/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பெற்றோர் நினைவாக அரசு பள்ளிக்கு நிலம் தானம்: கல்விக்கு அர்ப்பணித்த குடும்பம்
/
பெற்றோர் நினைவாக அரசு பள்ளிக்கு நிலம் தானம்: கல்விக்கு அர்ப்பணித்த குடும்பம்
பெற்றோர் நினைவாக அரசு பள்ளிக்கு நிலம் தானம்: கல்விக்கு அர்ப்பணித்த குடும்பம்
பெற்றோர் நினைவாக அரசு பள்ளிக்கு நிலம் தானம்: கல்விக்கு அர்ப்பணித்த குடும்பம்
ADDED : ஏப் 21, 2024 12:46 PM

சமீப காலமாக அரசு பள்ளிகளுக்கு நிலத்தை தானமாக வழங்குவது அதிகரித்து வருகிறது. மதுரையை சேர்ந்த பூரணம்மாள் தனது மகள் நினைவாக அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கினார். இதே போன்ற ஒரு சம்பவம் விருதுநகரிலும் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்காக கு.மணிவண்ணன் என்பவர் தனது தந்தை மா.பா.குரு சாமி, தாய் குருதேமொழி நினைவாக 2 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். இவர் திண்டுக்கல் மாவட்டம் ஏ.கே.எம்.ஜி. நகரில் வசித்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். போட்டோ பாலிமர்ஸ், ஆன்டி மைக்ரோபையல், தொற்று தொடர்பாகவும் ஆய்வு கட்டுரை பணிகளில் பணியாற்றி உள்ளார்.
இவர் கூறியதாவது: எனது தந்தை மா.பா.குருசாமி ஒரு எழுத்தாளர். பெண்மை வெல்க, புது புது சிந்தனைகள், புது புது தாழில்கள், அக்கினி குஞ்சுஎனும் கவிதை நாடக தொகுப்பு, வள்ளுவப்பொருளியல், காந்தி பொருளியல், இதழியல் கலை, எப்படி இப்படி என்ற தன் வரலாறு என 150க்கும் மேற்பட்ட புத்தகங் களை எழுதி உள்ளார். 1983ல் இவரது 'நமது சமுதாய சீர்கேடுகள்' புத்தகம் மத்திய அரசு விருதையும், 'அக்கினி குஞ்சு' புத்தகம் தமிழக அரசின்
தமிழ் வளர்ச்சித்துறையின் 2007ம் ஆண்டிற்கான சிறந்த நுால்களில் ஒன்றாகவும், 2010ல் காந்தி பொருளியல் புத்தகம் தமிழக அரசு விருதையும் பெற்றுள்ளன. மேலும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, சிறந்த பள்ளி முதல்வர் விருதையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய நுால்களில் குறள் கதைகள் எனும் நுால் சிறப்பு வாய்ந்தது.
குறிப்பிட்ட முப்பது திருக்குறள்களை எடுத்து வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் எனவள்ளுவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை போல கற்பனையில் எழுதி உள்ளார். என் தந்தைக்கு கல்வி மீது அளப்பரிய பற்று உண்டு. எங்களையும் நன்றாக படிக்க வைத்து முன்னேற்றி உள்ளார். நான் முதுகலை வேதியியல், பி.எச்.டி., படித்து விட்டு பேராசிரியராக பணியாற்றி தற்போது அமெரிக்காவில் வேதியியல் அறிவியலாளராக இருக்கிறேன்.
அரசு பள்ளிக்கு ஒரு உதவி என்று கேட்ட போது மறுக்க முடியாது. 200 மாணவர்கள் படிக்கும் சூழலில் 80 மாணவர்களுக்கு வகுப்பறை கட்டடம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக என்னிடம் நிலம் கேட்டுவந்தனர். அப்பள்ளிக்கு நிலம் வழங்கியதால் அப்பகுதி மாணவர்களின் கல்வி மேம்படும் என்ற நம்பிக்கையிலும், தந்தை, தாயின் கல்வி பணிக்கு நினைவாகவும் வழங்கினேன். என் தந்தைக்கு உறுதுணையாக அவர் கல்வி பணிக்கு ஆதரவாக என் தாய் குருதேமொழியும் இருந்துள்ளார். எனவே 2 ஏக்கர் நிலத்தை சிவகாசி எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்காக, தமிழக கவர்னர் பெயரில் நன் கொடையாக வழங்கினேன் என்றார்.

