தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி

கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி

கர்நாடக இசையே கனவு: சிறகடிக்கும் தங்கச்சிமடம் சிறுமி

1


ADDED : ஜூன் 07, 2026 11:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:18 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரதிக் ஷா, கர்நாடக இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். வெல்டிங் தொழிலாளியான தந்தை பாலசுப்ரமணியன், தாய் கனகராணியின் ஊக்கத்துடன் மூன்று வயதிலிருந்தே இசையை கற்று வந்தார். இன்று பல்வேறு மேடைகளில் தன்னம்பிக்கையுடன் அரங்கேற்றம் செய்து வருகிறார். கர்நாடக இசை மட்டுமின்றி இசைக் கருவிகள் வாசிப்பதிலும் திறமையை வளர்த்துள்ளார்.

இசை மீது ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் கற்க முடியும் என்பதற்கு உதாரணமான பிரதிக் ஷா தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்...

எனது குடும்பத்தில் நான் தான் முதல் முறையாக சங்கீதம் கற்றுள்ளேன். தற்போது கர்நாடக சங்கீதம், கீ-போர்டு வாசிப்பதில் கற்று தேர்ந்து அரங்கேற்றம் செய்துள்ளேன். ஆரம்பத்தில் பக்தி, திரைப்படப் பாடல்களை பாடி வந்த நிலையில் கர்நாடக சங்கீதத்தின் மீது தனி ஈர்ப்பு வந்தது.

சங்கீதத்தை முறையாக பயின்று பாட வேண்டும் என பெற்றோரிடம் வலியுறுத்தினேன். அப்போது கேரளாவில் வசித்ததால் இசை ஆசிரியர் காயத்ரி என்பவ ரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். ராமேஸ்வரத்திற்கு குடிபெயர்ந்தவுடன் இசை கற்க முடியாமல் போனது. காயத்ரி ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் கற்று வருகிறேன்.

ராகம், தாளம், ஸ்ருதியை முறையாக கற்றபின் பாடல் படிக்கும் போது அதீத நம்பிக்கை வந்தது. பாடுவதை விட்டுவிட்டு கல்வியில் கவனம் செலுத்த பலரும் என்னிடம் கூறுவர். புத்தக பாடத்தை பாடல் போன்று படித்து ஞாபகம் வைத்துக் கொள்வேன். அதனால் பாடலுடன் சேர்ந்து படிப்பிலும் தேர்ச்சி அடைந்து விடுவேன். ராமநாதபுரத்தில் தனியார் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் தேர்வாகினேன். அந்த நிகழ்வில் பங்கேற்றது எனது வாழ்வில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

முறையாக சங்கீதம் கற்றபின் இசையை வேறு விதமாக உணர ஆரம்பித்தேன்.

கர்நாடக இசை கற்றதால் குரல் வளமும் அதிகரித்தது. இசை குறித்து தெரிந்த பின் எந்த பாடலாக இருந்தாலும் அதில் இசை நுணுக்கங்களை கவனிக்க ஆரம்பித்தேன். இசை பயிற்சி எடுக்கும் நாட்களில் மனஅழுத்தம் கூட குறைந்து மனம் அமைதியாக இருக்கும்.

கர்நாடக இசையை தினமும் தவறாமல் பயிற்சி செய்யும் போது ஒழுக்கமும் பொறுமையும் வாழ்வியலில் ஒன்றாக மாறிவிடும். அதனால் தினமும் தவறாமல் பயிற்சி செய்வேன். புதிய ராகங்களை கற்றுக் கொள்வது மிகவும் பிடிக்கும்.

பள்ளியில் கலாசார நிகழ்ச்சிகளில் பாடும் போது ஆசிரியர்களும் நண்பர்களும் பாராட்டுவது ஊக்கமளிக்கிறது. எதிர் காலத்தில் பெரிய மேடைகளில் கர்நாடக இசை பாடுவதே என் கனவு. அடுத்தக்கட்டமாக இசைக் கருவிகளை வாசிக்கும் முயற்சி மேற்கொள்ளவுள்ளேன். கீபோர்டு, வயலின் கருவிகளில் அடிப்படை பயிற்சி எடுத்துள்ளேன் என்றார்.

கர்நாடக இசைப் பாடகியாக வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் பிரதிக் ஷா, கிராமப்புற குழந்தைகளுக்கும் ஒரு நம்பிக்கை விளக்காக திகழ்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us