/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பாடுவோர் பாடினால் பாடத்தோன்றும்...
/
பாடுவோர் பாடினால் பாடத்தோன்றும்...
ADDED : பிப் 04, 2024 02:05 PM

கலைகளில் ஓவியம்... கண்ணுக்கு விருந்தளிக்கும். இசையோ... மனதுக்கு மருந்தளிக்கும். இசையை கருவியாலோ, குரலாலோ வெளிப்படுத்தினால் அவர்களை மட்டுமின்றி, கேட்போரை தாளமும் போட வைக்கும். தாளத்திற்கேற்ப உடலையே ஆட்டுவிக்கும்.
ஒவ்வொருவர் மனதிலும் இசை உணர்வு பிறவியிலேயே உருவாகி உறங்கிக் கிடக்கும். பொதுவில் பாட தயக்கமில்லாதவர்கள் இசைக்கலைஞர்களாக பரிணமிக்கின்றனர். தயங்குபவர்கள் படுக்கையறை, பாத்ரூமில் பாடி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர். இந்த இசைக்கலைஞர்களுக்கென தளம் அமைத்துக் கொடுத்துள்ளது 'ஸ்மல்' செயலி.இதில் ஏராளமான சினிமா பாடல்களுக்கான பின்னணி இசை பரவிக் கிடக்கிறது. அதில் விரும்பும் பாடலில் தாங்கள் விரும்பும் வரிகளை பாடி பதிவு செய்து கொள்கின்றனர். அது முழுஇசைப்பாடலாக அந்த செயலியில் இணைந்திருப்போர் கவனத்தை பெறுகிறது. இப்படி பிரபலமானோர் பலர் உள்ளனர்.
இத்தகைய கூட்டத்தினர் சமீபத்தில் மதுரை ஓட்டல் ராயல் கோர்ட்டில் ஒன்று கூடி காலை முதல் மாலை வரை இசைமழை பொழிந்து தங்களுக்கு தாங்களே நனைந்து கொண்டனர். எம்.எஸ்.கே., இசைக்குழுவின் பின்னணியில் சிறுமிகள் முதல் முதியோர் வரை, சாதாரண தொழிலாளர் முதல் உயர் பதவியில், தொழிலில் உள்ளோர் வரை தங்கள் இசையை அமுதாக பிசைந்து அடுத்தவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
இர்பான் என்ற சிறுமி பாடிய மகாநதி படப்பாடல் 'ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி...' அனைவரையும் பரவசப்படுத்தி, கைதட்ட வைத்தது. இந்த அமைப்புக்கு மதுரையை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் எம்.எஸ்.கே., குழுவின் லட்சுமி நாராயணன், சாந்திகண்ணன், ஸ்ரீராமுலு ஆகியோருக்கு, ஜோசப், பார்த்திபன், அருண், முருகன் ஒத்துழைக்கின்றனர். இதில் சாந்தி கண்ணன் குரலுக்கு மட்டும் 25 ஆயிரம் 'பாலோயர்'கள் உள்ளனராம்.
அவர் கூறுகையில், ''மனது லேசான போது பாட வேண்டும் என்று தோணும். அப்போது இடம், காலம் பற்றி கவலையின்றி முணுமுணுப்போம். இப்போது செயலி வந்துவிட்டதால் திறமையை மெருகேற்ற தளம் கிடைத்த சந்தோஷத்தில் அடிக்கடி பாடுகிறோம். எனது ஒரு பாடலுக்கு 300 பேர் வரை இணைந்து பாடி வைப்பர். இவ்வகையில் எனது பாடலை 5 ஆண்டுகளில் 95 ஆயிரம் முறை பாடியுள்ளனர்'' என்றார். இவர்களுக்கு திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் செல்லமுத்து ஊக்கம் தருகிறார். பல நகரங்களில் 23 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
மதுரை நிகழ்வின்போது ஓட்டலுக்கு வந்த நடிகை தேவயானி இவர்களின் இசை மழையில் நனைந்தார். அவரிடம் நாங்கள் பிரபலமாகாத பாத்ரூம் பாடகர்கள் எனக்கூற, அவரோ 'அப்படி கூறாதீங்க... நீங்களும் நல்ல பாடகர்கள்தான் என புகழாரம் சூட்டியதை மகிழ்ச்சியுடன் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு சினிமா பின்னணி பாடகர் முகேஷ், பாடல் பிரபலங்கள் சுர்முகி, ஸ்ரீநிதி, மாலதி போன்றோருடன் பாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக பெருமைப்படுகின்றனர்.