/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பாடமும் நடத்துவேன்... பாட்டும் பாடுவேன்: இனிய குரலுக்கு இந்திரா விஜயலட்சுமி
/
பாடமும் நடத்துவேன்... பாட்டும் பாடுவேன்: இனிய குரலுக்கு இந்திரா விஜயலட்சுமி
பாடமும் நடத்துவேன்... பாட்டும் பாடுவேன்: இனிய குரலுக்கு இந்திரா விஜயலட்சுமி
பாடமும் நடத்துவேன்... பாட்டும் பாடுவேன்: இனிய குரலுக்கு இந்திரா விஜயலட்சுமி
ADDED : அக் 20, 2024 12:35 PM

கண்டிப்பான ஆசிரியர், இனிமையான இசைக்கலைஞர், கவிதை பாடும் கவிஞர், இனிய குரலில் ஆனால் அனல் தெறிக்க பேசும் பேச்சாளர், மேடையை சுவராஸ்யமாக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 'அ... ஆ...' சொல்லித்தரும் ஆன்லைன் பயிற்றுநர் என அசத்தும் 'அஷ்டாவதானியாக' வலம் வருகிறார் இந்திரா விஜயலட்சுமி.
மதுரை குயின் மீரா பள்ளியின் தமிழ்த்துறை தலைவராக, இசை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். பள்ளி நேரம் போக காலை, மாலையில் ஓய்வே இல்லாமல் சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். 'இதற்கு பள்ளி நிர்வாகம் தரும் ஆதரவும், என் கணவர் செல்வகுமார் மற்றும் குடும்பத்தினரும் தரும் ஆதரவுமே காரணம்' என்கிறார் இந்திரா விஜயலட்சுமி.
'உங்கள் முழுப் பெயரே இதுதானா' என கேட்க ஆரம்பித்தோம். '' காலம் காலமாக பெண்கள் தன் பெயருக்கு பின்னால் அப்பா பெயரையும், கணவர் பெயரையும் சேர்த்துக்கொள்ளும்போது நான் ஏன் என் அம்மா பெயரை சேர்க்கக்கூடாது என அவர் பெயரை சேர்த்துக்கொண்டேன்' என பெயரின் ரகசியத்தை கூறினார்.
தொடர்ந்து பேசுகிறார்...
''நான் ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரத்தைச் சேர்ந்தவள். பள்ளியில் அறிவியல் மாணவியான எனக்கு இயல்பாகவே தமிழ் மீது ஆர்வம் இருந்தது. வீட்டிற்கு எதிரே நுாலகத்தில் வரலாற்று புதினங்கள், இலக்கியங்கள் படித்தேன். பள்ளியில் படிக்கும்போதே கவிததைகள் எழுத ஆரம்பித்தேன். நுாலகத்துறை நடத்திய கட்டுரைப்போட்டியில் நான் எழுதிய 'என்னை செதுக்கிய நுால்கள்' மாவட்ட அளவில் பரிசு பெற்றது. அது என்னை மேலும் எழுத ஊக்குவித்தது.
பிறகு பாடல்கள் குறித்து விமர்சனம் செய்து எழுதினேன். கவிஞர் வைரமுத்துவின் ஒரு பாடலை விமர்சனம் செய்ததை படித்து அவர் அழைத்து பாராட்டியது எனது இலக்கிய பயணத்திற்கு உத்வேகத்தை அளித்தது. நான் எம்.ஏ., தமிழ் படிப்போடு கர்நாடக இசையும், இசைக்கருவிகளையும் மீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒருமுறை நான் பாடியதை கேட்ட பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பட்டிமன்றத்திற்கு பேச அழைத்தார். 'எனக்கு பாட தெரியும். பேச தெரியாதே' என்றேன். எப்படி பேசவேண்டும் என கற்றுக்கொடுத்தார். இரண்டாண்டுகளுக்கு முன் மதுரை விவசாய கல்லுாரியில் முதன்முறையாக பட்டிமன்றம் பேசினேன்.
பட்டிமன்றத்தில் அமங்கலமான வார்த்தைகள் பேச மாட்டேன். கண்ணியக்குறைவாக விமர்சிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இது ஞானசம்பந்தன் சொல்லிக்கொடுத்த பாடம்.
சங்க இலக்கிய காலம் முதலே பட்டிமன்றம் இருப்பதால் இன்றும் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சிலப்பதிகாரத்தில்கூட பட்டிமன்றம் என்ற பெயர் இருக்கிறது. அவ்வளவு ஏன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என சிவபெருமானிடம் நக்கீரன் விவாதம் செய்ததும் ஒருவகையில் பட்டிமன்றம்தானே.
பட்டிமன்றத்தில் பேசுவதோடு இலக்கியம், சினிமா பாடல்களை தலைப்பிற்கேற்ப பாடுவது எனது பிளஸ். இந்த 'பிஸி'யிலும் சில கருத்துகளை மையமாக வைத்து எழுத ஆரம்பித்துள்ளேன். விரைவில் நுாலாக அது வெளிவரும்'' என இனிமைக்குரலில் பேசுகிறார் இந்திரா விஜயலட்சுமி.
இவரை வாழ்த்த 88255 98353