தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/பாடலாசிரியர் முத்துக்குமாரின் நினைவு நதியில் நீந்தும் தங்கமீன்கள்

பாடலாசிரியர் முத்துக்குமாரின் நினைவு நதியில் நீந்தும் தங்கமீன்கள்

பாடலாசிரியர் முத்துக்குமாரின் நினைவு நதியில் நீந்தும் தங்கமீன்கள்


UPDATED : நவ 28, 2026 02:56 PM

ADDED : நவ 28, 2026 02:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 02:56 PM ADDED : நவ 28, 2026 02:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘கிராமம் நகரம் மாநகரம்’ என்ற கட்டுரை நுால் குறித்து, பேராசிரியர் பொன் கவுசல்யா தனது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

திரைப்படத்துறையில் பல சிறந்த பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இவரது பல கவிதை தொகுப்புகளை நான் படித்து இருந்தாலும், இந்த கட்டுரை நுாலை வாசிக்கையில் வியப்பாக இருந்தது.

இயற்கையின் பேரழகு மாறாமல் இருந்த பல கிராமங்கள், இன்றைக்கு நகரங்களாக மாறி உள்ளன. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் இன்றைக்கு நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

நாம் வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்தாலும், கிராமத்தில் வாழ்ந்த பசுமையான நினைவுகளை நம்மால் மறக்க முடியாது. கவிஞர் முத்துக்குமார் தனது கிராமத்து நினைவுகளை இந்த நுாலில் பதிவு செய்து இருக்கிறார்.

கிராமம், நகரம், மாநகரம் இந்த மூன்றிலும் நிகழ்ந்துள்ள வாழ்வியல் மாற்றங்களையும், அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகளையும் கவித்துவமான மொழிநடையில் பதிவு செய்திருக்கிறார்.

கிராமத்தின் இயல்பான மண் வாசனையும், பால்ய கால நினைவுகளும் வெளிப்படுகின்றன. கிராமத்துக் குழந்தைகள் ஓட்டி விளையாடும் பனங்காய் வண்டிகள், கிணற்று நீச்சல் உள்ளிட்டவை கிராமத்தின் பால்ய காலத்தை நினைவூட்டுகின்றன.

இன்றைய நகரத்தின் வேகமான மாற்றங்களும், மாநகரத்தின் பரபரப்பும் ஒப்பிடப்பட்டுள்ளது. தங்களின் தாய் கிராமங்களை விட்டு பணி நிமித்தமாக மாநகரத்துக்கு இடம் பெயர்ந்து வாழும் சக மனிதர்களால் இதை உணரமுடிகிறது.

காதல் கூட இடத்துக்கு இடம் மாறுவதையும், ஆற்றங்கரை, கிணற்றடி, திருவிழாக்கள், களையெடுக்கும் இளம் பெண்களின் காதல் என, காதல் அரும்பும் இடங்களை வரிசைப்படுத்தி உள்ளார். நகரத்துக் காதல், பெரும்பாலும் ‘டைப்ரைட்டிங்’ நிலையத்தில் நிகழ்கிறது என்றும், அதில் சில விரல்கள் சேர்கின்றன; சில விரல்கள் பிரிகின்றன எனப் பதிவு செய்து இருக்கிறார்.

சினிமா ஆசையில் காத்திருந்து வாழ்க்கையை தொலைப்பவர்களின் மனக்குமுறலையும், நான்கு மாடுகளையும் விற்று கவிதைத் தொகுப்பு வெளியிட்ட ஒரு கவிஞனின் பரிதாப நிலையையும் சுட்டிக்காட்டி இருப்பது, மனமுருகச் செய்திருக்கிறது.

காலந்தோறும் கிராமத்திலிருந்து நகரத்துக்கு இளைஞர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் கனவுப் பெட்டிகளின் சாவியை கிராமத்தில் தொலைத்து விட்டு, நகரத்தின் வீதிகளில் தேடித்திரிவதைக் நிதர்சனமாக உணர முடிக்கிறது.

மாநகரத்தின் வெற்றிப் பாதையில் தாயின் மரணத்துக்கு கூட செல்ல முடியாமல், திசை மாறிய வாழ்க்கை பதிவுகளும் இந்நுாலில் உள்ளன. நகரத்தில் படித்து, மாநகரத்தில் வசித்து வரும் ஒரு மனிதனின் மனவோட்டங்களை இந்தக் கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

கவிஞர் முத்துக்குமார், எழுத்துகளின் கற்பனைச் சிறகுகளை விரித்து, தன்னை ஒரு தங்க மீனாக்கி, இனிமையான ஆனந்த யாழை மீட்டியிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us