ADDED : செப் 27, 2025 11:51 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் நடிகர் சிவகுமார் எழுதிய 'கொங்கு தேன்' என்ற நுால் குறித்து, எழுத்தாளர் சு.வேணுகோபால் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் சிவகுமார் எழுதிய, 'கொங்கு தேன்' என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அவர் ஏற்கனவே 'ராஜபாட்டை அல்ல' என்ற தலைப்பில், தனது கல்லுாரி காலத்தில் துவங்கி, திரையுலக வாழ்க்கை வரையான அனுபவங்களை எழுதி இருக்கிறார்.
'கொங்கு தேன்' என்ற இந்த நுாலில், சிவகுமார் மூன்று வயது முதல் 16 வயது வரை பள்ளிச் சிறுவனாக, கோவை சூலுார் பகுதியில் உள்ள காசிக்கவுண்டன் புதுார் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த வாழ்க்கையை, எதார்த்தமாக பதிவு செய்து இருக்கிறார்.
திரைப்படத்துறையில் புகழ் பெற்றவர்கள் பலர் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதும் போது, தங்களின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த கஷ்ட காலத்தை, கசப்பான சம்பவங்களை மறைத்து எழுதுவதை, வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் நடிகர் சிவகுமார், சொந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த காலத்தை மிக எதார்த்தமாக, ஒளிவு மறைவு இல்லாமல், கொங்கு பகுதியின் ஈர மண் வாசனையோடு பதிவு செய்து இருக்கிறார்.
இந்திய சுதந்திரத்துக்கு முன் கோவை பகுதி கிராமங்களில் வெள்ளாமை, விளைச்சலுக்காக மண்ணோடு மல்லுக்கட்டும் வெள்ளந்தியான மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை, பதிவு செய்து இருக்கிறார்.
கத்தாழை தண்டை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது, ஏழு வயதில் தன் நண்பர்களுடன் விளையாட சென்ற போது, பிள்ளையார் கோயிலுக்குள் சாமி கும்பிட போய், கோயில் கதவு தானாக மூடிக்கொண்டதால், உள்ளே சிக்கிக் கொண்டு ஒரு நாள் பகல் முழுவதும் அழுது தவித்தது, தாத்தவுடன் வில்லு வண்டியில் செல்லும் போது, ரோட்டில் வந்த லாரியை பார்த்து மாடு மிரண்டு சூலுார் குளத்துக்கு விழுந்தது, பிளேக் நோயால் தன் அண்ணன் இறந்த போது, தன் தாய்மாமன் தனி ஆளாக துாக்கி சென்று அடக்கம் செய்தது, எட்டு வயதில் குழந்தை திருமணம் செய்து கொடுக்கப்பட்ட தன் பெரியம்மா, சிறு வயதிலேயே கணவனை இழந்து, 85 வயது வரை வெள்ளை சேலை கட்டி, விதவையாக வாழ்ந்தது... என, பல சம்பவங்களை கண்களில் நீர் கசிய எழுதி இருக்கிறார்.
கோவையில் வாழும் ஜனங்களின் இயல்பான வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், இனப்பற்று, அவர்கள் உறவினர்களிடம் காட்டும் களங்கமற்ற அன்பு, அரவணைப்பு என, அனைத்தையும் கொங்கு பகுதிக்கே உரிய, மொழியில் எழுதி இருக்கிறார்.
சிவக்குமார் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தாய் மாமன் உதவியுடன் சென்னை ஓவியக் கல்லுாரியில் சேரும் வரை உள்ள, பால்ய கால வாழ்க்கை நிகழ்வுகள் அத்தனையும் இந்த நுாலில் இடம் பெற்றுள்ளன.
வாழ்க்கையில் வெற்றி பெற்று, புகழின் உச்சத்துக்கு சென்றவர்கள், தங்கள் கடந்த வந்த பாதையை திரும்பி பார்ப்பது அரிது. நடிகர் சிவகுமார் விதிவிலக்காக உள்ளார். சிவகுமார் என்ற ஒரு மகா கலைஞனின் பள்ளிப்பருவத்து நினைவுகளை அறிந்து கொள்ள, வாசகர்கள் இந்த நுாலை வாசிக்கலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற்று, புகழின் உச்சத்துக்கு சென்றவர்கள், தங்கள் கடந்த வந்த பாதையை திரும்பி பார்ப்பது அரிது. நடிகர் சிவகுமார் விதிவிலக்காக உள்ளார். சிவகுமார் என்ற ஒரு மகா கலைஞனின் பள்ளிப்பருவத்து நினைவுகளை அறிந்து கொள்ள, வாசகர்கள் இந்த நுாலை வாசிக்கலாம்.