/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
உயரே...உயரே...ஒரு சுழலும் ஓட்டல் தலைநகரில் நவராத்திரியில் களைகட்டுகிறது
/
உயரே...உயரே...ஒரு சுழலும் ஓட்டல் தலைநகரில் நவராத்திரியில் களைகட்டுகிறது
உயரே...உயரே...ஒரு சுழலும் ஓட்டல் தலைநகரில் நவராத்திரியில் களைகட்டுகிறது
உயரே...உயரே...ஒரு சுழலும் ஓட்டல் தலைநகரில் நவராத்திரியில் களைகட்டுகிறது
ADDED : அக் 06, 2024 10:17 PM

நவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடபட்டாலும் வட இந்தியாவிற்கென்று அதில் சிறப்பிடம் உண்டு. தலைநகர் டில்லியில் நவராத்திரி விழா அமர்க்களப்படும். இங்கு தமிழர் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், முனீர்கா, கரோல் பாக், மயூர் விகார் பகுதி அனைத்து கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்கள், இசை நிகழ்ச்சிகள், கொலு என நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விசேஷம் தான்.
இந்த ஆண்டு சில ஐந்து, ஏழு நட்சத்திர ஓட்டல்களிலும் நவராத்திரி விழா களை கட்டுகிறது. அதில் ஒன்று உலகப்பிரசித்தி பெற்ற 'சுழலும் ஓட்டலில்' நடக்கும் விழா.
டில்லி கென்னாட் பிளேஸ் கேஜி மார்க் ரோட்டில் அமைந்துள்ள பரிக்ரமா எனப்படும் ஓட்டலில் 25வது தளத்தில் சுழலும் ஓட்டல் செயல்படுகிறது. நவராத்திரி நாட்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அதிக அளவில் டில்லி வருவதால் தென் இந்திய உணவு வகைகள், நவராத்திரி பலகார வகைகளை சுடச்சுட தயாரித்து வழங்கி வருகின்றனர்.
நவராத்திரி நேரத்தில் மட்டுமல்ல, எப்போதும் இந்த சுழலும் உணவகத்தில் அமர்ந்து உணவு உண்டு பொழுதை போக்குவது அலாதி இன்பம் தரக்கூடியது. 150 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த ஓட்டலுக்குள் நுழைய கட்டணம் இல்லை. உணவுக்கு தான் கட்டணம். காபி அருந்திக்கொண்டே கூட டில்லியின் பிரம்மாண்டத்தை ரசிக்கலாம்.
நாம் இருக்கையில் அமரும் போது பார்க்கும் வெளிப்புற காட்சி, உணவருந்திவிட்டு புறப்படும் போது வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விடுகிறது. அமரும் போது இந்தியாகேட் பகுதியின் பார்வையில் அமர்ந்தால் சில நிமிடங்களில் நமது இருக்கை சுற்றுவதால் செங்கோட்டை பகுதியை காணமுடியும். உணவகம் சுழல்வதை உணர முடியாது.
டில்லியின் முழுமையான காட்சியை மின் ஒளி வெள்ளத்தில் காண முடிகிறது. செங்கோட்டை, ஜூம்மா மசூதி, யமுனா நதி, பிரகதி மைதான் உட்பட டில்லியில் பிரசித்தி பெற்ற 15 இடங்களை 'கழுகுப் பார்வையில்' பார்க்க முடியும். இனி டில்லி செல்லும் போது இந்த சுழலும் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டு, தலைநகரின் அற்புதங்கள் அனைத்தையும் உயரத்தில் ஒரே இடத்தில் இருந்து கொண்டே பார்த்து வாருங்கள்!