
தமிழகத்தில் பழநி போன்ற சில ஊர்களில் மட்டுமே இன்னும் குதிரை வண்டி சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மாட்டு வண்டி பந்தயங்கள் அதிகளவில் நடைபெறும் நிலையில் சில ஊர்களில் குதிரை வண்டி பந்தயமும் நடப்பது குதிரை வளர்ப்பவர்களுக்கு ஆறுதலாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செய்யாலுார் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து 75வது வயதிலும் குதிரை வண்டியிலேயே சவாரி செய்து இப்பகுதி மக்களால் 'குதிரை வண்டி தாத்தா,' என செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இவர் கூறியதாவது:
எனக்கு சிறுவயதில் இருந்தே  குதிரை வண்டி பூட்டி, ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது தீராத ஆசை. பணவசதி இல்லாத நிலையில் சிறிது, சிறிதாக பணத்தைச் சேர்த்து  20வது வயதில் ஒரு குதிரையை வாங்கி அதனை வண்டியில் பூட்டினேன்.  முதன்முதலாக அதில் சவாரி சென்றபோது எல்லை இல்லா ஆனந்தம் ஏற்பட்டது. அந்த ஆனந்தம் இன்று 75 வயது வரை தொடர்கிறது. தற்போது எங்கு சென்றாலும் இந்த குதிரை வண்டியில் தான் பயணம் செய்கிறேன். இதுவரை 10க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்துள்ளேன்.
என்னைப் போன்று குதிரை வளர்ப்பிலும் குதிரை வண்டி பயணத்திலும்  ஆர்வம் உள்ளவர்கள் குதிரையை கேட்டால், அவர்களுக்கு விற்று விட்டு வேறு குதிரையை வாங்கி விடுவேன். தற்போது எனக்கு வயதாகி விட்டதால் எனது குடும்பத்தினர் குதிரை வண்டிபயணத்தை தவிர்க்குமாறு  கூறி வருகின்றனர். இருந்தாலும் எனக்கு குதிரை வண்டியில் பயணம் செய்வது தான் விருப்பம். மானாமதுரை  பகுதிகளில் எனது குதிரை வண்டியை பார்த்து விட்டால், இதோ குதிரை வண்டி தாத்தா வந்துவிட்டார் என வாஞ்சையோடு மக்கள் அழைப்பதை பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது என்றார்.
இவரை வாழ்த்த 74180 46395

