ADDED : மார் 22, 2026 02:51 PM

செம்மொழி பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், அக்னி கரகத்தை தலையில் வைத்து கொண்டு, ரங்கராட்டினம் போல் சுற்றிச் சுழன்று துர்காதேவி ஆடிய ஆட்டம், ஆடியன்ஸ் அதிர்ந்தனர். நெருப்போடு விளையாடிய வித்தையை பார்த்து மிரண்டனர்.
துர்காதேவியிடம் பேசினோம்...
எனக்கு சொந்த ஊர் திருவாரூர். அடிப்படையில் நான் ஒரு பரத நாட்டிய கலைஞர். 7 வயதிலிருந்து பரதத்தை கற்றுக்கொண்டேன். வீட்டார் எதிர்ப்பை மீறி, கரகாட்ட கலையை முறையாக கற்றுக்கொண்டேன். இப்போது முழு நேர கரகாட்ட கலைஞராக மாறிவிட்டேன்.
கரகாட்டம் மட்டும் அல்ல ராஜா ராணி ஆட்டம், பெரியகால் ஆட்டம், சிலம்பாட்டம் எல்லாம் தெரியும்.
பாட்டில் மீது நின்று ஆடுவது, தீப்பந்தத்தை தலையில் வைத்து ஆடுவது என, புதுமையான பல ஐட்டங்களையும் சேர்த்து இருக்கிறேன்.
2019 ம் ஆண்டு சீன அதிபர் ஸீ ஜின்பிங் சென்னை வந்திருந்த போது, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து என் கரகாட்டத்தை பார்த்து ரசித்தார். 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் என்னை குறிப்பிட்டு பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. 'உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதும்' பெற்று இருக்கிறேன்,'' என்றார்.
இவருக்கு ஒரே ஒரு வருத்தம். நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் கலைமாமணி விருது கிடைக்கவில்லை என்பதுதான் அது!
