போல எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். நோயாளி வரவேண்டியது இல்லை. இருப்பிடத்திற்கே எடுத்து செல்ல முடியும். அதிகபட்சம் ரூ.500 செலவு மட்டுமே.
நுாறுக்கு மேற்பட்ட இயற்பியல் ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். கல்லுாரி மாணவர்களுக்காக மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளேன். சிறந்த ஆராய்ச்சியாளர் விருது கிடைத்துள்ளது.
தொடர்ந்து இயற்பியல் துறையில் மனித குலத்திற்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சாதனை புரிய விரும்புகிறேன் என்றார்.
இவரை வாழ்த்த 99407 40238