/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சுத்தி சுத்தி வர்றாக... சுவையா ஸ்னாக்ஸ் தர்றாக
/
சுத்தி சுத்தி வர்றாக... சுவையா ஸ்னாக்ஸ் தர்றாக
ADDED : ஆக 09, 2025 11:50 PM

அ ம்பானி போல் ஆக வேண்டும் என்ற கனவு, அனைவருக்கும் அவ்வப்போது எட்டிப்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், கடை, அலுவலக வாடகை, மின்கட்டணம், வேலையாள் சம்பளம்... ஆகியவற்றை நினைத்தால், 'ஆளை விடுங்க சாமி' என்றுதான் ஓடத்தோன்றுகிறது.
'இந்த ஐடியாவை பாருங்க' என்று அருகில் வந்து, பிரேக் போட்டு நிற்கிறார் லாவண்யா. இவர் டூ வீலர் புட் டிரக்கில், சுற்றி சுற்றி வந்து சுடச்சுட பிசினஸ் செய்கிறார்.
''ஒரு டூவீலர் இருந்தால் போதும். தொழிலுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொண்டு, பொருட்களை அழகாக அடுக்கி விற்கலாம். வாடகை, மின்சாரம் ஏதுமில்லை. வண்டிக்கு அதிக மைலேஜ் மட்டும் இருப்பது போல் பார்த்துக் கொண்டால் போதும்,'' என்கிறார் ரேஸ்கோர்ஸ் சாலையில் வலம் வரும் லாவண்யா.
''எம்.பி.ஏ., பேஷன் டிசைனிங் படித்துள்ளேன். தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆர்., பணியில் இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கணவர், குடும்பத்தினர் ஒத்துழைப்பால் இந்த பிசினஸ் சாத்தியமாகியுள்ளது,'' என்கிறார்.
இவர், டூவீலர் புட் டிரக்கில் ஐஸ்கிரீம் விற்கிறார். நவாப்பழம், குல்கந்த், கொய்யா போன்ற புது சுவையில் வைத்துள்ளார். இதில், பழங்களை அரைத்து அதை 'பிரசர்வேடிவ்' இல்லாமல் அப்படியே விற்பதால், அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.
ரேஸ்கோர்ஸ் லாவண்யாவைப் போலவே, சாய்பாபா காலனியில் தனது புட் டிரக்கில் வலம் வருகிறார் சந்தியா.
''தொழில்முனைவோராக வேண்டும் என்றுதான், எம்.எஸ்சி., ஊட்டச்சத்து துறையை தேர்வு செய்து படித்தேன். மருத்துவமனைகளில் இன்டன்ஷிப் மேற்கொள்ளும் போது, ஊட்டச்சத்து உணவு குறைபாடே பல நோய்களுக்கு காரணம் என்பதை அறிந்து, அதில் கால்பதிக்க திட்டமிட்டேன்.
விவசாயிகளிடம் நேரடியாக பெற்று, மஞ்சள் துாள் தயாரிக்கின்றேன். முளைகட்டிய கருப்பு உளுந்து கஞ்சி மாவு, சத்து மாவு, ராகிமாவு, மிளகாய் துாள், மல்லித்துாள், நிலக்கடலை, பச்சைபயறு, திணை போன்ற பல்வேறு சத்து லட்டுகள், சாதத்திற்கு பயன்படும் பொடிகள் தயாரிக்கின்றோம்,'' என்கிறார் இவர்.
அடிப்படையில், இவர் டயட்டீசியன் என்பதால் அதில் என்னென்ன சத்துக்களை சேர்க்க வேண்டும் என ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி கெமிக்கல், நிறமிகள் இன்றி தயாரிப்பதால் அனைவருக்கும் பிடித்துள்ளது.
''இந்த வாகனத்தில், 50-70 கிலோ பொருட்களை வைக்க முடியும். பொருளை அழகாக காட்சிப்படுத்தவும் முடியும். முதலில் வண்டி ஓட்டும் போது, பேலன்ஸ் செய்வது சிரமமாக இருந்தது; தற்போது பழகிவிட்டேன். இ.வி., வாகனம் என்பதால் பெட்ரோல் செலவும் இல்லை,'' என வண்டியை 'ஸ்டார்ட்' செய்கிறார் சந்தியா.
அடுத்த ஸ்பாட்டுக்கு நகர்கிறது பிசினஸ்!