/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஒவ்வொரு கதையும் ஒரு விதை! 'ஆச்சரிய கதைசொல்லி' ரம்யா வாசுதேவன்
/
ஒவ்வொரு கதையும் ஒரு விதை! 'ஆச்சரிய கதைசொல்லி' ரம்யா வாசுதேவன்
ஒவ்வொரு கதையும் ஒரு விதை! 'ஆச்சரிய கதைசொல்லி' ரம்யா வாசுதேவன்
ஒவ்வொரு கதையும் ஒரு விதை! 'ஆச்சரிய கதைசொல்லி' ரம்யா வாசுதேவன்
ADDED : மே 03, 2025 10:40 PM

காலையில் எழுந்ததும் இனிமையாக சுப்ரபாதம் கேட்கும் காதுகள், கூடவே பாசிட்டிவ் ஆன தன்னம்பிக்கை தரும் கதைகள் கேட்டால் எப்படி இருக்கும். அதுவும் ரம்யா வாசுதேவனின் ரம்யமான குரலில். ஆம்... கடந்த 7 ஆண்டுகளாக பயனுள்ள கதைகளை களைப்பின்றி தினமும் வாட்ஸ் ஆப் மற்றும் spotify செயலி மூலம் சொல்லி வருகிறார் இந்த இயற்பியல் பட்டதாரி. சென்னை அடையாறில் வசிக்கும் இவர், கதை சொல்லி மட்டுமல்ல. தன்னம்பிக்கை பயிற்சியாளர், எழுத்தாளரும்கூட.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக ரம்யா வாசுதேவன் தான் கதை சொல்லும் கதையை இங்கே சொல்கிறார்...
''எனக்கு வாசிப்பது ரொம்ப பிடிக்கும். நான் படிக்கும் விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வேன். அதன் தொடர்ச்சியாகதான் கதை சொல்ல ஆரம்பித்தேன். 2019 முதல் தினமும் ஒரு கதை என சொல்லி வருகிறேன். இதற்காக தினமும் 4 வித புத்தகங்களை தேர்வு செய்து காலை முதல் இரவு வரை குறிப்பிட்ட நேரங்களில் படித்து குறிப்பு எடுத்துக்கொண்டு, அதை 10 முதல் 20 நிமிட கதையாக தினமும் காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் வாட்ஸ் ஆப், spotify மூலம் சொல்வேன்.
இக்கால எழுத்தாளர்களின் கதைகள் முதற்கொண்டு பாகுபாடின்றி சொல்லி வருகிறேன்.
ஆரம்பத்தில் பொதுவான கதைகளை சொல்லி வந்தேன். பிறகு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தன்னம்பிக்கை சிறுகதைகள், செவ்வாய் ரமண மகரிஷியின் ஆன்மிகம், வியாழன் ராமர் சரித்திரம், சனிக்கிழமை ஆங்கில புத்தகத்தில் படித்தவற்றை தமிழில் சொல்லுதல், ஞாயிறு லலிதா சகஸ்ரநாமம் கருத்துகள் குறித்து சொல்லி வருகிறேன். தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை, விழாக்களின் போது அதுதொடர்பானவற்றை கதையாக சொல்கிறேன். இதற்காகவே சில வாட்ஸ் ஆப் குரூப்களை உருவாக்கி அனுப்பி வருகிறேன்.
2100 கதைகள்
ஆரம்பத்தில் நண்பர்களுக்கு மட்டும் வாய்ஸ் மெசேஜ் ஆக அனுப்பினேன். என் குரலும், சொல்லும் விதமும் நன்றாக இருப்பதாக கூறி 'என்கரேஜ்' செய்தனர். தோழி கிருத்திகா Under the Tree பவுண்டேஷன் என்று வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதன்மூலம் கதை சொல்ல வழிகாட்டினார். இதுவரை 2100க்கும் மேற்பட்ட கதைகள் சொல்லியதால் 'ஆயிரம் கதை சொல்லிய ஆச்சரிய கதை சொல்லி' பட்டமும் கிடைத்தது.
ஏழு ஆண்டுகளில் கதைகள் ஏதும் 'ரீப்பீட்' ஆகாமல் பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்லும் கதை, ஏற்கனவே சொன்ன கதையுடன் ஒத்துபோனால் சுட்டிக்காட்டும் நண்பர்களும் இருக்கின்றனர். ஸ்ரீதர் என்பவர் நான் சொன்ன கதைகளை தேதி வாரியாக சேகரித்து வைத்துள்ளார். சிலர் விமர்சனமும் செய்வதுண்டு. ஆன்மிக கதைகள் சொல்லும் முன் பெரியவர்களிடம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்ற பிறகே சொல்வேன்.
ஒருகட்டத்தில் நான் கதையாக சொல்லியதை புத்தகமாக வெளியிடலாமே எனத் தோன்றியது. இதுவரை லலிதா சகஸ்ரநாமம் விளக்கம் பகுதி 1,2, யோகிராம்சுரத்குமார் சுயசரிதை மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஆல்ட், கன்ட்ரோல் = க்ரியேட் என்ற நுால் எழுதியுள்ளேன். இப்போது பலருக்கு கதை படிக்க நேரம் இருப்பதில்லை. ஆனால் சொன்னால் கேட்கிறார்கள். நான் சொல்லும் கதை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் சென்று சேருகிறது. நான் சொல்லும் கதைகளை சென்னை கன்னிமாரா, அண்ணா நுாற்றாண்டு நுாலகங்களில் ஆடியோவாக கேட்கும் வசதி உள்ளது.
பணம் குறிக்கோள் அல்ல
வாட்ஸ் ஆப் குரூப் மூலம் கதை சொல்ல காரணம், ஒரே இடத்தில் பல கதைகளை கேட்க முடியும். பலருக்கு வழிகாட்ட முடியும். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதை. அது விருட்சமாக பரவி அனைவரிடமும் சென்று சேரும் சக்தி கொண்டது. பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்... கற்றலின் கேட்டல் நன்று என்று. ஆண்டுதோறும் பவுண்டேஷன் சார்பில் நிகழ்ச்சி நடத்தி சிறந்த கதை சொல்வோருக்கும், ஆன்மிக இலக்கியங்களில் சிறந்து விளங்குவோருக்கும் பரிசு வழங்குகிறோம். ஏப். 26ம் தேதிகூட அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம்.
'ஆடியோவாக கதை சொல்வதை யுடியூப் மூலம் சொன்னால் சம்பாதிக்கலாமே' என சிலர் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. அதன் நடுவே விளம்பரம், அறிவிப்பு என வரும்போது கதையின் சுவராஸ்யம் போய்விடும். எனக்கு பணம் குறிக்கோள் அல்ல. சொல்லும் விஷயம் எல்லோரிடமும் போய் சேர வேண்டும்.
எனது முயற்சிக்கு உறுதுணையாக கணவர் வாசுதேவன் இருந்து வருகிறார். அவர் தனியார் நிறுவன அதிகாரி. அவருடன் இணைந்து தன்னம்பிக்கை, ஆளுமை பயிற்சி வகுப்புகளும், கதை சொல்லுதல் போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறேன்'' என்கிறார் இந்த ஆச்சரிய கதை சொல்லி.
இவரது கதைகளை தினமும் கேட்க வாட்ஸ் ஆப் குரூப் எண் 97890 62915
நான் சொல்லும் கதை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் சென்று சேருகிறது.

