ADDED : ஆக 23, 2026 05:35 PM

ஜி. எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ். எழுதிய, 'மலையாள திரை உலகின் எழுத்தச்சன் முதுகுளம் ராகவன்பிள்ளை' நுால் குறித்து, எழுத்தாளர் சுபா தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கோவையில் கலெக்டராக இருந்தவர் சமீரன். இப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர். மலையாள திரை உலகின் எழுத்தச்சன் முதுகுளம் ராகவன்பிள்ளை குறித்தும், மலையாள திரைப்பட இயக்குனர் பத்மராஜன் குறித்தும் இரண்டு நுால்களை எழுதி இருக்கிறார். இரண்டும் தமிழில் வந்துள்ளன.
முன்னுரையை படித்த பிறகு இந்த நுாலை முழுமையாக படிக்க வேண்டும் என்று தோன்றியது.
'திருவனந்தபுரத்தில் மருத்துவம் படித்த பின் கிராம சேவைக்காக முதுகுளம் மருத்துவமனையில் சேர்ந்தேன். சொந்த ஊரிலேயே நியமனம் கிடைத்ததில் மகிழ்ச்சி. சேர்ந்த சில நாட்களிலேயே நோயாளிகளுடன் ஓர் ஆத்மார்த்தமான உறவு ஏற்பட்டது.
இந்த நோயாளிகள் சற்று வித்தியாசமானவர்கள். வயது முதிர்வும், அனாதை தன்மையும், தனிமையும்தான் பிரச்னைகள். படுத்த படுக்கையில் சிகிச்சைக்கு வருபவர்கள்.
சிகிச்சையை விட தங்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக மருத்துவமனையை கருதினர்' என்று எழுதி இருக்கிறார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர், முதுகுளம் ராகவன் பிள்ளையை பற்றி சில தகவல்களை சொல்லி இருக்கிறார். அதை கேட்டு ஆச்சரியப்பட்ட சமீரன், அவரை பற்றி ஆய்வு செய்து இந்த நுாலை எழுதி இருக்கிறார்.
சமீரன் கூறுகிறார், 'ராகவன் பிள்ளை, மலையாள சினிமாவின் சார்லி சாப்ளின் என்று போற்றப்பட்டவர். காலன் குடையும், முறுக்கு மீசையும் உறுத்துப் பார்க்கின்ற உருண்டைக் கண்களுமாக அரங்கத்துக்குள் வரும் போது சாப்ளினுக்கும் அவருக்கும் அதிக வித்தியாசம் இருக்காது.
எதிர்ப்புகளும், துயரங்களும் இருவரின் வாழ்க்கையிலும் அதிகம் இருந்தன. கலைக்காக வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்தவர்கள். நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்தாலும், இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை' என்கிறார்.
பொதுவாக திரைப்பட கலைஞர்கள் பலரின் வாழ்க்கை போராட்டமாகவே இருந்துள்ளது. மூன்றாம் பிறை வெளிச்சத்தில் மெல்ல தொடங்கி, முழு வெளிச்சம் கிடைக்காமல் இருளில் பயணிப்பவர்களே அதிகம். அதன் பிறகு, அவர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகி விடுகிறது.
சுக ஜீவனம் என்பது ஒரு சில கலைஞர்களின் வாழ்க்கையில் மட்டுமே நிகழ்கிறது என்பதை, எழுத்தச்சன் முதுகுளம் ராகவன் பிள்ளையின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இவரது வரலாற்றை, மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சமீரன்.
