/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'இன்ஸ்டா' இங்கிலீஷ் டீச்சர் நந்தினி
/
'இன்ஸ்டா' இங்கிலீஷ் டீச்சர் நந்தினி
ADDED : ஏப் 27, 2025 04:43 AM

தனக்கு கிடைத்த ஆங்கில மொழி அறிவை அனைவரும் பெற வேண்டுமென 'இன்ஸ்டா' இங்கிலீஷ் டீச்சராக வலம் வருகிறார் சென்னையை சேர்ந்த நந்தினி நரசிம்மன்.
எம்.பி.ஏ., பட்டதாரியான  இவர் தனியார் நிறுவன முக்கிய பொறுப்பில் பணியாற்றினாலும், கிடைக்கும் நேரத்தில் இன்ஸ்டாகிராம், யுடியூப் வாயிலாக ஆங்கில மொழியை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோக்களாக பதிவிடுகிறார். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர், ஒருவரிடம் பேச, என்ன வார்த்தை பயன்படுத்த வேண்டும் என எளிமையாக கற்றுக் கொடுக்கிறார்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு சென்று கற்றுக்கொள்வதை விட இவரின் வீடியோக்கள் வாயிலாக கற்றுக்கொள்ள லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர்.
ஆங்கில இலக்கணம், பேச்சு வழக்கில் எப்படி வார்த்தை பயன்படுத்துவது, பணி நேர்காணலுக்கு செல்லும்போது எப்படி பேச வேண்டும், ஆங்கிலத்தில் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்களை வீடியோவாக பதிவிடுவதோடு சந்தேகங்களுக்கும் நேரலையில் பதிலளிக்கிறார்.
'ஆங்கிலம் மொழிதானே தவிர அறிவு அல்ல என புரிந்துகொண்டால் எளிமைதான்' என்கிறார் நந்தினி.
அவர் மேலும் கூறியதாவது: எங்களது நடுத்தர குடும்பம். தனக்கு கிடைக்காத கல்வி தன் குழந்தைகளுக்கு கிடைக்க நினைத்து  கான்வன்ட் பள்ளியில் அப்பா என்னை சேர்த்தார். இந்த பெண் எல்லாம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுமா என பலரும் விமர்சித்தனர். சிறுவயதிலிருந்தே அந்த தாக்கம் ஆழமாக படிந்து விட்டது. என் திறமையை கண்டறிந்து நம்மால் முடியும் என நினைத்து படித்து எம்.பி.ஏ., வரை வந்து விட்டேன். எம்.பி.ஏ., கோல்டு மெடல் பெற்றேன்.
யாருடைய உதவியின்றி சுயமாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி டிக் ஷனரி, ஆங்கில டிவி சேனல் பார்த்து ஒவ்வொரு வார்த்தையையும் கற்றுக் கொண்டேன். அன்று என்னை ஊக்கப்படுத்த யாரும் இல்லை என்பதற்காக நாம் அப்படி இருக்க கூடாது; பிறருக்கு கற்றுத்தரவேண்டும். சமூக வலைதளங்கள் வாயிலாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலம் கற்றுகொடுக்க முயற்சிக்கிறேன். எவ்வளவு பணிகள் இருந்தாலும் கற்றுக்கொடுக்கும் பணியை தொடர்வேன் என்றார்.

