தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ சாதனைப் 'பளு' சுமக்கும் சந்திரசேகரன்

 சாதனைப் 'பளு' சுமக்கும் சந்திரசேகரன்

 சாதனைப் 'பளு' சுமக்கும் சந்திரசேகரன்


ADDED : மே 03, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய, சர்வதேச அளவில் எல்லா துறைகளையும்விட விளையாட்டு பொதுமக்களை, குறிப்பாக இளைஞர்களை அதிகம் கவர்வதாக உள்ளது. கால்பந்து, ஹாக்கி, செஸ், கிரிக்கெட் போன்றவை உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், வருங்கால தலைமுறைகளை விளையாட்டு பக்கம் கொண்டு சென்றுள்ளது வரவேற்கத்தக்கதே.

இவ்வகையில் விளையாட்டு வீரர்களை உருவாக்க தனது முழுத்திறனையும் பயன்படுத்தி வரும் ஒருவர்தான் சந்திரசேகரன் 56. மதுரை ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், புதிய வீரர்களை உருவாக்குவதையும் தனது மூச்சாகக் கொண்டுள்ளார்.

அடிப்படையில் பளுதுாக்கும் வீரரான இவர், சர்வதேச அளவில்... ஏன் ஒலிம்பிக்கில் வெற்றியின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார். அங்கு பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், ஆழ்மனதில் நம்மால் பெற இயலாத பக்கத்தை, நம்மால் உருவாகும் வீரர் ஒருவர் பெற்றார் என்று வரலாறு சொல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவுடன் செயல்பட்டு வருகிறார். மறைந்த ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனிடம் 'அர்ஜூனா' விருது பெற்றுள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருவள்ளூர். மதுரையில் நான்கைந்து ஆண்டுகளாக ரயில்வேயில் பணியாற்றும் இவரது சர்வதேச போட்டியின் சாதனைகள் இதோ: 1987ல் கொல்கத்தாவில் நடந்த தெற்காசிய போட்டியில் தங்கம். 1988 ல் தென்கொரியாவில் நடந்த ஒலிம்பிக்கில் 17 வது இடம்.1989ல் பிரிட்டனில் நடந்த போட்டியில் தங்கம். 1990ல் ஆக்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம். அதே ஆண்டில் நடந்த பெய்ஜிங் ஏசியன் கேம்ஸில் 4வது இடம்.

1992ல் பிரிட்டனில் நடந்த சில்வர் டிராகன் போட்டியில் தங்கம், மறு ஆண்டில் அங்கு நடந்த அதே போட்டியிலும் அதே தங்கம் பெற்றார். 1994 கனடாவில் நடந்த காமன் வெல்த் போட்டியில் வெள்ளி. 1994ல் ஜப்பானில் நடந்த ஏசியன் கேம்ஸில் பங்கேற்றார். 1995 ல் சென்னையில் நடந்த தெற்காசிய போட்டியில் தங்கம், 1996 ல் ஜப்பானில் நடந்த ஏசியன் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றவர், அதே ஆண்டில் மீண்டும் ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற போராடி 11வது இடம் பெற்றார்.

1990ல் இவர் 52 கிலோ எடைப்பிரிவில் 245 கிலோ, 1992ல் 56 கிலோ பிரிவில் 267 கிலோ, 1993ல் 59 கிலோ பிரிவில் 287 கிலோ, 1994ல் 64 கிலோ பிரிவில் 280 கிலோ பளுதுாக்கி பலம்காட்டியுள்ளார். இப்படி சர்வதேச சாதனை புரிந்தவர், தேசிய போட்டியில் 1988ல் வெள்ளியுடன் கணக்கை துவக்கினார். 1996 வரை நடந்த 11 போட்டிகளில் தங்கம் குவித்தார். 1997ல் சென்னையில் நடந்த போட்டியில் மீண்டும் வெள்ளி வென்றார். இத்தகைய சாதனை 'பளு'க்களை சுமக்கும் இவர், ஒலிம்பிக்கை வெல்ல வேண்டும் என்ற கனவில் சொந்த ஊரில் முற்றிலும் இலவசமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இதில் பளுதுாக்கும் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் சாதனையில் தனது 'ஆத்ம' வெற்றியை நினைக்கிறார்.

அவர் கூறியதாவது: பளுதுாக்கும் ஆர்வம் எனது குடும்பத்தில் இருந்தே துவங்கியது. எனது மூத்த சகோதரரும் பளுதுாக்கும் வீரர். அவரை பார்த்தே எனக்கும் ஆர்வம் தொற்றியது. இப்போதும் எங்கள் குடும்பத்தில் மாமா இருவர், அண்ணன் மகன்கள் இருவர், நண்பர்கள் 3 பேர் பளுதுாக்கும் வீரர்களாக ஜொலிக்கின்றனர். விளையாட்டு தவிர சுற்றுச் சூழலிலும் ஆர்வம் உண்டு. மதுரை ரயில்வே மைதானத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரான சுதாகரனும், நானும் மரங்களை பராமரித்து மைதானத்தை 'குளுகுளு'வென ஆக்கியுள்ளோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us